அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்; அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளரும் தோல்வியடையலாம்
அமெரிக்காவில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுக்கு மாத்திரமின்றி உலக நாடுகளுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
தற்போது அமெரிக்க அரசியலை பொறுத்தவரை இரு கட்சிகளின் ஆதிக்கமே உள்ளது. ஒன்று தாராளவாத அரசியல் கட்சியான ஜனநாயக கட்சி மற்றொன்று பழைமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி.
சிவில் உரிமைகள், பரந்த அளவிலான சமூகப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் ஜனநாயக கட்சியின் கொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி, குறைந்த வரி, அரசின் அதிகாரத்தைக் குறைத்தல்,துப்பாக்கி உரிமை, புலம்பெயர்ந்தோர் மற்றும் கருக்கலைப்புக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு ஆதரவாக இந்த கட்சி செயற்படும்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதுடன் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.
மாறுபட்ட கலச்சார பின்னணியை கொண்ட கமலா
அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ், அவரது மாறுபட்ட கலச்சார பின்னணிக்காக அடிக்கடி கொண்டாடப்படுகிறார்.
அரசியல்வாதியாக அவரது சாதனைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், அவரது அடையாளத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அவரது தாய்வழி பரம்பரை மூலம் வரும் இந்திய பாரம்பரியம் ஆகும்.
இந்தியாவின் சென்னையில் பிறந்த கமலாவின் தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ்
1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார்.
பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உட்சுரப்பியல் துறையில் பிஎச்.டி முடித்த அவர், ஜமைக்காவைச் சேர்ந்த சக மாணவரான டொனால்ட் ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் கமலா 1964 இல் பிறந்தார்.
ஷியாமளா ஒரு அர்ப்பணிப்புள்ள விஞ்ஞானி மட்டுமல்ல, சிவில் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிடும் ஆர்வலராகவும் இருந்தார். மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியில் அவரது பணி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
தொழிலுக்கான தனது தாயின் அர்ப்பணிப்பு, தன் உலகக் கண்ணோட்டம் மற்றும் தொழிலை கணிசமாக வடிவமைத்ததாக, கமலா ஹாரிஸ் அடிக்கடி பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
ஓக்லேண்டில் பிறந்த கமலா ஹாரிஸ் பா்க்லியில் வளா்ந்தாா். வோஷிங்டனில் உள்ள ஹோவா்ட் பல்கலைக்கழகத்தில் படித்த அவா், கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தாா். அதன் பின்னா் அலமீடா மாவட்ட அட்டா்னி அலுவலகத்தில் வழக்குரைஞராக பணிபுரிய தொடங்கினாா்.
2003ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவின் முன்னணி வழக்குரைஞராக திகழ்ந்த அவா், சென்ற 2010 ஆம் ஆண்டில் கலிஃபோா்னியா அட்டா்னி ஜெனரலாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவரே அப்பதவிக்கு தோ்ந்தெடுக்க முதல் பெண்ணும் முதல் கருப்பினத்தவரும் ஆவார்.
அதன் பின்னா் கலிஃபோா்னியா மாகாணத்தின் செனட் சபை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். 2020 ஆம் ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பல்வேறு சாதனைகள் புரிந்து கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளாா்.
சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் மிக பிரபலமான , சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட கோடீஸ்வரரும் தொழிலதிபரும் ஆவார். ட்ரம்ப் 1987 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் விருப்பத்தை வெளிப்படுத்தினார். 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சீர்திருத்தக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
2008 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவரா என்று கேள்வி கேட்டு பிரசாரம் செய்த ‘பர்தர்’ இயக்கத்தின் மிக வெளிப்படையாகப் பேசும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார் டிரம்ப். இந்த சந்தேகங்கள் எல்லாம் முற்றிலும் பொய்யாக்கப்பட்டுவிட்டன. ஒபாமா ஹவாயில் பிறந்தவர் என்பது உறுதியானது.
அந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையென டரம்ப் ஒப்புக்கொண்ட போதிலும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் ட்ரம்ப் , ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை முறையாக அறிவித்தார்.
“அமெரிக்காவை மீண்டும் மாபெரும் நாடாக்குவோம்’’ என்ற கோஷத்துடன், டிரம்ப் சர்ச்சைக்குரிய பிரசாரத்தைச் செய்திருந்தார். 2016 ஆம் ஆண்டு உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டார்.
ஆனாலும் கொரோனா தொற்றைக் கையாண்டவிதம், நட்பு நாடுகளை உதாசீனப்படுத்தியமை, இனவெறிக்கு ஆதரவாக நின்றமை,காலநிலை மாற்றம் அமைப்பைப் புறக்கணித்து வெளியேறியமை என ஒரு நாட்டின் ஜனாதிபதி எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாக ட்ரம்ப் விளங்கினார். டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாடுகள் அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த பைடனை கோபத்திற்கு ஆளாக்கியது.
இதன்பின்னர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார் ஜோ பைடன்.
