பங்களாதேசில் இந்து அமைப்புகளின் தலைவர் கைது- இந்துக்கள் கொந்தளிப்பு
பங்களாதேசில்இஸ்கான் பொதுச் செயலாளர் சின்மய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டது, அங்கு இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்தியா, சின்மய் கிருஷ்ணதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
பங்களாதேசில்இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இது பெரும் கலவரமாக வெடித்தது. இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அந்த நாட்டில் தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமுதல் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த நாடு முழுவதும் 69 இந்து கோயில்கள் சூறையாடப்பட்டு, சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளன. இந்துக்கள் மீது 2,010-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,700-க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 157 குடும்பங்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு உள்ளன.
இஸ்கான் பொதுச்செயலாளர் கைது: வங்கதேசத்தின் மக்கள் தொகை சுமார் 17 கோடி ஆகும். இதில் சுமார் 15 கோடி பேர் முஸ்லிம்கள் ஆவர். சுமார் 1.3 கோடி இந்துக்களும், 10 லட்சம் புத்த மதத்தினரும், சுமார் 5 லட்சம் கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்துக்கள் மட்டுமன்றி புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் மீதும் கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை கண்டித்து வங்கதேச இஸ்கான் அமைப்பின் பொதுச்செயலாளர் சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மாச்சாரி தலைமையில் வங்கதேசம் முழுவதும் அமைதி வழியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற இந்துக்கள் மீது ராணுவம் மற்றும் போலீஸார் மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்தச் சூழலில் வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சின்மய் கிருஷ்ணதாஸ் பிரம்மாச்சாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சின்மயி கிருஷ்ணதாஸ் பிரச்மாச்சாரியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
அவரை விடுதலை செய்யக் கோரி சிட்டகாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு பெருந்திரளான இந்துக்கள் திரண்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர் அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சின்மய் கிருஷ்ணதாஸை விடுதலை செய்யக் கோரி வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.