தீவிரமடையும் போர் பதற்றம்: அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நேரடிக் கண்காணிப்பில் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து உலகின் 88 சதவீத அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யா தற்போது ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நேரடி கண்காணிப்பில் அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன.
இந்த சோதனை பலமுறை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிரிகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது அவசியம் என்றும், அதனால்தான் இதுபோன்ற சோதனை தேவை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், நேட்டோ ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கு தகவல் கிடைத்தது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால், மூலம் தரை, கடல் மற்றும் வான் வழிகள் மூலம் அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்ய ரஷ்யா தயாராகியுள்ளன.
இந்நிலையில், எதிரிகளின் எந்த வகையான தாக்குதலும் எதிர்க்கப்படும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் தெரிவித்துள்ளார்.
வடகொரியப் படைகள் ரஷ்யாவிற்கு வந்துவிட்டதாக நேட்டோ தெரிவித்துள்ளதை ரஷ்யா நிராகரித்துள்ளது. வடகொரியா ரஷ்யாவிற்கு குறைந்தது 10,000 துருப்புக்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்யாவிற்கு வந்துள்ள வடகொரிய வீரர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டும் என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இராணுவ வீரர்கள் ரயிலில் கிழக்கு ரஷ்யாவை வந்தடைந்ததாக பென்டகன் துணை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக, துருப்புக்கள் ஏற்கனவே உக்ரைன் அருகே அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துருப்புக்களின் உதவியுடன் உக்ரைனில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை அதிகரிக்கும் என்ற கவலையையும் பென்டகன் வெளியிட்டுள்ளது. வடகொரியா போரில் ஈடுபடும் பட்சத்தில் உக்ரைனில் அமெரிக்கா தனது தலையீட்டை மட்டுப்படுத்தாது என்றும் பென்டகன் எச்சரித்துள்ளது.