இலக்கியச்சோலை

கொங்கை குறுநாவல்…. சொல்லெறிந்தவர் -07… ஒரு பார்வை… பொன். குமார், சேலம்

கவிஞர், எழுத்தாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வருகிறார்.

குறுநாவல் கொங்கை சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதி பாராட்டும் பரிசும் பெற்று வரும் எழுத்தாளர் அண்டனூர் சுரா. இவரின் முதல் நாவல் ‘ முத்தன் பள்ளம்’. முத்தன் பள்ளத்தில் மூழ்கி எழுவதற்கு முன் மீண்டும் ஒரு நாவலைத் தந்துள்ளார். தலைப்பு ‘ கொங்கை’.

பெண்களின் உறுப்புகளில் ஒன்றான முலை என்பதன் இலக்கியச் சொல்லாக கொங்கை உள்ளது. பொதுவாக மார்பகம் என்பர். ஆனால் மார்பகம் இருபாலருக்கும் ஒரு பொதுவான சொல்லாகும். பெண்கள் தங்களுக்கிடையே பேசிக்கொள்ளும் வேளையிலும் நெஞ்சு என்றே கூறிக்கொள்வார்கள். முலை என்று சட்டென எவரும் கூறுவதில்லை. முலையில் புற்று நோய் வந்தாலும் மார்பக புற்று நோய் என்றே கூறப்படுகிறது.

கவிஞர் குட்டி ரேவதியே தன் கவிதைத் தொகுப்புக்கு ‘ முலைகள்’ என்று பெயரிட்டு தடைகளைத் தகர்த்தார். முழுக்க முலைகள் பற்றியே பேசும் நாவல் என்றாலும் முலைகள் என பெயர் சூட்ட முடிவெடுத்து மனைவியின் ஆலோசனைப்படி ‘ கொங்கை’ என்று நாவலுக்கு தலைப்பு வைத்துள்ளார் எழுத்தாளர் அண்டனூர் சுரா. ஆனாலும் நாவலுக்குள்ளே முலைகள் என்னும் சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இடையிடையே மார்பகமும் இடம் பெற்றுள்ளது.

நாவல் முழுக்க கொங்கையைப் பற்றிய உரையாடலாகவே இருக்கிறது. இரண்டு பெண்கள் அதாவது ஓர் ஆசிரியை ஒரு மாணவி உரையாடுவதாகவே நாவல் நகர்த்தப் பட்டுள்ளது. ஆசிரியைக்கு முலை சிறியதாக இருப்பதால் பிரச்சனை. மாணவிக்கு முலை பெரியதாக இருப்பதே பெரிய பிரச்சனை. இருவரும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக வாசகர்களுக்கும் உணர்த்தியுள்ளார்.

விமலா என்னும் சிறுமியே கதைச் சொல்வதாக நாவல் தொடர்கிறது. அதில் விமலாவிடம் ஆசிரியைச் சொல்வதாக அவரின் கதை ‘சிறியது’ என்பதால் முற்பகுதியிலும் விமலாவின் கதை ‘ பெரியது’ என்பதால் பிற்பகுதியிலும் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியையின் கணவர் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்றாலும் தன் மனைவியை சிறுத்த உடம்புடன் பெருத்த கொங்கையுடன் காண விரும்புகிறார். அதற்காக அழகு நிலையத்திற்கும் உடற்பயிற்சி நிலையத்திற்கும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறார். உடலை குறைக்க வேண்டும் என்பவர் கொங்கையைப் பெருக்க வேண்டும் என்கிறார். கணவரின் உரையாடலில் வக்கிரப்புத்தி வெளிப்படுகிறது. கணவரின் வேட்கையைப் புரிந்து கொண்டு அவருக்குப் ‘பதிலடி’ கொடுத்துக் கொண்டே இருக்கிறார் ஆசிரியை. ஆண்கள் எப்படி பட்டவர்கள் என்பதை உணர்த்தியுள்ளார். கணவனின் கவனம் கொங்கைப் பெரிதாக இருக்க வேண்டும் என்பதிலேயே இருக்கிறது.

விமலாவின் விவகாரம் வேறு. சிறிய வயதிலேயே பெரிய கொங்கையாக இருப்பதே அவளின் பிரச்சனை. விமலாவைப் பார்ப்பவர்கள் எல்லாம் அவளின் பெருத்த கொங்கையையே பார்க்கின்றனர். அதைப் பற்றியே பேசுகின்றனர். அவ்வாறான பேச்சும் அவ்வாறான பார்வையும் விமலாவிற்கு சங்கடத்தை உண்டாக்குகிறது. கவலையை அளிக்கிறது. பெருத்து இருப்பது மட்டுமின்றி பால் சுரப்பதும் விமலாவிற்கு வேதனை அளிக்கிறது. விமலாவின் உரையாடல்களில் வருத்தத்தையும் கொங்கையின் நாவலை முடிவிற்குக் கொண்டுவர விமலா கொங்கையை அறுத்து எறிவதாக எழுதியுள்ளார் அண்டனூர் சுரா.

