இலங்கை

98,000 கோடி ரூபா கடன் பெற்ற அநுர!

நாட்டின் கடன்களை மீள செலுத்துவது பெரிய விடயமல்ல என தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தற்போது 98 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார். அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டிவரும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கலாம். அதிகாரத்துக்கு வந்தால் செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் தேர்தல் மேடைகளில் வாய் சவடால் அரசாங்கம் செய்ய முடியாது. அது மிகவும் கஷ்டமானதாகும். மக்கள் விடுதலை முன்னணி இவ்வளவு காலமும் அரசாங்கத்தை விமர்சித்து வந்தது. தற்போது மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். அவர்களது அரசாங்கம் செய்வதை மக்கள் தற்போது கண்டுகொள்ளலாம்.

அரசாங்கத்தின் வெளிநாட்டு கடனான 42 பில்லியன் டொலரை செலுத்துவது பாரிய விடயமா என அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தற்போது 98 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார். அது மாத்திரமல்லாது பணம் அச்சிட்டுள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க பணம் அச்சிடாமலே மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதேபோன்று ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு இந்தளவு வாகனம் எதற்கு என அவர் கேட்டிருந்தார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார வரும்போது அவருக்கு பாதுகாப்புக்காக 6 வாகனங்கள் வருகின்றன. தேர்தல் பிரசார கூட்டத்துக்குள் வரும்போது 5 வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வானத்திலே வருகிறார். மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறு செயற்படுகிறார்கள்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்து ஒரு மாதம் கடந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நாட்டை முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் அவர்களிடம் இல்லை.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தற்போது கடவுச்சீட்டு இல்லாமையால் திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் இயலாமையை மக்கள் தற்போது காண்கிறார்கள். அதனால் அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டி வரும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.