முச்சந்தி

ஹிஸ்புல்லா-இஸ்ரேல் போர் நிறுத்தம்!… காசாவில் ஹமாஸுடன் போர் தொடருமா ?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்களை காசாவில் நிறுத்தினால் போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸும் தயார் என தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது.
போர் தொடங்கி சமீபத்தில் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பாஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை இஸ்ரேல் கொன்று குவித்திருந்தது. அதாவது சுமார் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் இப்போரில் கொல்லப்பட்டனர்.
பின்னர் காசா போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களம் இறங்கியது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்த லெபனான் மீதும் போரை இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் இந்த போர் தற்போது நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் வெளியாகி உள்ளது.
அமெரிக்க மத்தியஸ்தத்துவம்:
அமெரிக்காவின் புதிய தலைமையை ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகிகளின் மத்தியஸ்தத்துடன் நவம்பர் 27 இல் எட்டப்பட்ட இந்த போர் நிறுத்த உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய துருப்புகள் தெற்கு லெபனானில் இருந்து அறுபது நாட்களுக்குள் படிப்படியாக வாபஸ் பெறவுள்ளன.
அதேநேரம் 2006 இஸ்ரேல்–ஹிஸ்புல்லா இடையிலான போர் முடிவில் நிறுவப்பட்ட எல்லை ஒன்றான லிடானி நதியின் தெற்கு பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் அவர்களின் ஆயுதங்கள் வாபஸ் பெறப்பட வேண்டும். அவர்களுக்கு பதில் அங்கு லெபனான் அரச படை நிலைநிறுத்தப்படவுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நவம்பர் 27 முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு தயாராக இருப்பதாக அங்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் பணயக்கைதிகளின் பரிமாற்றத்திற்கான உடன்படிக்கை ஒன்றுக்கு தயாராக இருப்பதாக மத்தியஸ்தர்களான எகிப்து, கட்டார் மற்றும் துருக்கியிடம் நாம் அறிவித்துள்ளோம். எவ்வாறாயும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் இஸ்ரேல் இடையூறாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த பல மாதங்களாக உக்கிர மோதல்கள் இடம்பெற்று வந்த நிலையில் ஹிஸ்புல்லா–இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டு சில மணி நேரத்தின் பின்னரே ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியுட்டுள்ளது.
ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர் நிறுத்தம்:
ஹிஸ்புல்லா இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை கடைசியில் அமைதி உடன்படிக்கை ஒன்றுக்கு இட்டுச் செல்வதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அறுபது நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஆதரவாக 10–1 என வாக்களித்த நிலையிலேயே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். எனினும் இஸ்ரேலின் தாக்குதல்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ஆயினும் போர் நிறுத்தம் ஆரம்பிக்கும் கடைசி தருணம் வரை இரு தரப்பினதும் தாக்குதல்கள் நீடித்தன. போர் நிறுத்தத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் பெய்ரூட்டின் சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன் சரமாரி தாக்குதல்களை நடத்தியது. போர் நிறுத்தப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியது.
தெற்கு லெபனான் மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதற்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படை போர் நிறுத்தத்தை ஆரம்பிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது. எவ்வாறாயினும் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட விரைவிலேயே வெளியேற்றப்பட்ட தெற்கு லெபனான் குடிமக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
லெபனானில் தாக்குதல்கள்:
கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே பரஸ்பரம் மோதல்கள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த செப்டெம்பரில் லெபனான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல், அங்கு தரைப் படையையும் அனுப்பியது.
இந்தப் போர் லெபனானில் கடந்த பல தசாப்தங்களில் அதிக உயிரிழப்பு கொண்டதாக இருந்ததோடு நாலாயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
தற்போது அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்ட இந்த போர் நிறுத்த உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய துருப்புகள் தெற்கு லெபனானில் இருந்து படிப்படியாக வாபஸ் பெறவுள்ளன.
அதேநேரம் 2006 இஸ்ரேல்–ஹிஸ்புல்லா இடையிலான போர் முடிவில் நிறுவப்பட்ட எல்லை ஒன்றான லிடானி நதியின் தெற்கு பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் அவர்களின் ஆயுதங்கள் வாபஸ் பெறப்பட வேண்டும். அவர்களுக்கு பதில் அங்கு லெபனான் அரச படை நிலைநிறுத்தப்படவுள்ளது.
லெபனான் அரசு வரவேற்பு:
நீடித்த அமைதியை மீட்டெடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும் என்பதோடு இரு நாடுகளிலும் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்ப அனுமதிக்கும் என்று இந்த போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் வகித்த அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த போர் நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி, நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது மற்றும் குடிமக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதை அனுமதிப்பதற்கு இது அடிப்படையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த உடன்படிக்கையை முழுமையாக கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலை வலியுறுத்திய அவர் தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும்படியும் ஐ.நா. தீர்மானத்தை மதிக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு கடும் எச்சரிக்கை:
அதேவேளை இந்த உடன்படிக்கையின் எந்த ஒரு பகுதியையும் ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேல் தயங்காது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஆயினும் இந்தப் போரினால் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு அதன் இராணுவ மற்றும் ஆயுதக் கட்டமைப்பை பலவீனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் போர் நிறுத்தம் காசா மீது இஸ்ரேலுக்கு அதிக அவதானம் செலுத்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஒக்டோபர் 7 இல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிப்பதாக இஸ்ரேல் சூளுரைத்து வருகிறது.
எவ்வாறாயினும் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் சராமாரித் தாக்குதல்களை நடத்தியபோதும் அது பாலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சந்தித்து வருகிறது.
காசாவில் பதினான்கு மாதங்களை நெருங்கி இருக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 45000 மேல் பொதுமக்கள் கொல்லப்பட்டு 110000 மேலாக பாலஸ்தீன மக்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.