”பிச்சை புகினும்”… சிறுகதை… சோலச்சி
மேகக் கூட்டங்கள் வானத்தை இருட்டாக்கிக் கொண்டு இருக்க….. வாகன நெரிசலால் அம்பத்தூர் நகராட்சிக்கு மூச்சு திணறியது. செங்குன்றம் பேருந்தில்தான் நான்கு வயது மகனுடன் கூட்ட நெரிசலில் நின்றவாறு வந்துகொண்டு இருந்தாள் அங்காயி. பேருந்தில் கூட்டம் நிறைந்து காணப்பட்டதால் எல்லோருமே உஸ்அஸ் என வாயால் ஊதிக்கொண்டனர். பலருக்கும் நசநசவென வேர்வை வழிந்து கொண்டு இருந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாத பிசுபிசுத்த வாடை மூக்கை அங்கிட்டும் இங்கிட்டுமாக சுளிக்க வைத்தது. எப்போது இறங்குவோம் என்ற மனநிலையில்தான் எல்லோருமே இருந்தனர்.
“உசுர காப்பாத்த எம்பூட்டு தூரம் போக வேண்டிருக்கு. ஆம்பள ஒழுங்கா இருந்தா நான் எதுக்கு சிமிண்டு கலவயில நொந்து சாகனும். ஊரு உலகத்துல இல்லாத அதிசய புருசன் தேடிக்கொண்டு வந்து கட்டி வச்சாக. ம்….அந்த மனுசன் எங்கிட்டு குடிச்சிட்டு கெடக்குறானோ… காருவ அரைரூவாய்க்கி புண்ணியமிருக்கா. பெத்த புள்ளைகளுக்கு ஒரு ஆரஞ்சு முட்டாயி வாங்கி கொடுத்து கண்ணால பாக்க விதி இருக்கா. போதாகொறைக்கி வூட்ல இருக்க பண்டம் பாத்திரத்தை எல்லாம் வித்தே குடிச்சே அழிச்சிட்டான். மண்ணு பான சட்டில சமைக்கிறேன். அதையும் தூக்கிப் போட்டு லபக்கட்டீனு ஒடைக்கிறான். அடுப்புல வைக்கிற வெறக கூட வித்த மனுசன் வூட்டுக் கூரையத்தான் இன்னும் விக்கல. செத்த அசந்தா அதையும் வித்து குடிச்சிருவான். என்னத்த சொல்ல ஏந்… தல கெடந்து உருளுது…..” தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டாள் அங்காயி.
“பச்ச புள்ளையே பள்ளிக்கொடத்துல காத்தாலேயே விட்டுட்டு வந்தேன். வீடு வந்துச்சோ…? என்ன பண்ணுதோ…? இந்த எழவு பஸ்சு என்னடான்னா டொர்ரு…..டொர்ருனு என்னய மாரியே நொந்து போய்ருக்கு போல… கொஞ்சம் வெரசா போனாதான் என்ன…” மகனை இடுப்பிலும் ஒயர் கூடையை ஒரு கையிலுமாக கம்பியில் சாய்ந்து நின்றவளின் நெனப்பு எல்லாம் மகளைப் பற்றியே இருந்தது.
குழந்தையோடு நிற்கும் இவள் மீது இரக்கப்பட பேருந்தில் ஒருவரும் இல்லை. வேலைக்கு போயிட்டு திரும்புகிறவர்களுக்கு இந்தப் பேருந்தை விட்டால் இன்னும் ஒருமணி நேரம் கழித்துதான் அடுத்த பேருந்து. பலரும் மூட்டை முடிச்சுகளோடு முண்டியடித்துக் கொண்டு இருந்தனர். யாரும் யார் மீதும் இரக்கப்பட சூழல் வாய்க்கவில்லை. அவரவரும் இருக்குற இடத்தில் வசதிக்கு தகுந்தமாரி நின்று கொண்டனர். சாலையில் நிற்கும் ஒன்றிரண்டு மரங்கள் அசைந்து கொடுத்தால்தான் புழுக்கம் குறையும். சன்னல் வழியாக எட்டிப்பார்த்த காற்று கூட்டத்தைப் பார்த்ததும் மிரண்டு போனது. பேருந்தின் குடல் பிதுங்கி நகருவதுபோல்தான் இருந்தது.
