முச்சந்தி

வெளிவிவகார அமைச்சராகிறாரா சுமந்திரன்?…. தெய்வீகன்

“நல்லாட்சி அரசுக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான புதிய அரசமைப்பினை உருவாக்கும் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் –

“ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் –

தேசிய மக்கள் முன்னணி அரசு ஒப்புக்கொள்ளுமாயின் அவர்களுடைய அரசில் பங்கெடுப்பதற்கும் அவர்கள் கோருகின்ற வெளிவிகார அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கும் சுமந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார்” – என்று நேற்றிரவு Truth with Chamuditha நிகழ்வில் கலந்துகொண்ட உதய கம்மன்பில MP தெரிவித்திருக்கிறார்.

அதாவது, ‘தேசிய மக்கள் முன்னணி அரசானது சிறுபான்மை தமிழர்களுடன் டீல் போடப் பார்க்கிறது. நாட்டைப் பிரிப்பதற்கும், போர் வெற்றியைப் பலிகொடுக்கவும் திட்டமிடுகிறது’ – என்பதுதான் கம்மன்பில அவிழ்த்திருக்கும் பிரச்சாரத்தின் உள்ளடக்கம்.

ஜாதிஹ ஹெல உறுமய என்ற படுமோசமான இனவாதக் கட்சியில் தனது அரசியலை ஆரம்பித்து, அதிலிருந்து விலகி மகிந்தவின் முகாமுக்குள் சென்ற உதய கம்மன்பில, பின்னர் அந்த அணி மீதான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியவுடன், அங்கிருந்து நீக்கப்பட்டார். இன்று விமல் வீரவங்ஸ், வாசுதேவ நாணயக்கார போன்ற கடுஞ்சிங்கள தேசியக் கும்பலொன்றோடு ஐக்கியமாகியிருந்துகொண்டு, புதிய தேசிய மக்கள் முன்னணி அரசின் மீதான விமர்சனங்களை முன்வைத்துச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்.

நேற்றிரவு உதய கம்மன்பில வழங்கியுள்ள பேட்டியானது, அனுரவைச் சீண்டுவது மாத்திரமல்லாமல் அனுரவுக்கு எதிராக சிங்கள மக்களை உசுப்பேற்றுவது. பேட்டியில் தான் குறிப்பிட்ட விடயங்கள் பொய்யென்றால், அனுர அவற்றை பகிரங்கமாக மறுக்கலாம் என்றும் கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.

“வடக்கிலுள்ள தமிழ் கட்சியொன்று தமது அரசுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளது” – என்று அண்மையில் அனுர குறிபிட்டதன் பின்னணியில், சுமந்திரனின் பெயரை உதய கம்மன்பில வெளியிட்டிருப்பதால், இது என்ன வகையான அரசியல் பேரம்? அவ்வாறு பேசப்பட்டிருந்தால் அதன் உள்ளடக்கம் என்ன? போன்றவற்றை சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய புள்ளியை நோக்கி அனுரவை இழுத்துவந்திருக்கிறார் உதய கம்மன்பில.

இந்த டீல் உண்மையா, உருட்டா என்பதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும். இப்போது சுமந்திரனது பக்க நியாயப்பாடுகளுக்கு வருவோம்.

அமையப்பபோகும் தேசிய மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் தமிழர் தரப்பு இணைந்துகொள்வது சரியான முடிவா என்றால், தமிழ் மக்களது ஆதாரமான கோரிக்கைகளை, அனுர அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துமானால் – அதனுடன் கொள்கையளவில் இணைந்து செயற்படுவது இன்றைய அரசியல் சூழ்நிலையில் மதிநுட்பமானதும் தேவையானதும்கூட.

தமிழர் தரப்பு வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு தொடர்ந்து இறைஞ்சிக்கொண்டும் – அவர்களது நிகழ்ச்சி நிரல்களுக்காகக் காத்துக்கொண்டுமிருப்பதையும்விட, இன்றைய சூழலில் அரசுடன் அர்த்தபூர்வமான இணக்கப்பாட்டுக்குச் செல்வதும், பதிலாக, தமிழர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் செய்து – கையெழுத்துக்கள், வாக்குமூலங்கள் போன்ற புருடாக்களை விடுத்து – செயல்ரீதியாக உறதி செய்வதுகொள்வதற்குரிய தரப்பாக மாறுவதும் வரவேற்கப்படவேண்டியதே.