அமெரிக்க இளம் சமுதாயம் ட்ரம்ப்பின் பிற்போக்குச் சிந்தனையை ஆதரிக்காமையால் ட்ரம்ப் தோல்வி கண்டார்
கொள்கைகள் குறித்த விவாதங்கள்
ஜனாதிபதி வேட்பாளரை மக்கள் புரிந்து கொள்வதில், கொள்கைகள் குறித்த விவாதங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தவர்களை பழிவாங்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வேலை வாய்ப்பு, பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் சார்ந்து மாற்றங்கள் நிகழலாம். ஒரு விதத்தில், சட்டவிரோத குடியேற்றக் கட்டுப்பாடு நல்லதுதான். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும், வட்டி விகிதம் குறையும்” என்றும் கூறப்படுகிறது.
மறுபுறம் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வறுமை, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த உலகளாவிய நடவடிக்கைகளில் ஒரு தொய்வு ஏற்படும் என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்ற கொள்கைகளுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் போது அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரோ vs வேட் வழக்கில் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளுக்கான 50 ஆண்டுகால கூட்டாட்சி பாதுகாப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, மாகாணங்கள் தங்கள் சொந்தத் தடைகளை வடிவமைக்க வழிவகுத்தது. இந்நிலையில், ட்ரம்பின் கருக்கலைப்பு தடை உத்தரவை திரும்பப் பெறுவேன் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு விவகாரத்தில் கமலா ஹாரிஸ் பெண்களின் உரிமையை நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார். அமெரிக்க உச்சநீதிமன்றம் 2022இல் ரோ vs வேட் வழக்கை இரத்து செய்த பிறகு, அமெரிக்காவில் கருக்கலைப்பு தடைகள் அதிகரித்து வருவதைப் பற்றி அவர் அமெரிக்க முழுவதும் பிரச்சாரம் செய்தார்.
அண்மைய கருத்துக் கணிப்புகள், ட்ரம்பை விட ஹாரிஸ் முன்னிலை வகிக்கின்ற போதிலும் முக்கிய மாநிலங்களில் இருவரிடையே பாரிய இடைவெளி இருக்கவில்லை.
ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகத் துல்லியமான பொருளாதார நிபுணராக கருதப்படும் கிறிஸ்டோப் பராட் வெளியிடும் கருத்துக்கணிப்புகள் ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் அதிகம் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியாவார் என குறித்த பொருளாதார நிபுணர் கணித்துள்ளார்.
அமெரிக்க மக்கள் மனநிலை, சந்தை நிலவரம், உள்ளூர் பொருளாதாரம், மாகாணங்களில் நிலவும் சூழ்நிலைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி கணிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, ட்ரம்ப்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில வெற்றி பெறப் போகிறார் என பொருளாதார நிபுணர் கிறிஸ்டோப் பராட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 10 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் 09 தேர்தல் வெற்றியைக் துல்லியமாகக் கணித்த பிரபல வரலாற்று ஆசிரியரான ஆலன் லிக்ட்மேன், இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என கணித்துள்ளார்.
அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளரும் தோல்வியடையலாம்
நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தோல்வி அடைவதற்கும் கூட வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி நேரடியாக வாக்காளர்களால் தேர்வு செய்யப்படுவதில்லை. தேர்தல் கல்லூரியினால் தெரிவு செய்யப்படுவர்
தேர்தல் கல்லூரி (Electoral college) என்பது மாகாண வாக்குகளை வழங்குவதற்கு பொறுப்பான உறுப்பினர்களின் ஒரு குழுவைக் குறிக்கிறது. அவர்கள் ‘தேர்வாளர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒன்றில் வெற்றி பெறுவதென்பது, அந்த மாகாணத்தின் ‘தேர்தல் கல்லூரி’ வாக்குகள் எனப்படும் அனைத்து வாக்குகளையும் ஓர் வேட்பாளர் பெறுவதாகும்.
மொத்தம் 538 தேர்வாளர் குழு வாக்குகள் உள்ள நிலையில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவதற்கு பெரும்பான்மையான 270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும். வெற்றி பெற்றவரின் துணை ஜனாதிபதி வேட்பாளரே, துணை ஜனாதியாக பொறுப்பேற்றுக் கொள்வார்.
மாகாணங்களின் மக்கள் தொகை அளவைப் பொறுத்தே அதன் தேர்தல் கல்லூரி முறைமை பற்றிய எண்ணிக்கை அமைகிறது. இதன்படி, குறைவான மக்கள் வாக்குகள் பெற்ற வேட்பாளரும் கூட, மாகாண அளவிலான சில நெருக்கடியான போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் ஜனாதிபதியாக முடியும்.
உதாரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் தனது போட்டியாளரான ஹிலாரி கிளிண்டனைவிட சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார்.
சில மாகாணங்களில், பொதுமக்கள் யாரை ஆதரித்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், கோட்பாட்டளவில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்.ஆனால் நடைமுறையில், கல்லூரி உறுப்பினர்கள் எப்போதும் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளருக்கே வாக்களிப்பதை கடந்த தேர்தல்களின் போது காண முடிந்தது.
யாரும் பெரும்பான்மை வெற்றி பெறவில்லை என்றால், அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும்.
ஆனால் தற்போதைய சூழலில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை ஆதிக்கம் செலுத்துவதால் இவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை என்ற கருத்துக்களும் இல்லாமலில்லை.