தீபாவளிப் பண்டிகையும்; மக்களின் ஏக்கங்களும்
உலகளாவிய ரீதியில் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தித்திக்கும் தீபாவளி தினம் இன்றாகும். தீபாவளிப் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது என்பது தொடர்பில் மரபு ரீதியாக பல விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தாயைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது என வரம் பெற்ற நரகாசுரனை கிருஷ்ண பகவான் வதம் செய்வதைக் குறிக்கும் விதத்தில் இலங்கைத் தமிழர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி நாளில், இந்துக்கள் புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் ஆலயங்களிற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு, சமைத்து, படையல் வைத்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும், மனநிம்மதியுடனும் கொண்டாடி வருகின்றனர்.
இலங்கைத்தீவு மக்களை பொறுத்த வரையில் இம்முறை சற்று வேறுபட்ட ஒரு மனநிலையே காணப்படுகிறது.
அதற்கான காரணம், புதிய எதிர்பார்ப்புகளும், எதிர்ப்பார்க்கும் மாற்றங்களும் ஆகும்.
இலங்கை தீர்மானமிக்க ஒரு தேர்தலை சந்தித்த பின்னர் ஒன்றிணைந்து கொண்டாடக்கூடிய முதலாவது பண்டிகை தீபாவளி ஆகும். அதன் காரணமாகவோ என்னவோ புதிதாகப் பதவியேற்ற அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கான எதிர்ப்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
எனினும், இந்த பண்டிகை நாட்களில் மக்களுடைய எதிர்ப்பார்ப்பை அரசாங்கம் பூர்த்தி செய்ததா எனக் கேட்டால், நிச்சயமாக இல்லை என்ற பதிலையே கூறக்கூடியதாக உள்ளது.
குடும்பமாக ஒன்றிணைந்து பிடித்த உணவை சமைத்து, பிடித்த இடத்திற்கு சென்று சந்தோஷமாக இருக்க கூடிய ஒரு பொருளாதார நிலையும், மனநிலையும் மக்கள் மத்தியில் இல்லை.
புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி பொருட்களின் விலைவாசிகள் அதிகரித்துள்ளன.
கோரிக்கைக்கு ஏற்ப பொருட்கள் இருந்தாலும் அதனை பெற்றுக்கொள்ள அதிக தொகையை செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அரிசி தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், பொங்கல்கூட செய்ய முடியாத தீபாவளியாகப் பலருக்கு இன்றைய பண்டிகை நாள் அமைந்திருக்கலாம்.
அனைவருக்கும் பண்டிகை ஒரே மாதிரி அமைந்து விடுவதில்லை தானே! பொருளாதார ரீதியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து தானே ஆக வேண்டும்.
மக்களுடைய புதிய எதிர்ப்பார்ப்புகளும், மாற்றத்துக்கான ஏக்கங்களும் அப்படியே சூடு தணியாமல் இருக்கின்றன.
இந்நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி மற்றுமொரு மாற்றத்திற்கான வேலைப்பாடாக நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் எந்த அளவிற்கு ஆட்சியாளர்களுக்கு தீர்மானமிக்கதாக அமைந்திருந்ததோ அதேபோல நிச்சயமாக நாடாளுமன்றத் தேர்தலும் பழைய அரசியல் கலாச்சாரத்திற்கு தீர்மானமிக்க ஒன்றாக அமையும்.
இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் தீபாவளி தினத்தின் மகத்துவத்தை போலவே, ஊழல்வாதிகளையும், பழைய அரசியல் கலாசாரத்தையும் கலைக்க மக்கள் தயாராக உள்ளனர்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பல புதிய முகங்களும், காளான் முளைப்பது போன்று பல சுயேட்சைக் குழுக்களும் முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
நிலையான பொருளாதாரம், நிம்மதியான வாழ்க்கை இது மாத்திரமே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. அதனை முறையாக வழங்க நல்ல ஒரு அரசாங்கம் வேண்டும் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
இன்றுபோல ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் கூட மனநிம்மதியை இழந்து மக்கள் காணப்படுவார்களாக இருந்தால் அது ஒரு சிறந்த தலைமையின் கீழ் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தை சுத்திகரிக்கும் சிரமதானத்தில் இணையுமாறு கோரியிருந்தார் அதுதான் யதார்த்தமும் கூட, கிருஷ்ணபகவான் நரகாசுரனை வதம் செய்தது போல எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஊழல்வாதிகளையும், பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்களையும் வதம் செய்யப்போவது உறுதி.
பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாது என்று வரம் வாங்கிய நரகாசுரன் போலவே, தனது அரசியல் பயணத்தை இல்வாதொழிக்க முடியாது என தலைக்கணத்துடன் திரியும் ஆட்சியாளர்களும் அரசியல் இல்லையென்றால் அடுத்து என்ன என்பதை சிந்தித்து வைப்பது சிறந்தது.
மக்களின் புதிய எதிர்ப்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும்! அதனை மக்கள் ஆணையால் தெரிவான அரசாங்கம் நிறைவேற்றவும் வேண்டும்! ஆகவே எதிர்ப்பார்த்த மாற்றம் உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!