வன்னி மாவட்டத்தில் இம்முறை ஒரு லட்சம் பேர் வாக்களிக்கவில்லை; 15,254 வாக்குகள் நிராகரிப்பு!
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வாக்களிக்காததுடன் 15,254 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட தேசியமக்கள் சக்தி 39,894 வாக்குகளைப் பெற்று போனஸ் ஆசனம் உட்பட இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள்சக்தி 32,232 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், இலங்கை தமிழரசுக்கட்சி 29,711 வாக்குளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 21,102 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
ஏனைய கட்சிகளான ஜனநாயக தேசியக்கூட்டணி 9,943 வாக்குளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7,492 வாக்குகளையும், கோடாரி சின்னத்தில் இலக்கம் 7 இல் போட்டியிட்ட சுயேச்சைக் குழு 7,484 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 6,570 வாக்குகளையும், கரும்பலகை சின்னத்தில் போட்டியிட்ட 23 ஆம் இலக்க சுயேச்சைக் குழு 3,683 வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 1,732 வாக்குகளையும் பெற்றுள்ளன.
இதேவேளை வன்னியில் 3,06,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில்2,11,140(68.98%) வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 195886 வாக்குகள் செல்லுபடியானதுடன் 15254(7.22%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை வன்னிமாவட்டத்தில் பலவருடங்களுக்கு பின்னர் தமிழ்த்தேசிய கட்சிகளை பின்தள்ளி ஆட்சியில் உள்ள ஒரு கட்சி அதிக ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிபெற்றுள்ளது.
இதேவேளை கடந்த தேர்தலில் குறைந்த வாக்ககுகளை பெற்று பாராளுமன்றுக்கு தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தோல்வியை தழுவியதுடன் அவர் போட்டியிட்ட, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்று பெரும் பின்னடவை சந்தித்துள்ளது.