2024 இன் முதல் அரையாண்டில் பொருளாதாரம் விரிவடைந்துள்ளது: நிதியமைச்சு அறிக்கை
2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவான 7.3 சதவீத பொருளாதார சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் பொருளாதாரம் 5.0 சதவீதமாக விரிவடைந்துள்ளதாக நிதி அமைச்சின் மத்திய நிதியாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 இல் முதல் அரையாண்டில் விவசாயம், தொழில், சேவை உட்பட பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் விரிவடைந்துள்ளன.
அறிக்கையின்படி, தானிய உற்பத்தி, நன்னீர் மீன்பிடித்தல் மற்றும் விலங்கு உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக விவசாயத் துறை முதல் அரையாண்டில் 1.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கட்டுமானம், சுரங்கம் மற்றும் உற்பத்தித் தொழில் உட்பட அனைத்து துணைத் துறைகளிலும் பதிவான வளர்ச்சியின் காரணமாக அரையாண்டில் தொழில்துறை துறையும் 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.மேலும், சேவைத் துறை, அரையாண்டில் 2.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளின் பணசுருக்கம் காரணமாக 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்த பணவீக்கம் எதிர்மறையாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரதான பணவீக்கம் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் 0.5 வீத பணசுருக்கத்தை காண்பித்துள்ளதுடன், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பிரதான பணவீக்கம் 0.2 வீதமாகப் பணசுருக்கத்தைப் பதிவு செய்துள்ளது.