அவுஸ்திரேலியா குடியரசு நாடாக சாத்தியமா?… முடியாட்சி முடிவுற வாக்கெடுப்பு நடக்குமா ??…. ஐங்கரன் விக்கினேஸ்வரா
(நீண்ட காலமாக இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று, குடியரசாக மாறுவதே அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் திட்டமாகும். ஆயினும் அவுஸ்திரேலியா குடியரசு நாடாக சாத்தியமா என்பதும், முடியாட்சி முடிவுற வாக்கெடுப்பு எப்போது என்பதும் இன்னமும் தெரியவில்லை)
அவுஸ்திரேலியா தொடர்ந்தும் பிரித்தானிய மன்னரின் முடியாட்சிக்கு கீழ் இருக்க வேண்டுமா அல்லது சுதந்திரமான குடியரசு நாடாக வேண்டுமா என்பதை அவுஸ்திரேலிய மக்கள் முடிவு செய்ய வேண்டிய காரியம் என்று மன்னர் சார்ள்ஸ் தெரிவித்திள்ளார்.
பிரித்தானிய மன்னர் அவுஸ்திரேலிய வருகை:
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவர் மனைவி ராணி கமீலா இருவரும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
சிட்னி மற்றும் கான்பராவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போது அவுஸ்திரேலியாவில் மன்னரின் முடியாட்சியின் எதிர்காலம் குறித்த விவகாரங்கள் ஒரு பிரச்சனையாக ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மன்னரின் வருகைக்கு முன்னதாக மன்னரின் சார்பாக பக்கிங்ஹாம் அரண்மனையும், அவுஸ்திரேலிய குடியரசு இயக்கமும் தங்கள் கருத்துக்களை காரசாரமாக பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா குடியரசு வாக்கெடுப்பு :
இந்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலியாவின் அரச தலைவர் பதவியில் இருந்து மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தது.
ஆயினும் குடியரசாக மாறுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பிரதமர் அந்தோனி அல்பனீஸின் நீண்டகால கொள்கையாகும். கடந்த ஆண்டு அரசாங்கம் பழங்குடியினர்க்கான வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்தது. பழங்குடியின மக்களுக்கு அதிக அரசியல் உரிமைகளை வழங்கும் திட்டத்தை அவுஸ்திரேலியர்கள் பெருமளவில் நிராகரித்த வாக்கைடுப்பு கடந்த வருடம் நடந்தது.
பழங்குடியின மக்களை அங்கீகரிப்பதற்காக அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு எதிராக ஆறு மாநிலங்களும் வாக்களித்தன. இது ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கும் என்று ஆதரவாளர்கள் பலரும் கூறினார்கள். ஆனால் எதிர்ப்பாளர்கள் நாட்டை பிளவுபடுத்துவதாக கூறினர்.
நீண்ட காலமாக இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து பிரிந்து செல்வது அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் திட்டமாகும்.
வரலாற்று ரீதியில், 1999 இல் ஒரு வாக்கெடுப்பில் முடியாட்சியுடனான உறவுகளை துண்டிப்பதற்கு எதிராக நாடு வாக்களித்தது. அதன் பின்னர் கால் நூற்றாண்டில் மற்றொரு வாக்கெடுப்புக்கான அழைப்புகள் கோரப்பட்டன.
நியூசிலாந்தும் முடியாட்சியை விட்டு வெளியேறும் ?
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கிறிஸ் ஹிப்கின்ஸ், தனது நாடும் விரைவில் முடியாட்சியை விட்டு வெளியேறும் என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் மன்னரை நீக்கிய கடைசி நாடாக 2021 ஆம் ஆண்டில் பார்படாஸ் உலகின் புதிய குடியரசாக மாறியது. அதன் அரச தலைவராக இருந்த எலிசபெத்தை நீக்கிய பிறகும், அந்நாடு காமன்வெல்த்தில் தொடர்ந்து இருக்கிறது.