இதனை முன்னெடுப்பதற்கு சுமந்திரன் முற்றிலும் தகுதியான நபர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. கடந்த ஒரு தசாப்தகாலத்துக்கும் மேலாக, தமிழர் தரப்புக்கும் தென்னிலங்கைக்குமான பாலமாகச் செயற்படுகின்ற – நிதானமான – ஒரு தமிழ் அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே. தமிழ் மக்களது தேசிய அடையாத்தையும் போராட்ட நியாயத்தையும் தனது மாறாத கொள்கைகளாகக் கடைப்பிடிப்பவர். கூடவே, தமிழர் பிரதேசத்தின் பொருளாதார நலன்கள், இராஜதந்திர உறவுகள் என்று எதிர்காலத்தின் மீதான பார்வையோடு உறுதியாகப் பயணிப்பவர்.

இலங்கை அரசியலையும் அரசமைப்பையும் விவரமாக விளங்கிக்கொண்டவர்களுக்குப் புரியும்.

இலங்கை அரசமைப்பும் நாடாளுமன்றமும் பெரும்பான்மையான ஒரு இனத்துக்குச் சார்பானது. சிறுபான்மையினரான தமிழர்களது அரசியல் பலம் அங்கு மிக மிகச் சிறியது. நாளை அனுர குமரா திஸநாயக்க, தமிழீழமே தருவதாக எழுதித் தந்தால்கூட, பத்து வருடங்களில் ஆட்சிபீடம் ஏறக்கூடிய அடுத்த அரசு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அந்தத் தீர்வினை முறியடித்துவிட்டுப்போகலாம். அதனை ஜனநாயக மாற்றம் என்று நியாயப்படுத்தலாம். மாறி மாறி வரும் சிங்கள அரசுகள், கடந்த காலங்களில் ஒட்டியும் வெட்டியும் தமிழர்களது மிச்ச சொச்ச தீர்வு வரைவுகளில் செய்த அலப்பறைகள் இவைதான். தமிழர்களது தீர்வு மாத்திரமல்லாமல், பல்வேறு விசாரணைகளுக்கு அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், அவசரக்குழுக்கள் போன்றவை ஒரு ஆட்சியில் கூடியதும் அடுத்த ஆட்சியில் கலைக்கப்பட்டதும், பல்வேறு குற்றவாளிகள் கைதானதும் – விடுதலையானதும் ஏன் நீதியரசரே நியமனமானதும் இறக்கிவிடப்பட்டதும்கூட இந்த வகை பல்டிகள்தான். ஆக, தமிழர்களது நீண்டகாலப் பிரச்சினைக்குரிய தீர்வு இனியும் இவ்வாறான குழுக்களின் குத்தாட்டத்திற்குள் அகப்படமுடியாது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொள்ளவேண்டிய தீர்வு என்பது – விரும்பியோ விரும்பாமலோ – சிங்களத் தரப்போடு இணைந்து செயற்படுவதன் மூலம் பெற்றுக்கொண்டால் மாத்திரமே, அது நீடித்து நிலைக்கக்கூடியது. அது கடந்தகாலங்களில் எதிர்பார்த்தளவு கைகூடவில்லை. அதற்கு ராஜபக்ஷக்களும் அவர்களது ‘உடன்பிறவா சகோதரரான’ ரணிலும் ஆற்றிய பங்களிப்புக்களை இங்கு பட்டியலிடத்தேவையில்லை. கூடவே, சம்மந்தரை எதிர்க்கட்சித்தலைவராக்கியும் ஒன்றுமே நடைபெறவில்லை என்றெல்லாம் சகட்டுமேனிக்குக் கூறிவிடமுடியாது. ஏனெனில், ஆட்சியிலிருந்த சிங்கள அரசினால் சிங்கள மக்களுக்கே ஒன்றும் நடக்கவில்லை.

ஆனால் –

“இதெல்லாம் கதைக்கு ஆகாது. சிங்களத்துக்கு நாங்கள் பணியமாட்டோம். அவர்களது சிங்கிள் டீக்குக்கூட குனிய மாட்டோம்” என்று வீரம் செறிந்த மறவர்கள் யாராவது மடி கொதித்தால், அவர்கள் மீண்டும் ஆயுதமேந்திப் போராடலாம். அவர்களின் பின்னால் மக்கள் அணிவகுக்கலாம். அவர்களின் பாதையில் – இலங்கை அரசமைப்புக்கு வெளியே – யாருக்கும் கட்டுப்படாத – அரிய தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.