“அய்யே…. அங்கிட்டு தள்ளி போயி நில்லுவே…. சூர பத்தமாரி தலைய வச்சுக்கிட்டு கண்ணுல குத்துதுல. தலமயித்த அள்ளி கட்டிக்க வேண்டியதுதானே.. ம்…வேலைக்கு போற இடத்துல தண்ணியா இல்ல… நாலுவாளி ஊத்திக்கிட்டு வர வேண்டியதுதானே. பக்கத்துல நிக்கவே ஒரு மாரியா இருக்கு..” கடிந்து கொண்டாள் ஒருத்தி.
“ஆத்தா….. நானு மேக்கப்பு போட்டுக்கிட்டு இருந்தேனா ஏம் புள்ளைக கெதி நடுத்தெருவுக்கு வந்துரும்த்தா. ஏந் தலைவிதி குடிகாரப் பயலே கட்டிக்கிட்டு மாரடிக்கிறேன். கொஞ்ச நேரம் பொறுத்துக்க தாயி அம்பத்தூர்ல வெரசா எறங்கிக்கிறேன்…” வேண்டிக் கொண்டாள் அங்காயி.
கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்த மகனை தாயின் வயிற்றில் இறுக ஒட்டிக் கொண்டு இருக்கும் குட்டிக்குரங்கைப் போல் தோளில் சாய்த்து கொண்டாள்.
“ஏலே… அங்காயி. அவன கெட்டியா புடிச்சுகிட்டு எறங்கப் பாருலே. நம்ம எறங்குற எடம் வரப்போவுது…” மாரியாயி சொன்னதும் படிக்கட்டு பக்கமாக முண்டியடித்து நகர்ந்து கொண்டிருந்தாள். நடுவில் நின்று கொண்டு இருந்தவர்களால் விலகி நிற்கவும் முடியவில்லை. குளத்தில் முக்குளித்து எழுந்தவள் போல் வியர்வையில் நனைந்து மூச்சு முட்ட படிக்கட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அலை கடலில் ஆடி அசைந்து நிற்கும் படகை போல் பேருந்து நின்றதும் சிறைச்சாலையில் இருந்து விடுதலையானவள் போல் தன் மகனை கீழே இறக்கி முந்தானையை இறுக்கி இடுப்பில் சொருகிக் கொண்டாள். நெதம்நெதம் கேவலப்பட்ட பொழபாப்ல இருக்கு… இம்பூட்டு சனத்தையும் ஓரே வண்டிலதான் ஏத்திக்கிட்டு வரணுமா..? பாழாப்போன கெவுருமண்டு இந்த நேரத்துக்கு இன்னோரு வண்டி விட்டாதான் என்னவாம்..? ஏழபால இருக்குற வரைக்கும் இடிபட்டே சாகனும்கிறது தலைவிதி போல….. முணுமுணுத்தவாறு தலை முடியை அள்ளி கொண்டை போட்டுக்கொண்டு பெருமூச்சு விட்டாள். உ….ஸ்….. அம்மாடியோவ்…… ஆளை விட்டால் போதும் என்பதாக இருந்தது.
காலையில் தனது மகள் கேக் வாங்கி வரச் சொன்னது அங்காயிக்கு நினைவு தட்டியது. “மாரியக்கா… இவன பாத்துக்க. ஏம் மவ காத்தாலயே கிரீமு வச்ச கேக்கு கேட்டுச்சு. வெறுங்கையோட போனா பச்சப்புள்ளக்கி மூஞ்சி பொசுக்குனு போயிரும். அந்த கடையில வாங்கிக்கின்னு வந்தர்றேன்” சொல்லிவிட்டு பேக்கரியை நோக்கி வேகமாய் நடை போட்டாள்.