கொங்கையை அறுத்துக் கொள்வது எளிதானதல்ல. தற்கொலைக்குச் சமமானது. தற்கொலைக்குத் தூண்டுவது போல் விமலா தன் மார்பை அறுத்துக் கொள்ள தூண்டியது சமூகம். இங்கு வெட்கப்பட வேண்டியது, வருத்தப்பட வேண்டியது சமூகமே. ” இப்பொழுது என்னிடம் இரண்டு முலைகள் இருக்கின்றன. ஒன்று நான் விரும்பிய முலை. அதைப் பார்க்கத்தான் என் ஊர்க்காரர்களும், உறவினர்களும் வந்து செல்வதாக இருக்கிறார்கள். மற்றொன்று ஆண்கள் விரும்பும் முலை. இதற்காக சிலர் மருத்துவமனைக்கு வெளியில் காத்திருக்கிறார்கள்” என்று மருத்துவமனையில் விமலா பேசி இருப்பது சமூகத்தின் மீதான தாக்குதலாகும். இது ஆண் சமூகத்தின்மீது விழும் இடியாகும்.

விமலா எல்லா ஆண்களும் ஒரே மாதிரியாகத்தான் பார்த்தார்கள், அப்பாவும் அங்குதான் பார்த்தார், அப்படித்தான் பார்த்தார் என்று கதையில் பல இடங்களில் கூறி அப்பாவை வாசிப்பாளரிடையே ஆண்களில் ஒருவராகவும் அப்பாவை ஒரு குற்றவாளியாகவும் கருதச் செய்கிறார். ஆனால் முலை அறுத்ததைக் கண்டு கதறும் போது ” ஏ அம்மாவோட மார்பு இப்படித்தான் இருக்கும். பெரிசா. ஏ அம்மாவ உரிச்சி வச்சவ மாதிரி இருந்தே. உன்ன நான் என் அம்மாவாகப் பார்த்தேடி தங்கம். என் அம்மாவுக்கு அழகு மார்பகமடி… அதைப் போய் நீ..” என்று அவர் பார்த்த காரணத்தைக் கூறும் போது ஒரு தந்தையின் உணர்வு வெளிப்பட்டுள்ளது. தந்தைகளைக் கண்கலங்க வைக்கிறார்.

முலை அறுத்தல் என்பது எதிர்ப்புணர்வாகவே உள்ளது. மார்புக்கு வரி கட்ட எதிர்ப்பு தெரிவித்து மார்பையே அறுத்து மன்னனுக்கு கொடுத்து அனுப்புகிறாள் நங்கேலி என்னும் பெண். கண்ணகியும் மன்னன் அநீதி இழைதுததற்காக மார்பை அறுத்து எறிந்து மதுரையை எரிக்கிறாள். இவ்விரண்டும் எதிர்ப்புணர்வே. விமலாவும் இவர்கள் வழியிலேயே முலையை அறுத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார். எந்த முலையை ஆண்கள் வெறித்துப் பார்த்தனரோ அந்த முலையையே அறுத்து எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள். மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் மார்பகங்களும் நீக்கப்படுகின்றன. அதுவும் வலிதான். அவஸ்தைதான். புற்று நோயும் பெண்களின் மார்பகத்தையே தாக்குகின்றன.

அண்டனூர் சுராவின் கொங்கை நாவலை வாசித்து விட்டு விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் போது முகநூலில் கண்ணில் பட்ட ஒரு பதிவு. அசோக்குமார் பதிவிலிருந்து பகிர்ந்து கொண்டதாக உள்ளது. அமரந்தாவின் ‘பால்கட்டு’ என்னும் சிறுகதைக் குறித்து எழுதும் போது அவர் பள்ளியில் படிக்கும் போது மார்பு பெருத்த ஆசிரியை ‘பால் பண்ணை’ என குறிப்பிடுவதாக அவரே குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மை நிகழ்வைக் காணும் போது அண்டனூர் சுரா எழுதியது சரியென்றே படுகிறது.

எழுத்தாளர் அண்டனூர் சுரா ஓர் ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணியப் பார்வையில் பெண்களே எழுதத் தயங்கும் ஒரு நாவலை எழுதியுள்ளார். பெருத்த கொங்கையை வெறித்துப் பார்க்கும் ஆண்களைக் குறி வைத்து தாக்கியுள்ளார். பெரிய கொங்கையுடன் பெண்கள் படும்பாட்டை நாவலாக்கியுள்ளார். அவரின் துணிச்சலான முடிவே கொங்கை என்னும் இந்நாவல். அவர் எழுத்துப் பயணத்தில் கொங்கை ஒரு முக்கிய பதிவு.

குறிப்பு – கொங்கை எனும் இந்நாவல் காக்கைச் சிறகினிலே இதழ் நடத்திய கி.பி. அரவிந்தன் நினைவு உலகளாவிய குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இந்நாவல் பிறகு பாரதி புத்தகாலயம் வழியே பதிப்பு கண்டு வரவேற்பும் எதிர்விமர்சனமும் கண்டது. இந்நூல் குறித்து அதிகபேர் விமர்சனம் எழுதியுள்ளார்கள். எல்லா விமர்சனமும் என் மீதும் என் எழுத்து மீதுமுள்ள அன்பால் எழுதப்பட்டவையே. இந்நூல் குறித்த அனைத்து விமர்சனங்களும் அடுத்தடுத்து வெளியிடப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.