இலங்கை

13 ஐ நடைமுறைப்படுத்த 3 வழிமுறைகள் உண்டு; ஈ.பி.டி.பி.செயலாளர் டக்ளஸ்

மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் என்று புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரவுக்கும் இந்திய தூதர் வலியுறுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுத வழிமுறையை நோக்கி வலுப்பெற்று சென்ற நிலையில் 1987 களில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமை என்ற சிறந்த ஒரு தீர்வு கிடைத்தது. இது தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என உணர்ந்துகொண்ட நாம் அதை ஏற்றுக்கொண்டதுடன் தொடர்ந்தும் ஆயுத வழிமுறையை நோக்கி தமிழ் மக்கள் நகர்ந்து சென்றால் அது பேரழிவையே ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்.

எமது இந்த தீர்க்கதரிசனம் மிக்க கருத்தை அன்றைய காலத்தில் இருந்த இதர போராட்ட அமைப்புகளும்,தமிழ் அரசியல்வாதிகளும் தமது சுயநலன்களுக்காக ஏற்றுக்கொள்ளாதிருந்தனர்.அத்துடன் 13 ஐ தொட்டுக் கூட பார்க்கமாட்டோம் என முழக்கமிட்டும் திரிந்தனர். இதன் விளைவுகள் முள்ளிவாய்க்கால் என்னும் யுத்த முனையில் முடிவுற்று அதன் வலிகளை தமிழ் மக்களே சுமக்க நேரிட்டது.

ஆனால் இன்று நாம் கூறிய அந்த வழிமுறையே சாத்தியமானதென நிரூபாணமாகியுள்ளது. அதுமட்டுமல்லாது தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியல் செய்துவந்தால் இருப்பதையும் இழக்க நேரிடும் என்ற எமது கருத்தையும் ஏனைய தமிழ் தரப்பினர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கும் வந்துவிட்டதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதை இலக்காக கொண்டதாகவே எமது கட்சியின் நிலைப்பாடு இருக்கின்றது.

நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்துதான் நாம் குறிப்பாக 13 ஆம் திருத்தத்தினை மூன்று கட்டங்களாக அமுல் படுத்துவதன் ஊடாக முழுமையாக அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.

அதில் முதலாவது கட்டமாக, நிறைவேற்று செயற்பாடுகள் ஊடாகவும் நிர்வாக செயற்பாடுகள் ஊடாகவும் மாகாணங்களில் இருந்து எடுக்கப்பட்ட விடயங்களை மீளக் கையளிப்பது. இதனை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்த முடியும். இதை ஜனாதிபதியாக உள்ளவர் சிரித்துக்கொண்டோ அல்லது இறுகிய முகத்துடனோ கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தலாம்.

இரண்டாவது, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட முன்னர் நடைமுறையில் இருந்த சில சட்ட ஏற்பாடுகளுக்கும் 13 ஆம் திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட சில விடயங்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளில் கணிசமானவற்றை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை ஊடாக திருத்திக் கொள்ள முடியும்.

மூன்றாவது கட்டமாக, அரசியலமைப்பில் அடிப்படையில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் சிந்திப்பது என வகைப்படுத்தி இருக்கின்றோம். இதை எமது கட்சி அன்றிலிருந்து இன்றுவரை எடுத்துக் கூறி வருகின்றது.அத்துடன் எமது கட்சி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையினூடான தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அதனூடாக எமது பொறிமுறையை நகர்த்தி வெற்றியும் கண்டுள்ளது.

இதனால் தமிழ் மக்களும் சுயலாப போலித் தேசிய அரசியலை தூக்கி எறிந்துவிட்டு யதார்த்த பூர்வமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டனர்.

அதன் வெளிப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பக்கம் மக்கள் தமது வாக்களூடாக அரசியல் பலத்தை வழங்குவார்கள் என நம்புகின்றேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.