ஜே.வி.பி.ஆதரவளித்த விடயமே அவர்களுக்கு வினையாகி விட்டது
நல்லாட்சி காலத்தில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினரின் எதிர்ப்புக்கும் மத்தியில் அரசாங்கத்துடன் இணைந்து ஜே.வி.பி.யினர் நிறைவேற்றிய உள்ளூராட்சி தேர்தல் முறை திருத்தம் தற்போது ஜே.வி.பியினருக்கே பாதிப்பாக அமைந்துவிட்டது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தற்போதைய அரசாங்கமான தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்குகளில் 10 வீதம் முன்னேற்றமடைந்துள்ளது. இதற்காக எல்பிட்டிய மக்களுக்கு எமது நன்றியை கூறுகின்றோம். ஒரு மாதத்தில் இவ்வாறான வேகமான முன்னேற்றம் எமது கட்சிக்கு கிடைத்துள்ளது.
இதேவேளை எல்பிட்டிய தொகுதியில் 15 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தியும் மிகுதி 15 ஆசனங்களை மற்றைய கட்சிகளும் பெற்றுக்கொண்டுள்ளன. இதனால் அங்கே அந்தக் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது. அன்று நல்லாட்சி காலத்தில் நாங்கள் எதிர்த்த போதும் செய்த சட்டம் குழப்பகரமானது என்று தெரிந்தும் அதனை ஆதரித்தமையின் விளைவை இப்போது ஜே.வி.பிக்கு அனுபவகிக்க நேர்ந்துள்ளது.
ராஜபக்ஷக்கள் தொடர்பில் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களிடையே அவர்கள் தொடர்பான மனநிலையை மாற்றி பெற்ற வாக்குகளே தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றன . தொடர்ந்தும் ஜே.வி.பியிடம் ஏமாந்துவிட வேண்டாம் என்று கேட்கின்றோம்.
மகிந்த ராஜபக்ஷ நாட்டில் பல்வேறு பெரிய அபிவிருத்திகளுக்காக கடனை பெற்றார். அந்த கடன்களின் பெறுமதிகள் இப்போது நிலத்தில் தெரிவதற்கு இருக்கின்றது. ஆனால் நீங்கள் ஆதரவளித்த நல்லாட்சி காலத்தில் பெற்ற கடன் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படவில்லை. அந்த கடனாலேயே நாடு இந்தளவு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாங்கள் கடன் பெற மாட்டோம் என்று கூறிக்கொண்டு வந்து பல்வேறு கடன்களை இந்த அரசாங்கம் பெறுகின்றது. எதற்காக கடன் பெறப்படுகின்றது என்பதனை நீங்கள் வெளிப்படுத்துங்கள் என்று கேட்கின்றோம்.
இந்த அரசாங்கம் தெரிவாகியவுடன் மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்னர் கண்காட்சிகளையே நடத்தினர். இதன்மூலம் தேங்காய், அரிசி விலைகள் குறையாது. அடிக்கடி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எமது தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாகனங்கள் பலவற்றை பாதுகாப்புக்காக பயன்படுத்தியதாக கூறுகின்றனர். இந்நிலையில் தற்போதைய பிரதமரும் தனது பாதுகாப்புக்காக வாகனங்களை பயன்படுத்துவதாக கூறுகின்றார். இதுபோன்றுதான் மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புக்காக வாகனங்களை பயன்படுத்தினார். இதனை தவறான வகையில் குறிப்பிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.