அடுத்த ஆட்சியை எமக்கு தாருங்கள்; ‘எல்’ போர்ட்காரர்களுக்கு வழங்க வேண்டாம்
ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தோ அல்லது அவரை விசேட ஆலோசகராக நியமித்தோ நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் அவரின் அறிவு மற்றும் அனுபவத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு தரப்பினரின் புதிய ஜனநாயக முன்னணி செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ராஜித சேனாரட்ன இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தொடர்ந்திருந்தால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பட்டிருக்கும். இதன்படி அரச ஊழியர் ஒருவரின் ஆகக் குறைந்த சம்பளமாக 55ஆயிரம் ரூபா இருந்திருக்கும். அரசாங்கத்தினால் தாங்கிக்கொள்ளக் கூடிய மட்டத்திலேயே இந்த சம்பள அதிகரிப்பை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அரச ஊழியர்கள் இவற்றை கோர வேண்டும். முதலில் ஒரே புள்ளடியால் அரச ஊழியர்கள் அதனை இழந்தனர். அடுத்த முறையும் அதே தவறை செய்துவிட வேண்டாம்.
எங்களுக்கு பாராளுமன்றத்தில் அதிகாரத்தை வழங்குங்கள். அரசாங்கத்தை எங்களிடம் வழங்கினால் நிச்சயமாக நாங்கள் அந்த சம்பள அதிகரிப்பை செய்வோம். மீண்டும் எல் போர்ட் காரர்களுக்கு நாட்டின் ஆட்சியை வழங்க வேண்டாம். அனுபவம் உள்ள எங்களுக்கு ஆட்சியை வழங்குங்கள். நாங்கள் சம்பளத்தை அதிகரித்து நாட்டையும் கட்டியெழுப்புகின்றோம்.
இதேவேளை வீட்டில் இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வர வேண்டும்.அவர் போன்றோரை எப்படியாவது கொண்டு வருவது அவசியமாகும். அவரை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தோ அல்லது விசேட ஆலோசகராக நியமித்தோ அவரின் அறிவு மற்றும் அனுபவத்தை பெற இடமளிக்க வேண்டும். எதியோப்பியா வங்குரோத்தடைந்த போது அங்கு சென்ற சர்வதேச நாணய நிதியம் இலங்கையில், ரணில் விக்கிரமசிங்கவின் முறையை பின்பற்றுமாறு கூறியுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் இலங்கையின் பொருளாதார ஆலோசர்களை அழைக்குமாறு கூறியுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க இப்போது பாராளுமன்றம் வரப் போவதில்லை. நாடு வீழ்ச்சியடையும் போது மக்களே அவரை கொண்டு வருவர். அப்போது நாங்கள் கூறினால் அதனை அவர் கேட்பார். எமது அமைச்சர்கள் பலர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறும் போது நவம்பர் 14ஆம் திகதிக்குள் மக்கள் மனம் மாறுவர் என்பதனை கூறினேன். இதன்படி நாம் எதிர்பார்ப்பது நடக்கும் என்றார்.