தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சிக்கு பலமான மக்கள் ஆணை
புதிய அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கியிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அந்த வாக்குறுதிகளுக்காகத்தான் மக்கள் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு மிகப்பெரியதொரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். ஆகவே,புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கட்டாயம் என தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்தார்.
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில்,நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கியிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.அந்த வாக்குறுதிகளுக்காகத்தான் மக்கள் ஜனாதிபதி தேர்தலிலும்பாராளுமன்றத் தேர்தலிலும் மிகப்பெரியதொரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். ஆகவே,புதிய அரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கட்டாயம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டுமென்பது தேசிய மக்கள் சக்தியினது அடிப்படை குறிக்கோள் . அதேபோல்,புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும், குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை நல்லாட்சி அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்டிருந்த வரைபை பூர்த்தியாக்குவோம் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது.இதேபோல் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள்.ஆகவே அந்த வாக்குறுதிகளை துரிதமாக புதிய அரசாங்கம் நிறைவேற்றும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.இவற்றை செய்வதற்கு எங்களுடைய கட்சியின் ஒத்துழைப்பு அவர்களுக்கு இருக்கும்.
இந்த தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட்டு பலமான மக்கள் ஆணையை பெற்றிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிட்ட போது தமிழரசு கட்சிக்கு ஆறு ஆசனங்கள் கிடைத்திருந்த நிலையில்,இம்முறை தனித்து போட்டியிட்டு 8 ஆசனங்களை தமிழரசு கட்சி பெற்றிருக்கிறது.
இம்முறை தேர்தலில், இணைந்த வட-கிழக்கு தமிழர்களுடைய தாயகம்.அதில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரித்து உண்டு.அதில் தமிழர்கள் ஒரு தேசமாக வாழ்ந்து வருகிறோம் என்பதை உறுதி செய்வதற்காக வடக்கு-கிழக்கில் இருக்கின்ற சகல தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் ஒரு கட்சி பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், அது இலங்கை தமிழரசு கட்சியை தவிர வேறு எந்தவொரு கட்சிக்கும் அந்த ஆற்றல் இல்லை என்பதை தேர்தல் பரப்புரை காலத்தில் நாங்கள் மக்களுக்கு தெளிவாக எடுத்து கூறியிருந்தோம். அந்த அடிப்படையில் இன்று (நேற்று)வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளிலிருந்து அதனை மக்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.எனவே இந்த ஆணையை வழங்கிய வடக்கு-கிழக்கு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.