முச்சந்தி

தமிழ்த் தேசியப் போலிகளை மண்ணிலிருந்து துடைத்தெறிவதே உண்மையான மாற்றமாகும்

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.’
இச் சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை.

தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது.

தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

மேலும், மாற்றம், ஊழல், இளையோர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் எனும் தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் வடக்கு – கிழக்கில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புக்களை மழுங்கடிக்கப்படுவதும் அதன் மூலம் தென்னிலங்கைத் தரப்புக்களிற்கும், அரசியல் வேலைத்திட்டங்கள் ஏதுமின்றிய சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை சீர்குலைக்கும் ஒன்றாகும்.

திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கி தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களிற்கு முற்றிலும் முரணான இமயமலைப் பிரடகணம் எனும் பெயரில் தமிழ் மக்களை அரசியல் சூழ்ச்சியொன்றினுள் தள்ளும் முயற்சியென்றும் இடம்பெறுகின்றதென்றும், அது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சிப்பதோடு, தமிழ் மக்களின் இறைமை அரசியலை தனியே அடையாள அரசியலினுள் சுருக்குவதற்கான கபட முயற்சியென்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.