தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றம் வரமாட்டேன்
மக்கள் தெரிவின் ஊடாக தெரிவு செய்யப்படாவிட்டால் நான் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றம் வரமாட்டேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன் என மீண்டும் தனது முடிவை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில்,நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு மீண்டும் உறுதிப்படுத்திய அவர் மேலும் கூறுகையில்,
14 வருடங்களாக பாராளுமன்றத்தில் சேவை செய்த நான் இம்முறை மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. மக்களுடைய இந்த தெரிவை நான் மதிக்கிறேன்.அதேபோல்,தமிழரசுக் கட்சிக்கு கிடைத்திருக்கின்ற தேசிய பட்டியல் தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூடி தீர்மானம் எடுக்கும். மக்கள் தெரிவின் ஊடாக தெரிவு செய்யப்படாவிட்டால் நான் தேசியப்பட்டியலூடாக வரமாட்டேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.ஆகவே தமிழரசு கட்சியின் மத்திய குழு கூடி ஒரு தீர்மானத்தை எடுப்பார்கள்.அதுவே இறுதித் தீர்மானம் என்றார்.