வட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை; நூதன முறையில் ஹெக்
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு வட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் ஹெக் செய்யப்படும் அபாயம் இருப்பதால் யாருக்கும் எந்தவொரு கடவுச் சொல்லையும் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளம்தான் வட்ஸ்அப்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தொழில்கள் தொடங்கி தனிப்பட்ட தேவைகளிலும் வட்ஸ்அப் செல்வாக்கு செலுத்துகிறது.
வட்ஸ்அப் செயலிகள் ஹெக் செய்யப்பட்டு அதன் மூலம் பண மோசடிகள் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் நடந்து வந்தன.
ஆனால், வாட்ஸ் அப் பயனர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி பரவி வருகிறது.
இலங்கையில் அதிகளவில் வாட்ஸ் அப் கணக்குகள் ஹெக் செய்யப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் இதுவரையில் மூன்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனு பொல தெரிவித்துள்ளார்.
நன்கு அறிமுகமான நபரிடமிருந்து மத சம்பந்தப்பட்ட zoom மீட்டிங்கில் கலந்துகொள்ளக் கூறி குறியீடு நம்மிடமிருந்து பெறப்படும்.
ஹெக்கர் குறியீட்டைப் பெற்றுக்கொண்டதும் குறித்த நபரின் வாட்ஸ் அப் கணக்கு செயல்பாட்டில் இருக்காது.
ஹெக் செய்யப்பட்ட நபரின் வாட்ஸ் அப் கணக்கிலுள்ள பட்டியலில் உள்ளவர்களுக்கும் இதே அணுகுமுறையைப் பின்பற்றுவார்கள்.
Verification code மூலம் வாட்ஸ் அப் கணக்கை ஹெக் செய்து உள்நுழைந்து தொலைபேசி தொடர்பு விபரங்களை ஹெக்கர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த ஹெக்கிங் எவ்வாறு செய்யப்படுகிறது என்றால்,
நண்பர்களாகவோ அல்லது நன்கு அறிமுகமானவர்களாகவோ ஹெக்கர்கள் வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொள்கிறார்கள். அதாவது அவர்களை தெரிந்த நபர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள்.
அதன் பின்னர் அவர்கள் Verification code கேட்பார்கள். அந்த இலக்கத்தை ஒரு முறை அனுப்பியதும் வாட்ஸ் அப் கணக்கு ஹெக்செய்யப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் விளக்கம்
இதுகுறித்து கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அவருக்கு நடந்த அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.
“எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரின் மனைவியிடமிருந்து எனக்கொரு குறுஞ்செய்தி வந்தது. எனது நலனை விசாரித்த பின்னர், அவள் தவறுதலாக ஒரு குறியீட்டை அனுப்பியதாகவும் அது மீண்டும் தனக்குத் தேவையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நம்பி, குறியீட்டைப் பகிர்ந்துகொண்டேன். உடனே எனது வட்ஸ்அப் கணக்கு ஹெக் செய்யப்பட்டது.
எனது வட்ஸ்அப் கணக்கிலுள்ள இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி, நான் நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறி குறிப்பிட்ட தொகை பணத்தை கோரியுள்ளனர்.
இதனைப் பார்த்த எனது நண்பர் ஒருவர் இது உண்மைதானா என்பதை அறிந்துகொள்ள எனது மனைவியை தொடர்பு கொண்டுள்ளார்.
ஹெக் செய்யப்பட்ட எனது வட்ஸ்அப் கணக்கை பல தடவைகள் மீண்டும் நிறுவிய போதும் 72 மணிநேரமாகியும் என்னால் எதுவித அணுகலையும் பெற முடியவில்லை.
பின்னர் நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து WhatsApp support நாடினேன்.
மக்களே உஷார்
எனவே இதுபோன்ற செயல்கள் தற்போது பரலாக இடம்பெற்று வருகின்றன.
இந்த வட்ஸ்அப் மோசடி மிகவும் நூதனமான முறையில் நடைபெறுவதால் மக்களுக்கு பெரிதாக சந்தேகம் எழுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
தெரிந்தவர்கள் தானே என எண்ணத்தில் குறியீட்டையும் சில நேரங்களில் பணத்தையும் அனுப்பி வைக்கின்றனர்.
இது ஹெக்கர்களுக்கு மிகவும் வசதியாகிவிடுகிறது.
தொடர்ந்து அவர்கள் மக்களை இவ்வாறு ஏமாற்றி பணம் பறிக்க எத்தனிக்கின்றனர்.
ஒரு சிலருக்கு இதுபோன்ற விடயங்கள் இலங்கையில் நடைபெறுகிறதா என்பதே சந்தேகமாக இருக்கும்.
எப்பொழுதும் மக்களுக்கு கூறப்படும் ஒரு அறிவுரை என்னவென்றால், சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகளை அழுத்தி உள்ளே செல்ல வேண்டாம் என்பது தான்.
ஒரு தடவைக்கு நூறு தடவைகள் என்னவென்று ஆராய்ந்து பார்த்துவிட்டே எதையும் செய்ய வேண்டும்.
எனவே இவ்வாறு வட்ஸ்அப் ஊடுருவல் மூலம் உங்களை ஏமாற்ற வரும் ஹெக்கர்களிடமிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.
தெரிந்த நபர்கள் அனைவருக்கும் இச் செய்தியை பகிர வேண்டும்.
மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.