உலகின் மிகப்பழைமையான உப்புச் சுரங்கம்
மத்திய ஐரோப்பாவில் உள்ள போலந்து நாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
பழங்காலந்தொட்டே இங்கு மக்கள் சிறந்து வாழ்ந்துள்ளதாக சரித்திரம் கட்டியங் கூறுகிறது. கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பிலிருந்தே இங்கு வளமான வாழ்க்கை அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
உலக நிலப் பரப்பில் 69ஆவது இடத்தையும், மக்கட் தொகையில் 38ஆவது இடத்தையும் கொண்ட, மக்களாட்சி நடைபெறும் இந்நாட்டில், போலிய மொழி (Polish) பேசும் போலியர்களே அதிகம் வாழ்கிறார்கள்.
’ஸ்வாட்டெ’ (zloty) என்பது இங்குள்ள பணத்தின் பெயர். இங்கு தான், உலகின் மிகப்பழைமையான உப்புச் சுரங்கம் அமைந்துள்ளது. 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோட்டை கட்டப்பட்டுள்ளது. அதில்தான் உப்புத் தொழிற்சாலையின் நிர்வாக அலுவலகம் இயங்கியதாம்.
உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை இதுவென்றும் மிக நீண்ட காலமாக இயங்கி வந்ததென்றும் அறியப்படுகின்றது. இங்கு சுரங்கத்தின் உள்ளேயே கிறிஸ்தவ வழிபாட்டுத் தலமும், பெரிய மண்டபங்களும், சிறிய ஏரிகளும் உள்ளன. மேலும் இங்கு, பாதுகாப்பு கருதி, பெரும் மரச் சட்டங்களைக் கொண்டு, எல்லா இடங்களையும், தக்க முறையில் பலப்படுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.