முச்சந்தி
கனடாவும் காலிஸ்தானும்; இந்தியா கனடா உறவில் விரிசல் ஏன்?… ஐங்கரன் விக்கினேஸ்வரா
இந்தியா கனடா உறவை பாதித்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அத்துடன் இந்தியா மீது தடைவிதிக்க போகிறதா கனடா என்ற ஐயமும் எழுந்துள்ளது.
காலிஸ்தான் அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா – கனடா உறவில் நீண்டகாலமாக விரிசல்களை ஏற்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக கனடாவிலிருந்து இந்திய தூதரை திரும்பப் பெற்ற மத்திய அரசு, டெல்லியிலுள்ள கனடா தூதரை வெளியேறவும் உத்தரவிட்டது.
பிஷ்னோய் கூலிப்படை:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடா நாட்டு பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பிறகு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த கொலைக்கு இந்தியா தான் காரணம் என்று அப்பட்டமாக குற்றம்சாட்டினார். உடனடியாக
அதனை இந்தியா முழுமையாக நிராகரித்தது.
அதன் பிறகு இரு நாடுகளும் அவரவர் பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இதன் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே பாரிய கருத்து மோதல் ஏற்பட்டது.
தற்போது இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
இந்த உறவை சீராக்க சிறிய அளவில் சாத்தியம் இருப்பதாகவும் தோன்றுகிறது. நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்திய தூதர்களை நேரடியாக குறைகூறும் வகையில் கனடா பிரதமர் ட்ரூடோ பேசியது மேலும் சிக்கலை அதிகரித்தது.
கனடா மண்ணில் இந்திய அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறைகளை நிகழ்த்தி வருவதாகவும், இதற்கு பிஷ்னோய் கூலிப்படையை பயன்படுத்திக் கொள்ள முயன்றதாகவும் கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு, இந்தியா மீதான குற்றச்சாட்டுக்குத் தங்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று கனடா கூறியிருக்கிறது.
ஆயினும் ஹர்தீப் சிங் கொலையில் குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன்பே இந்தியாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுடன் தனது அரசு வெறும் ஊகத் தகவலை மட்டுமே பகிர்ந்துகொண்டதாகவும் அதற்கு ஆதாரம் எதுவும் தம்மிடம் இல்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பின்னர் ஒப்புக்கொண்டார்.
காலிஸ்தான – சீக்கிய தனி நாடு?
சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானிய இயக்கத்தை ஆதரித்து, கனடாவில் வாழும் சீக்கியர்கள் வன்முறையை தூண்டிவருவதாக இந்தியா கருதுகிறது. இது தான் இரு நாட்டுக்கும் இடையே நிலவும் முக்கிய பிரச்னையாகும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1984இல் பஞ்சாபில் ஏற்பட்ட போராட்டத்தின் ஒரு மோசமான தருணத்தில் இந்திய ராணுவம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல் ஒன்றை நடத்தியது.
அதன் பிறகு 1984-ஆம் ஆண்டு இந்தியாவின் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலிஸ்தான் பயங்கரவாதியா ?
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை ஒரு “காலிஸ்தான் பயங்கரவாதி” என்று இந்தியா கூறிவருகிறது. ஆனால் கனடா அரசு, கருத்து சுதந்திரத்திற்கும் தனிநபர் சுதந்திரத்திற்கும் ஆதரவளிக்கும் ஒரு நாடாக தன்னை முன்னிறுத்தி வருகிறது.
ஒருவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதை தடுத்து நிறுத்தாது என்றும் கனடா கூறுகிறது. ஆனால் இந்தியா அரசு, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களின் வாக்குகளை கணக்கில் வைத்து இவ்வாறு பேசுகிறார் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியது.
அவருடைய அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் நிராகரிக்கிறது என்ற கேள்வியையும் இந்தியா எழுப்பியது.
இந்தியாவுக்கு தடை ?
இந்தியாவுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாக கனடா வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.
எனினும் கனடா மண்ணில் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளது.
இதற்கெல்லாம் காரணம், கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாதான் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார்.
இதனால் இந்தியா, கனடா இடையேயான உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா ஆதாரம் கேட்டது. இருப்பினும், ஆதாரம் வழங்க மறுத்த கனடா, தொடர்ந்து இந்திய அரசின்மீது குற்றம் சாட்டி வந்தது.
6 தூதரக அதிகாரி கனடா நாடுகடத்தல்:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு குறித்து விமர்சிப்பவர்களின் வாயை அடைக்கும் செயலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். இதை இந்தியா கடுமையாகச் சாடியது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவுகளில் இந்த ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தை ஏற்படுத்திய சேதத்துக்குக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கனடிய அரசு, ஹர்தீப் சிங் கொலையைத் தொடர்புப்படுத்தி, கனடாவுக்கான இந்தியத் தூதர் உள்ளிட்ட 6 தூதரக அதிகாரிகளைக் கனடாவில் வெளியேற்றியதாகத் தெரிவித்தது.
கனடாவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி தரும் வகையில், இந்தியாவும் கனடிய தூதரக அதிகாரிகள் ஆறு பேரை வெளியேற்றியுள்ளது. மேலும் கனடாவுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தாங்கள் மீட்டுக் கொண்டதாகக் கூறியுள்ளது.
இந்திய மாணவர்கள் அச்சத்தில் :
கனடாவில் படித்து வரும், படிக்க விரும்பும் மாணவர்களும், படிப்பை முடித்ததும் அங்கு வேலையைத் தொடர்வதற்கு விரும்புபவர்களும், இந்தியர்களுக்கு விசா அனுமதி கொடுப்பதில் கனடா கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், இருநாடுகளுக்கும் இடையேயான விரிசலால், விசா கொள்கைகள் இந்தியர்களைப் பாதிக்க வாய்ப்பில்லை. இந்தப் பிரச்சினைகள் குடியேற்றப் பிரச்சினைகளில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா – கனடா உறவில் மோசம்:
பனிப்போருக்கு பிறகு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா உறவுகளை மேம்படுத்தி, படிப்படியாக முழுமையான சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால் ஜி7, நேட்டோ நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டு வரும் விரிசல் மேலும் அதிகரிக்கிறது. எந்த மேற்கத்திய நாட்டுடனும் இவ்வளவு மோசமான உறவு இல்லை
சோவியத் யூனியன் உடைந்த பனிப்போருக்கு பிறகு எந்த மேற்கத்திய நாட்டுடனும் இந்தியாவின் உறவு இவ்வளவு மோசமாக இருந்ததில்லை என்பதும் உண்மையே.