வரலாற்றில் முதற்தடவையாக இரத்தினபுரிக்கு கிடைத்திருக்கும் தமிழ் பிரதிநிதித்துவம்
வரலாற்றில் முதல் தடவையாக இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து சிறுபான்மை மக்கள் சார்பாக சுந்தரலிங்கம் பிரதீப் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கிறார்.
காலம் காலமாக இரத்தினபுரி மாவட்ட சிறுபான்மை மக்கள் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்து வந்த நிலையில்,இம்முறை சிறுபான்மை மக்களின் கனவு நனவாகி உள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுந்தரலிங்கம் பிரதீப், 112711 விருப்பு வாக்குகளை பெற்று இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து சுந்தரலிங்கம் பிரதீப் கருத்து தெரிவிக்கையில்,
‘எனக்கு கிடைத்த வெற்றியானது இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த வெற்றியானது வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
காலம் காலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து வந்த இரத்தினபுரி மாவட்ட சிறுபான்மை மக்களின் கனவை நனவாக்கிய அந்த பெருமை எனக்கு வாக்களித்த மக்களையே சாரும்.எனக்கு வாக்களித்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.இரத்தினபுரி மாவட்டத்தில் எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்காக எனது கதவு எந்த நேரத்திலும் திறந்திருக்கும். இம்மாவட்ட மக்களுக்கு குரல் கொடுக்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். மக்களின் ஆணைக்கு நான் மதிப்பளித்து செயல்படுவேன்.
தேர்தல் காலத்தில் இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு நான் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். தேர்தலுக்கு பின் பாராளுமன்றம் முழுமையாக சிரமதானம் செய்யப்படும் என்று எமது கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தது எமது மக்கள் அனைவருக்கும் தெரியும்.அவர் கூறியதுபோன்று மக்களின் முழுமையான ஆதரவுடன் பாராளுமன்றம் சிறப்பாக சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கென முழுமையாக உழைத்த எமது நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார்.