ஹரிணியின் புதிய சாதனை
2024 பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாக்கு எண்ணிக்கையானது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு பாராளுமன்ற வேட்பாளரால் பெறப்பட்ட அதிகூடிய விருப்பு வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, 2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 527,364 வாக்குகளைப் பெற்றமையே அதிக விருப்பு வாக்குகளாக இருந்த நிலையில் இம்முறை அந்த சாதனையை முறியடித்து கலாநிதி ஹரிணி அமரசூரிய வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சரத் வீரசேகர அதிகபட்சமாக 328,092 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றதுடன் அக்கட்சி 6 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. இம்முறை சஜித் பிரேமதாச 145,611 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் அக்கட்சி நான்கு ஆசனங்களையே பெற்றுள்ளது.