அனுபவசாலிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்!; ரணில் வேண்டுகோள்.
இலங்கை அதன் வெளிநாட்டுக் கடனை மீள செலுத்த ஆரம்பிக்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை பதினைந்து சதவீதமாக அதிகரிக்க வேண்டிய சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்தார்.
அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவம் வாய்ந்த அணிதான் அடுத்த பாராளுமன்றத்திற்கு தேவை என்றும் வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்க தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழு பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி , நிதி பலம் கொண்ட பாராளுமன்றம் வலுவாக இருக்க வேண்டுமானால் அந்த குழு வெற்றி பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
எம்மால் கடனை மீள செலுத்த முடியாது நாடு வங்குரோத்தடைந்துவிட்டதாக அறிவித்த போது நான் ஜனாதிபதியாக நாட்டை பொறுப்பேற்றேன்.
அந்த சந்தர்ப்பத்தில் எனது பிரதான இலக்கு கடன் நிலைபேற்றுத்தன்மையை ஏற்படுத்தி வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதாகவே இருந்தது. அதற்காக அந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியம், எமக்கு கடன் வழங்கிய 18 நாடுகள் மற்றும் தனியார் பிணைமுறி பத்திரதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
அதன்படி, நாம் கடன் நிலைபேற்று தன்மையை ஏற்படுத்தியமை குறித்தும், அதன் பின்னர் நமது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்கிக் கொள்வது குறித்தும் உடன்பாட்டை எட்டினோம். இந்த நடைமுறைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் தனியார் பிணைமுறி பத்திரதாரர்களுடனும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இவ்வாறு நாம் உருவாக்கிய முறைமையின் காரணமாக எமக்கு தற்போது சர்வதேச வங்கிகளுடன் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அத்தோடு சர்வதேச உதவிகளும் கிடைக்கும். எமது கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைந்துள்ளமையால் தற்போது வங்குரோத்து நிலைமையும் முடிவுற்றிருக்கிறது.
நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து மீட்பதற்காக நான் கடந்த பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றினேன். அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு அந்த பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றிய எனது அதிகாரிகள் குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இப்போது எமக்கு அந்த நிலைபேற்றுத்தன்மை ஒப்பந்தத்தை செயற்படுத்த வேண்டிய பொறுப்புள்ளது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் திருத்தத்தை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறெனில் அந்த திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். அந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்தி நிலைபேற்றுத்தன்மையை அடைவதற்காக எமக்கு பல்வேறு இலக்குகள் உள்ளன.
முதலாவதாக 2028ஆம் ஆண்டிலிருந்து எமக்கு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. 2027ஆம் ஆண்டாகும் போது எமது அரசாங்கத்தின் வருமானம் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 15 சதவீதமாகக் காணப்பட வேண்டும். தற்போது அது 12 சதவீதமாகக் காணப்படுகிறது. எனவே அந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். பிரதானமாக இவ்வாண்டிறுதிக்குள் 2019ஆம் ஆண்டு காணப்பட்ட தேசிய உற்பத்தி வருமானத்தைப் பெற முடியும்.
அதேவேளை அந்நிய செலாவணி கையிருப்பையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அந்த அந்நிய செலாவணி கையிருப்பானது சராசரியாக 10 – 14 பில்லியன் டொலர்களாகக் காணப்பட வேண்டும். இந்த இலக்கை அடைந்ததன் பின்னர் எமக்கு கடன்களை மீள வேண்டியுள்ளது. இந்த காலவரையறைக்குள் எமக்கு மேற்கூறிய இலக்குகளை அடைய வேண்டியுள்ளது. அதற்கு துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் பலவற்றை செயல்படுத்துவதாகும். இவ்வனைத்து விடயங்கள் தொடர்பான பொறுப்பும் பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்தவொரு கட்சிக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடையாது. எவ்வாறிருப்பினும் புதிய பாராளுமன்றத்தின் பொறுப்புக்களை கடந்த பாராளுமன்றத்தில் பெற்ற அனுபவத்தை நிறுத்த வேண்டியுள்ளது.
அதாவது, கடந்த பாராளுமன்றத்தில் இந்தப் பொறுப்புகளை ஏற்க எவரும் முன்வரவில்லை. நான் முன்வந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அரசாங்கத்தை அமைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றேன்.
அடுத்த பாராளுமன்றத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்கக் கூடாது. இந்த பாராளுமன்றத்தில் மூன்று பிரதான குழுக்கள் உள்ளன. அந்த மூன்றில் ஒரு குழுவைப் பற்றி நான் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகும். நான் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன். பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, புதிய கூட்டணி உள்ளிட்ட ஏனைய சகல கட்சிகளும் ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன. எனது தலைமைத்துவத்தின் கீழ் இவர்கள் பணியாற்றினர்.
தற்போது இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். அந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரும் என்னுடன் இணைந்து பணியாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒரு பகுதியினரும் இந்தத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றனர். இவர்கள் புதிய ஜனநாயக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனது தலைமைத்துவத்தின் கீழ் அவர்கள் பொதுத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. அவர்கள் முறையாக அந்த பணிகளை முன்னெடுத்திருக்கின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த அனுபவம் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் நிச்சயம் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, பாராளுமன்றத்தில் இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இல்லாமல் பாராளுமன்றத்தை நடத்திச் செல்ல முடியாது. அவ்வாறில்லை எனில் இலக்குகளை அடைவதில் தோல்வியடைய நேரிடும். எனவே ஐக்கிய தேசிய கட்சியில் எமக்காக பணியாற்றியவர்களும் எமக்கு ஒத்துழைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் போன்று புதிய ஜனநாயக கட்சியின் ஏனைய கட்சிகளும் எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோருகின்றேன். முன்னதாக வாக்களிக்காதவர்களிடம் கோரிக்கையொன்றை விடுக்கின்றேன். நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு இந்த அனுபவம் வாய்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
புதிய பாராளுமன்றத்தில் உங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் நாடு என்ற ரீதியில் மீண்டு வர முடியும். தவறினால் நாடு மீண்டும் சரிவடையும். மீண்டும் வரிசையில் நிற்கும் காலத்திற்கு நகர வேண்டியேற்படும். எனவே அனைத்து வேட்பாளர்களும் தமது பெறுமதியான வாக்குகளை எரிவாயு சிலிண்டருக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.