இலங்கை

தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும்

பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. சேவை செய்யக்கூடியவராகயிருக்க வேண்டும், உறுதியானவராகயிருக்கவேண்டும், அத்தகட்டத்துக்கு தமிழ் தேசியத்தினை வழிநடத்தக்கூடியவராகயிருக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசனை வெற்றி பெறச்செய்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று(15) மாலை வவுணதீவில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை மேற்கு கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கிளையின் தலைவர் பி.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் உட்பட கிளை உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,

இலங்கை தமிழரசுக் கட்சி நீண்டகாலத்திற்கு பின்னர் தனித்துவமாக இந்த தேர்தலில் போட்டியிடும் நிலைமை இருக்கின்றது.

தேர்தலில் நிச்சயமாக இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கின்றது. அந்த மூன்று ஆசனங்களை பெறுவதுதான் நோக்கம் அல்ல. ஆசனங்களை பெறுவதில் அந்த ஆசனத்தில் வரக்கூடியவர்கள் யார் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும.;

இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்று பல்வேறுபட்ட இன்னல்கள், பிளவுகள் சட்டங்கள் வழக்குகள் என்று போடப்பட்டிருக்கின்றது.

நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.இந்த காரணங்களை நாங்கள் பார்க்கின்ற போது அதிலே நேர்மையானவர்கள்,உண்மையானவர்கள்,உறுதியானவர்கள் பற்றாளர்கள் அந்த கட்சியிலே இல்லாததன் காரணமாக இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம் வெற்றி பெறக் கூடாது . இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து செல்கின்ற உறுப்பினர்கள் உறுதியானவர்களாக உண்மையானவர்களாக நேர்மையானவர்களை நாங்கள் இனங்காணவேண்டும்.

நான்கு உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டது 2004 ஆம் ஆண்டு மாத்திரம் தான் இருந்தது.

அதில் தான் நான்கு பேர் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டோம். அடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருவர் ஐந்து பேர் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக சென்ற வரலாறு இருக்கின்றது.

அதற்குப் பிறகு மூன்று கட்சி, இரண்டு கட்சியிலிருந்து கடந்த தேர்தலில் நான்கு கட்சியிலிருந்து வந்திருக்கின்றோம். வழிநடத்தக் கூடியவர்கள் ஒரு கட்சியில் இருந்தால் மாத்திரம் தான் அந்த கட்சி சிறப்பாக அமையும்.மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றம் செல்வது அவசியமாகும்.

அதன்காரணமாகவே சிறிநேசன் அவர்களை வெற்றிசெய்யவேண்டும் என்று உழைக்கின்றோம்.

பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. சேவை செய்யக்கூடியவராகயிருக்கவேண்டும்,உறுதியானவராகயிருக்கவேண்டும்,அத்தகட்டத்துக்கு தமிழ் தேசியத்தினை வழிநடத்தக்கூடியவராகயிருக்கவேண்டும்.

நான் இலங்கை தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினர். நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தேன். உங்களுக்கு தெரியும் நான் கொள்கை ரீதியாக நான் கட்சி ரீதியாக நான் எப்பொழுதும் சொல்கின்ற விடயம் என்னவென்றால் கட்சியில் நிலைப்பாட்டில் எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது.

அந்த அடிப்படையில் தான் பலரின் வேண்டுகோளை நான் சேர்ந்து தமிழ் தேசியத்தின் கொள்கையின் அடிப்படையில் தான் நான் இங்கு சென்றிருந்தேன். ஆனால் இப்பொழுது எனக்கு விளக்கம் கோரப்பட்டிருக்கின்றது.

விளக்கம் கோரப்பட்டாலும் நான் இலங்கை தமிழரசுக் கட்சியிலே நான் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றேன்.

இலங்கை தமிழரசுக் கட்சிக்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். விளக்கங்களை பற்றி நான் சிந்திப்பவன் அல்ல.ஆனால் இலங்கை தமிழரசுக்கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டுமானால் கட்சியினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய,தலைமைப் பொறுப்பினை ஏற்ககூடியவர்கள் வரவேண்டும்.