“பய மூஞ்சி ஒடம்பு பூராம் தூசி. சிமுண்டுல வெளையாண்டா சாம்ப பூத்தமாரி ஆயிருது. வூட்ல போயி காலுகைய நல்லா கழுவிவிட்டு வேப்பெண்ணெய தேச்சு விடச் சொல்லனும்….” சொல்லிக்கொண்டே முந்தானையால் அவனுக்கு துடைத்து விட்டாள் மாரியாயி.
“அண்ணே….. எங்கப்பாவுக்கு முடியலண்ணே…. கையெல்லாம் ஆடுதுணே… அங்கே இருக்காருண்ணே… காசு கொடுங்கண்ணே மருந்து வாங்கனும்….” பரட்டை தலையோடு மேல்சட்டை அணியாமல் பள்ளிக்கூடத்து பாவாடை மட்டும் அணிந்தபடி டீக்கடையில் நின்றவர்களிடம் கையேந்திக்கொண்டு இருந்தாள் அந்தச் சிறுமி.
“அட இதுகல பெத்தவனுகளுக்கு இப்பெல்லாம் இதுதான் தொழிலுப்பா. நாலு பேர் கிட்ட கையேந்துனா நோகாம நாலு காசு கெடைக்கிதுல. புள்ளைகள பிச்சை எடுக்க விட்டுட்டு இங்கிட்டுதான் எங்கனயாச்சும் நிப்பானுக. இவனுகமாரி ஆளுக பொம்பளப் புள்ளைக வயசுக்கு வந்துச்சுனா அதுகள வச்சே சொச்ச காலத்த கடத்திருவானுக…” டீக்கடையில் ஒருவர் சொல்ல….. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை அவருக்கு எப்புடியாச்சும் காசு கொண்டு போயி கொடுத்துறனும் என்கிற சிந்தனை மட்டுமே அவளிடம் மேலோங்கி இருந்தது. அதனால் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒவ்வொருவரிடமும் அண்ணே……அண்ணே என்று கையேந்திக் கொண்டே இருந்தாள்.
சிறுமியின் குரல் கேட்டு திரும்பினாள் அங்காயி. “அய்யய்யோ…. என்ன பெத்த தாயி நிக்கிற கோலத்த பார்ரே……” வாங்கிய கேக்கை மடியில் கட்டிக்கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு அலறியபடி ஓடினாள். அள்ளிக் கட்டிய கொண்டை அவிழ்ந்தது. ஆங்காங்கே நின்றவர்கள் ஈ……னு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். என்ன ஏதுனு விசாரிப்பதற்கோ ஆறுதல் சொல்வதற்கோ யாரும் முன்வரவில்லை. யாரு எப்புடி போனா நமக்கென்ன…
ஏலே…… அங்காயி… என்னலே ஆச்சு….? உரக்க கத்திய மாரியாயி சின்னவனை தூக்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு அவளை நோக்கி ஓடினாள்.
முட்டி போட்டவாறு தன் மகளை இறுக அணைத்துக் கொண்ட அங்காயி ஓ…வென கதறினாள். அவளின் கையிலிருந்த ஒன்றிரண்டு சில்லரைகளையும் தட்டி விட்டாள். அவை கடை வீதியெங்கும் சிதறியது. இருவரின் கண்களும் மாலைமாலையாக கண்ணீரை வடித்தது. மாரியாயும் வந்து சேர்ந்தாள். அக்காவும் அம்மாவும் அழுவதைப் பார்த்து அவனும் அழ ஆரம்பித்தான். என்னாச்சு தெரியாமல் தரையில் குக்கிக்கொண்டு இருந்தாள் மாரியாயி.
