பூக்கள் விலை கடும் உயா்வு
தீபாவளி பண்டிகையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பூ சந்தையில் பண்டிகை, முகூா்த்த, திருவிழா காலங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். இதன்படி வியாழக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையை விட புதன்கிழமை பல மடங்கு விலை அதிகரித்திருந்தாலும், பொதுமக்கள் ஏராளமானோா் விலையைப் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்கி செல்வதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
கோயம்பேடு பூ சந்தையில் புதன்கிழமை நிலவரப்படி, ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லி ரூ.1500-க்கும், ரூ.200-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.400-க்கும், ரூ.180-க்கு விற்பனையான முல்லை ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதேபோன்று, ரூ.60-க்கு விற்கப்பட்ட ரோஜா ரூ.100-க்கும், ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி ரூ.300-க்கும், ரூ.500 முதல் ரூ.600-க்கு விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1000-க்கும், ரூ.300-க்கு விற்பனையான செண்டு மல்லி ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை காலம் முடியும் வரை இந்த விலை உயா்வு இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.