சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷிய சரக்கு விமானம்; அதிர்ச்சி சம்பவம்
சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்படது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சூடானின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷிய சரக்கு விமானத்தை அதிவிரைவு ஆதரவு படையினர் இன்று ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷிய விமானம் ஆயுதங்களை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து ரஷியா விசாரணை நடத்தி வருகிறது.