இன்னும் பல்வேறுபட்ட விடயங்கள் எங்கள் கட்சிக்குள் இருந்து கொண்டிருக்கின்றது.

அவ்வாறு இருந்தாலும் கூட நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு புத்துணர்வுடன் ஒரு புது பொலிவுடன் அங்கே செல்ல இருக்கின்றது. அதிலே பல மாற்றங்களை இலங்கை தமிழர் கட்சியில் காண இருக்கின்றது.

அபிவிருத்தி என்பது மிக முக்கியமாகயிருக்கின்றது.நல்லாட்சியில் அதிகளவான கோடி பணங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவந்தவர் சிறிநேசன் தான்.

மட்டக்களப்புக்கு அவர் கொண்டு வந்தாலும் கூட மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பாருங்கள். நிதிகளுக்காக மக்கள் வாக்களிப்பதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது.தமிழ் தேசிய அரசியலை நன்றிக்கடனுக்காக பாவிக்கவேண்டாம்.

யார் வந்தாலும் நிதி வரும். அதை பெறுகின்ற தைரியம் அந்த அந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்காக கிடைக்கும் அது எங்களுக்கு வந்து சேரும். அவர் செய்கின்றார், இவர் செய்கின்றார் அபிவிருத்தி தான் எங்கள் நோக்கமாக இருந்தால் எங்கள் அபிலாசைகள் அடிபட்டு போய்விடும்.

நாங்கள் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை ஆகுதியாக்கிய மண் இந்த மண். அவர்களின் தியாகங்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

அவர்கள் தியாகங்கள் எழ வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஜனாதிபதி தேர்தலில் கூட நான் ஒரு தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டு இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை எடுத்து நான் உலகத்துக்கு காட்டி இருக்கின்றேன் என்றால் அந்த தமிழ் தேசியம் இந்த மண்ணிலே வடகிழக்கிலே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது என்று அதற்கு பிறகு வந்த இந்த தேர்தலிலும் நாங்கள் அதனை வெளிப்படுத்தவேண்டியுள்ளோம்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை எடுக்க வேண்டும். நாங்கள் நான்கு பாராளுமன்ற உறுப்பினரை எடுப்பது என்பது நல்ல விஷயம். 2004 ஆம் ஆண்டு போன்று இரவு பகலாக நாங்கள் உழைத்து ஒரே கட்சிக்கு நாங்கள் வாக்களிப்போமாகயிருந்தால் இருந்தால் நான்கு பேரை நாங்கள் எடுக்கலாம். நான்கு பேரை நாங்கள் இலக்கு வைத்தாலும் நிச்சயமாக மூன்று பேரை நாங்கள் பெறாவிட்டால் எங்கள் முயற்சி என்பது அடிபட்டு போய்விடும்.

இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கின வரலாற்றிலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்புக்கு தந்த ஒரு அவல நிலை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்டது. 2004 இல் நாங்கள் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் நான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டு தேசியப் பட்டியலில் யோசப் பரராஜசிங்கம் ஐயா தெரிவு செய்யப்பட்டதன் மூலம் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் சென்றோம்.

2010ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்,2015ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றோம்.2020ஆம் ஆண்டு மட்டும் ஏன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் வந்தார்கள் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.

2020ஆம் ஆண்டு அனைத்து கட்டமைப்புகளும் இருந்தன.பிரதேச சபைகள்,மாநகரசபைகள் இருந்தன.

அனைத்து பகுதிகளிலும் வேலை செய்த போதிலும் நல்லாட்சி அரசாங்கத்திலே நாங்கள் செய்த சில நடவடிக்கைகளில் அதிருப்திகளினால் பழிவாங்கப்பட்டது.

ஆகவே இந்த விடயங்களை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆளுங்கட்சியிலே பலமானவர்கள் ஆளுங் கட்சியிலே போட்டியிடக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் கூட அவர்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பில்லை.

ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற ஜனாதிபதி மாற்றம் என்பது எல்லோரையும் அழைத்து பதவி கொடுக்கின்ற ஜனாதிபதியாக அவரை நாங்கள் பார்க்க முடியாது.யார் வென்றாலும் அவர்கள் எதிர்க்கட்சியில் வரக்கூடிய நிலைமையே உள்ளது எனவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.