“அம்மாடி ஒன்னைய பள்ளிக்கொடத்துலதானே விட்டுட்டு போனேன். நீங்க படிச்சு ஆளா வரணும்னுதானே சிமிண்டுலயும் கல்லுலயும் கெடந்து படாதபாடுபடுறேன். எடுக்காத வரமெல்லாம் எடுக்குறேன். இந்தச் சிறுக்கி மக குத்துக்கல்லுமாரி இருக்கும்போதே இம்புட்டுச் சீரழிவா. இந்தக் கட்ட உசுரோட நடமாடுறதே ஒங்களுக்காகத்தானே…. சொல்லு தாயி….. ஏந்தாயி இப்படி செஞ்ச…..” ஆரத்தழுவி அழுதாள்.
“ம்…….ம்….” கையை கண்ணில் தேய்த்து அழுது கொண்டு இருந்த ஏழு வயது மோகனா தேமியபடி பேச ஆரம்பித்தாள். அவளின் முன்னால் அந்தக் காட்சி நிழலாடியது.
வீட்டில் எதையெதையோ உருட்டிக் கொண்டிருந்த சுந்தரம்… கடைசியாக துணி மூட்டையை எடுத்து உதறிக் கொண்டு இருந்தார். முகம் படபடத்தது. வேர்த்துக் கொட்டியது. கைகள் நடுங்கியது. எதிர்பார்த்தது எங்குமே கிடைக்கவில்லை. இங்க இல்லாம வேற எங்க இருக்கும்…. மீண்டும் துணிகளை அள்ளி உதறினார்.
“அப்பா….. என்னப்பா தேடுற……” என்றவாறு உள்ளே நுழைந்தவளிடம்… பள்ளிக்கூடம் விட்டாச்சாமா. அப்பாவுக்கு கையெல்லாம் நடுங்குதுல்ல. மருந்து வாங்கணும்… இங்கதான் ஒங்க அம்மா காசு வச்சிருப்பா…” சொல்லிக் கொண்டே மீண்டும் தேட ஆரம்பித்தார்.
“அம்மா……. நெலக்கி மேல கூரையிலதாம்பா காச சொருவி வச்சுச்சு.”
“அடியே…. ஏம்புட்டு செல்ல மவளே….” என்றவன் துணி மூட்டையை போட்டுவிட்டு கதவு நிலைக்கு மேல் உள்ள கூரையில் சொருகி இருந்த துணியை எடுத்துப் பார்த்தார். ஐம்பது ரூபாய் இருந்தது. கட்டுன புருசனுக்கு தெரியாம சிறுவாடு சேக்குறாளோ….. எனக்கு மிஞ்சிதான்டி எதுவுமே….. என்று மனசுக்குள் குதூகலித்துக் கொண்டார்.
ம்……இத வச்சு என்ன பண்றது… யோசனையை சுழல விட்டுக் கொண்டே “இன்னும் கொஞ்சம் காசு வேணும்டி தங்கம்… வேற எங்காச்சும் அம்மா வச்சுருக்கா….. கண்கள் சொருகிய நிலையில் பரிதாபமாக கண் கலங்கியதைப் பார்த்து அவளும் கண் கலங்கினாள்.
அப்பாவுக்கு எதுவும் ஆயிறக்கூடாது…. என நினைத்துக் கொண்டாள். “தெரியலப்பா… வச்சுருந்தா சொல்ல மாட்டனாப்பா…. இந்தக் காசுக்குப் போயி சீக்கிரம் மருந்து வாங்குப்பா…..” அவரின் கண்களை துடைத்து விட்டுக்கொண்டே சீக்கிரம் போ…..ப்பா என மெதுவாய் தலை ஆட்டினாள். அவரோ விடுவதாக இல்லை. காசுக்கான வழியையும் கண்டுபிடித்தார்
“அப்படினா… நா சொல்ற மாதிரி கேளுடிமா. இல்லேன்னா அப்பா செத்துப் போயிருவேன்ல. பாரு.. கையெல்லாம் நடுங்குது…..” அவரின் கண்களிலிருந்து மளமளவென கண்ணீர் வடிந்தது.