பார்படாஸுக்கு முன்பு, 1992 இல் மொரீஷியஸ் நாடும், பிரிட்டிஷ் மன்னரை நீக்கியது. உத்தியோகபூர்வ விழாவின் போது ஒரு உரையில், அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ் – பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது கரீபியன் தீவு அனுபவித்த “அடிமைத்தனத்தின் கொடூரமான கொடுமையை” வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
அவுஸ்திரேலியக் கூட்டமைப்பு:
தற்போது முடியாட்சியை நிறுத்தக் கோரும் அவுஸ்திரேலியா 1901, சனவரி 1 இல், அவுஸ்திரேலியக் கூட்டமைப்பாக நிறுவப்பட்டது. அப்போது பிரித்தானிய இராச்சியத்திற்குள் அடங்கிய “பொதுநலவாய அவுஸ்திரேலியா” பிறந்தது.
1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சு மாநிலத்தின் ஒரு பகுதி அவுஸ்திரேலிய தலைநகராக தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் கூட்டமைப்பின் தலைநகரம் கான்பராவில் 1927 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
அதுவரையில் மெல்பேர்ண் நகரம் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. தெற்கு அவுஸ்திரேலியவின் பகுதியாக இருந்த பிரதேசம் 1911 இல் நடுவண் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
முதலாம் உலகப் போரில் அவுஸ்திரேலிய போரில் ஈடுபட்டது. கலப்பொலி போரில் அவுஸ்திரேலிய வீர்களின் பங்களிப்பு இந்நாட்டு இராணுவத்தினரின் முதலாவது பெரும் போர்ப் பங்கெடுப்பு ஆகும். இப்போரில் அவர்கள் தோல்வியடைந்தாலும், இந்நடவடிக்கை நாடொன்றின் எழுச்சியாக பெரும்பாலான அவுஸ்திரேலியர்களால் கணிக்கப்படுகிறது.
ஐரோப்பியர் வருகை:
அவுஸ்திரேலியாவில் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது.
அவுஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பிய டச்சு மாலுமியான வில்லெம் சான்சூன் என்பவர், கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார்.
17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு புதிய ஒல்லாந்து (Nova Hollandia) எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை.
அவுஸ்திரேலிய – குடியரசு அல்லது முடியாட்சி?
ஐக்கிய இராச்சியத்தில் 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வெசிட்மின்சுடர் சட்டம் அவுஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இருந்த அரசியலமைப்புத் தொடர்புகளைப் பேணி வந்தாலும் 1942 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உப சட்டம் 1931 சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
1942 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் ஐக்கிய இராச்சியத்தின் தோல்விகளும், ஜப்பானியப் பேரரசின் முற்றுகையும் அவுஸ்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணி சேர வாய்ப்பாக இருந்தது.
1951 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் அன்சாட் என்ற பாதுகாப்பு உடன்பாட்டை அவுஸ்திரேலியா ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து மக்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது.
வெள்ளை அவுஸ்திரேலிய கொள்கை:
வெள்ளை அவுஸ்திரேலிய கொள்கை முடிவுக்கு வந்ததை அடுத்து 1970களில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து அவுஸ்திரேலியவின் மக்கள் பரம்பல், பண்பாடு, மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படலாயின.
அவுஸ்திரேலியவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்து வந்த அரசியல் சட்ட இணைப்பு 1986 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவுஸ்ஸ்திரேலிய மாநிலங்களில் பிரித்தானியாவின் பங்கு முடிவுக்கு வந்தது.
அவுஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றுவதற்காக 1999 இல் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் 54 விழுக்காட்டினர் எதிராக வாக்களித்தனர்.
அவுஸ்திரேலிய மக்களின் முடிவு தற்போது மன்னரின் வருகைக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் குடியரசுக்காக பிரச்சாரம் செய்யும் குழுவின் சந்திப்பிற்கு முன்னதாக இது இணக்கமான பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது.
பக்கிங்ஹாம் அரண்மனை கடிதத்தின் உள்ளடக்கங்கள் கூடுதலாக எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும், நீண்ட காலமாக நீண்ட இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து பிரிந்து செல்வது அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் திட்டமாகும். இவ்வருடம் சாத்தியம் இல்லாவிடினும் எதிர்காலத்தில் சாத்தியமா என்பது கேள்விக்குறியாகும்.