சாதனை செய்த ரயில் சாரதி…
அந்த ஊரில் ரயில்கள் நேரத்துக்கு வருவதே இல்லை. தினமும் ரயில்கள் ஒரு மணித்தியாலம் 2 மணித்தியாலம் மூன்று மணித்தியாலம் 4 மணித்தியாலம் ஏன் ஐந்து ஆறு மணித் தியாலங்களுக்குமேல் கூட தாமதமாக வருவதுண்டு. ரயில் பயணத்தில் அந்த ஊர் மக்கள் மிகுந்த வெறுப்படைந்திருந்தார்கள்.
ரயில் என்றால் அது நிச்சயமாக தாமதமாகத்தான் வரும் என்று அவர்கள் தீர்மானமாகவே நினைத்திருந்தார்கள்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் ஓர் அதிசய நிகழ்வு நடந்தது. எல்லோரும் ரயில் வருவதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சமயம் ரயில் அன்று அதிசயக்கும் வகையில் சரியான நேரத்துக்கு வந்துவிட்டது. பயணிகளுக்கெல்லாம் ஒரே ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.
ரயில் சாரதியை ஆஹா ஓஹோ என்று புகழத் தொடங்கினார்கள். பயணிகள் சிலர் “இப்படிப்பட்ட சாரதியை நாம் கௌரவித்தே ஆக வேண்டும்” என்று கூறி அருகில் உள்ள கடைக்கு ஓடிப் போய் பெரிய மாலை ஒன்றையும் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.
பின்னர் ரயில் சாரதியிடம் போய் அவரை வானலாவ புகழ்ந்து “நீங்கள் மகா கெட்டிக்காரர். சூராதி சூரர்” என்று கூறி மாலையை அவர் கழுத்தில் அணிவித்தார்கள். அவர் வளைந்து நெளிந்து, உடலை கோணலாக்கிக் கொண்டு அசட்டு புன்னகையொன்றை செய்து கொண்டு அவர்களை பரிதாபமாகப் பார்த்தார்.
பயணிகள் அவர் தன்னடக்கம் காரணமாகத்தான் அப்படி இருக்கிறார் என்று நினைத்தபடி “ஏன் சேர், எல்லா ரயில்களும் சுணங்கியே வரும்போது நீங்கள் மட்டும் எப்படி சரியான நேரத்திற்கு வந்தீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு அவர், அசட்டுத்தனமாக சிரித்தபடி “வந்து…, இது நேற்று வர வேண்டிய ரயில்” என்று கூறினாரே பார்க்கலாம். பயணிகள் முகத்தில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கும். (என்றோ படித்துச் சுவைத்தது)