“அப்பா அழுகாதப்பா. நீ……வேணும்பா..” சுந்தரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பித்தேம்பி அழுதாள்.
இதைத்தான் அவர் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார். சில நொடிகள் கூட தாமதிக்கவில்லை. அவரின் விஞ்ஞான மூளை அதி வேகமாக செயல்படத் தொடங்கியது.
அவளின் மேல் சட்டையைக் கழட்டினார். தலை முடியை பரட்டையாக்கினார். அப்பா எதற்காக இப்படி செய்கிறார் என்று புரியாதவளாய் பிரம்மை பிடித்தவள் போல் சுந்தரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் நெனப்பு எல்லாம் அப்பாவுக்கு ஒன்னும் ஆகிவிடக்கூடாது என்பதாகத்தான் இருந்தது.
தன் மகளை கையில் பிடித்துக் கொண்டு அவிழ்ந்த கைலியை இடுப்பில் கட்டுவதற்கு நேரம் ஒதுக்காமல் வாயில் கடித்துக் கொண்டே நாராயணன் தெருவிலிருந்து அந்த குறுக்குச் சந்து வழியாக அம்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார். இங்கே எதற்காக கூட்டி வந்தார் என்று புரியாமல் சுந்தரத்தை மிரட்ச்சியோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் மோகனா.
அவ்வழியே சென்றவர்கள் சுந்தரத்தை வேடிக்கை பார்த்தபடியே சென்றனர். குடிகார பய எதுக்கு இம்புட்டு வெரசா அந்தப் பாலம்புள்ளைய சட்டத் துணிமணி உடுத்தாம இழுத்து போறான்.. குடுச்சு குடுச்சு கிறுக்குப் புடுச்சுருச்சோ…. என்ன ஏதுனு கேட்டா மல்லு மல்லுனு சண்டைக்கி நம்ம மேல ஏறிருவான். வேலக்கிப் போன அவளையும் காணோம்….. பழக்கார கெழவி ஒருத்தி பக்கத்தில் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டாள்.
சாலையின் ஓரம் நடப்பட்டு இருந்த கட்சிக் கொடிகளின் கீழ் அவளை நிற்க வைத்து குனிந்த படியே “அம்மாடி ஒனக்கு அப்பா வேணும்ல… வேணும்பா என தலையாட்டினாள். அப்படினா இருக்குற காசுக்கு நா போயி மருந்து வாங்கியாறேன். நீ போயி அங்க நிக்கிறவங்க கிட்ட எங்க அப்பாவுக்கு முடியல காசு கொடுங்கன்னு கேளு. எல்லார்கிட்டயும் வாங்கிட்டு இங்க வந்திரு….”
எப்படியும் மகள் காசு கொண்டு வந்து விடுவாள் என்கிற மகிழ்ச்சியில் டாஸ்மாக் கடையை நோக்கி புறப்பட்டார் சுந்தரம்.
“மாரியக்கா.. ஏம்புள்ள சொன்னத கேட்டியா… ஏம்புள்ளைய பிச்சை எடுக்க வச்சிட்டானே படுபாவி. இவெ…ன் செத்து தொலைஞ்சா புள்ளைகள நிம்மதியா கர சேத்துருவேனே. எங்கெங்கயோ சாவுறாங்க…. இவனுக்கு அடுச்சு அழுக முடியலயே……” கைகளை விரித்து கதறினாள். அவள் அழுவதை பார்த்து சின்னவனும் அழ ஆரம்பித்தான். ஆங்காங்கே நின்றவர்கள் குறுகுறுனு இவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
சனம்பூரா ஏற எறங்க நம்மலயே பாக்குதுடி. புள்ளைய கூட்டிக்கிட்டு வா கெளம்புவோம்….. மாரியாயி அவசரப் படுத்தினாள்.
