முச்சந்தி

பொதுத் தேர்தல்: அநுரவுக்கு மனோ விடுத்துள்ள கோரிக்கை

“மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய காணி உரிமை உத்தரவாதங்களையும், வடக்கு – கிழக்கில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றல், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும் இருக்கின்ற மேலதிக இராணுவ முகாம்களை மூடல், இவை மூலம் தனியார் காணிகள் விடுவிப்பு ஆகியன அடங்கிய காணி உரிமை உத்தரவாதங்களையும் வழங்கி விட்டு அநுர அரசு தமிழ் மக்களின் வாக்குகளை மலையகத்திலும், வடக்கு – கிழக்கிலும் கோரலாம்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று சனிக்கிழமை விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாம் பங்காளிகளாக இருந்த நல்லாட்சியின்போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய எமது கட்சிகளின் வலியுறுத்தல் காரணமான இராணுவம் வசம் இருந்த கணிசமான காணிகள் வடக்கில் விடுவிக்கப்பட்டன. பின்னர் ஜனாதிபதி கோட்டாபய காலத்தில் இந்தக் காணி விடுவிப்பு நின்று போனது. ஜனாதிபதி ரணிலின் இரண்டு வருட ஆட்சி காலத்தில் இது பற்றி பேசப்பட்டது. ஆனால், காரியம் எதுவும் நடக்கவில்லை.

இன்று, போர் முடிந்து 15 வருடங்களுக்குப் பின்னும் இன்னமும் நிலைபெற்று இருக்கும் மேலதிக இராணுவ முகாம்களை மூடி, விடுவிக்கப்படாமல் எஞ்சி இருக்கின்ற தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அநுர அரசின் கொள்கைதான் என்ன என்பது தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.

மலையகத் தமிழர்களைக் காணி உரிமையை பிரதான அம்சமாகக் கொண்ட விரிவான ஒரு சாசனத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித பிரேமதாஸவுடன் செய்திருந்தோம். துரதிஷ்டவசமாக அவர் வெற்றி பெறவில்லை.

ஜனாதிபதி ரணிலின் இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் மலையக மக்களுக்குக் காணி வழங்கல் பற்றி மீண்டும், மீண்டும் பேசப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூற பட்டது. ஆனால், காரியம் நடக்கவில்லை. ஆனால், காணி உரிமையை சட்டப்படி வழங்க வாய்ப்பு இருந்தும் தனது இரண்டு வருட ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் அதைச் செய்ய ரணில் தவறி விட்டார்.

இன்று தோழர் அநுர ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். இது பற்றி மகிழ்ச்சியே. மலையகத்தில் வீட்டுக் காணி, வாழ்வாதாரக் காணி, தனி வீடு ஆகியன அடங்கிய காணி உரிமையைப் பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு வழங்குவது தொடர்பில், இன்று மலையகத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை கோரும் அநுர அரசின் கொள்கைதான் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்

இதற்கான தெளிவான பதில்களையும் வழங்காமல், தமிழ் மக்களுக்கு எந்தவித உத்தரவாதங்களையும் தராமல், மறுபுறம் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும் ஏறக்குறை போர்க் குற்றவாளிகள் போல் விமர்சித்து கொண்டு, தமிழர்களிடம் வாக்குக் கோரும் போக்கைத்தான் என்.பி.பி. – ஜே.வி.பி. ஆட்சியாளர்கள் தொடர போகின்றார்களா? எனக் கேட்க விரும்புகிறேன்.

200 வருடங்களாகக் கொத்தடிமை வாழ்வு வாழும் பெருந்தோட்ட மக்கள் பற்றியும், கிளிநொச்சியில் வருடக்கணக்கில் போராடும், காணாமல்போனவர்களின் குடும்பங்கள் பற்றியும், அனுதாப வார்த்தைகளை அவ்வப்போது அள்ளிக் கொட்டுவது மாத்திரமே என்.பி.பி. – ஜே.வி.பி. ஆட்சியாளர்களின் கொள்கையாக இருக்கப் போகின்றதா? எனவும் கேட்க விரும்புகின்றேன்.

வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு இருக்கும் நபர்களின் அனுதாப வார்த்தைகளோ, உபதேசங்களோ எமக்குத் தேவையில்லை. நியாயம்தான் எமக்குத் தேவை என்பதைக் கூறி வைக்கவும் விரும்புகின்றேன்.” – என்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.