அபுதாபி இந்து கோவிலில் தீபாவளி கொண்டாட்டம்
துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் ரூ.700 கோடியில், 27 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட இந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் மட்டும் தரைத்தளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.
இந்த கோவிலை அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி திறந்து வைத்தார். பின்னர் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது.
இந்த கோவிலில் இந்துக்களின் முக்கிய தினங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்துக்களின் முக்கிய திருவிழாவான தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 3ஆம் திகதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.
இன்று மாலை 7.30 மணிக்கு தந்தேராஸ் பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தங்களது வீடுகளில் இருந்து பங்கேற்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனுமன் பூஜை நடக்கிறது.
தொடர்ந்து தீபாவளித் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அன்னகூத் தர்சன் என்ற சிறப்பு நிகழ்ச்சி வருகிற 2, 3 ஆகிய திகதிகளில், இந்த 2 நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடக்கிறது.
இதில், குழந்தைகளுக்கான சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந் திகதி காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொதுமக்கள் இணையவழியாக முன்பதிவு செய்ய வேண்டும்.
அன்னகூத் திருவிழா
இந்தியாவின் வட மாநிலங்களில் அன்னகூத் என்ற பெயரில் உணவு மலைத்திருவிழாவானது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் இந்து கடவுளான கிருஷ்ணருக்கு மலைபோல உணவு வகைகளை குவித்து வைத்து வழிபடுவது வழக்கம். பாகவத புராணத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் கனமழையில் பாதிக்கப்பட்ட போது கோவர்தன் மலையை கிருஷ்ணர் தூக்கி ஊர் மக்களுக்கு குடையாக வைத்து காப்பாற்றியதாக கூறப்பட்டுள்ளது. எனவே தான் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் உணவுகளை மலையாக வழங்கி வழிபடுவது வழக்கம்.
இந்த திருவிழா வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்த 4-வது நாளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதனையொட்டி பாப்ஸ் அமைப்பு அபுதாபி இந்து கோவில் கட்டப்படும் வளாகத்தில் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சைவ உணவுகள் மட்டும் வைக்கப்படும். இதற்காக மொத்தம் 1,100 வகையிலான உணவுகள் பார்வைக்கும் வைத்து, பூஜைகள் செய்யப்படும். அபுதாபி இந்து கோவிலில் அன்னகூத் சிறப்பு நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை கோவில் வளாகத்தில் நடக்கும்.
இந்த நிகழ்ச்சிக்கு வாகனங்களில் வருபவர்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கோவில் அறிவிப்பு பலகைகளில் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகைக்கு அபுதாபி இந்து கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகை தரக்கூடும் என்பதால் அதற்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.