அதற்குள்….
“ஏ….ய் என்னடி பெருசா பத்தினி மாரி பீத்திக்கிற. கட்டுன புருசனுக்கு தண்ணி அடிக்க காசு கொடுக்க துப்பு இல்ல. ஏம்புள்ளையாச்சும் ஏஞ்சொல்லுக்கு பயந்து இந்நேரம் நாலு காசு வாங்கிருக்கும். அத வந்து கெடுத்துக் புட்டு ஊரு மெச்சுக்க சாலக்கமா பண்ணுற….” கைலியை தலையில் கட்டிக்கொண்டு தள்ளாடியபடியே வந்தார் சுந்தரம். டவுசர் கழண்டு விழும் நிலையில் இருந்தது.
பூமிக்கிப் பார்மா இருந்துகிட்டு நம்ம உசுர எடுக்குறான்…. சொரண இல்லாம குடுச்சுப்புடுறது அப்பறம் சோத்துக்கு அங்காயி வடிச்சு வச்சுருப்பானு கொட்டிக்க வந்தர்றது…. சொல்லிக்கொண்டே டவுசரை ஒழுங்காக மாட்டி விட்டாள் மாரியாயி.
“இப்புடி குடிச்சே நாசமா போயிட்டியே… ஒனக்கும் சேர்த்து தானடா அவ அடிச்சு அழுகுறா. ஈவு எறக்கமே இல்லையா.. இந்த உசுர வச்சுக்கிட்டு திரியறதுக்கு அந்தா பாரு….. போகுது ரயிலு. அதுல விழுந்து செத்துரலாம்ல…..” பொறுமை இழந்து கத்தினாள் மாரியாயி.
“யார்டி நீ. ஏம்புட்டு வூட்டுக்காரிக்கு வக்காலத்து வாங்குற. வேலக்கி போற இடத்துல புரோக்கர் வேலை பாத்து வாங்கி திங்கிறியோ…? ஏம்புள்ளைய வச்சு குடிச்சா என்ன…. இல்ல அவளயே வச்சே குடிச்சா ஒனக்கு என்னடி பொத்துக்கிட்டு வருது… க்வா…க்….. வாந்தி எடுத்தபடி குப்புற மடாரென விழுந்தார்.
“அம்மா……அப்பா.,..மா…” ஓடிப்போய் முகத்தை தொட்டாள் மோகனா. மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அம்மா ….. ரெத்தம் ஊத்துதுமா…….. அப்பா… எந்திரிப்பா….. எந்திரி… உரக்க கத்தினாள் மோகனா. சுந்தரத்தை ஏறெடுத்துப் பார்த்தாள் அங்காயி. எந்தவித அசைவும் இல்லை. அவரது மூச்சு நின்று போய் இருந்தது. இப்போது பெருமூச்சு விட்டாள் அங்காயி.
அவரை உற்றுப் பார்த்தவள் எழுந்தாள். கண்கள் சிவந்து நெருப்பாக மாறியது. அவளது தலைமுடி ஒவ்வொன்றும் சிலிர்த்து நின்றது.
“மாரியக்கா….. அன்னக்கி மதுர சீமையில தலைய விரிச்சு போட்டுக்கிட்டு ஒத்த செலம்போட போனாளாம் ஒருத்தி. ஆனா இன்னிக்கு ஒருத்தி ….. என்று கண்களை உருட்டினாள். என்ன பண்ணப் போறாளோ தெரியலையே என பயந்தாள் மாரியாயி.
தன் பிள்ளைகளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ஒரு கையால் சுந்தரத்தின் தலை முடியை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு சாலையில் கிழக்கு நோக்கி சென்று கொண்டு இருந்தாள் அங்காயி.
அப்போது….. அம்பத்தூர் நகர தெரு விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன.
( solachysolachy@gmail.com )