அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றி; தமிழருக்கு எதிரான மாற்றத்தை அநுர அரசு காண்பித்துள்ளது
தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்நாட்டு ரீதியாக மட்டுமே பொறுப்புக் கூறலை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை ஊடாக அநுர அரசாங்கத்தினுடைய உண்மையான இனவாத முகம் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும் 2009 யுத்தத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களை விடவும் இந்த ஆட்சியாளர்கள் மிக மோசமான ஆட்சியாளர்களாக இருப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய அவர்;
கடந்த காலங்களில் செயற்பட்ட அரசாங்கங்கள் போல் அல்லாமல், தாங்கள் எல்லாவிதத்திலும் வித்தியாசமான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதாகவும் அதனடிப்படையில் கடந்த அரசாங்கங்களால் இன ரீதியாக பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் அவ்வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றவாறான கருத்துருவாக்கத்தை கணிசமான அளவில் தேசிய மக்கள் சக்தியினர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வாறானதொரு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தான், கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த அமைச்சரவை தீர்மானத்தில், தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்நாட்டு ரீதியாக மட்டுமே பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறது இந்த அரசாங்கம்.
இலங்கையின் அரசாங்கங்கள் கடந்த காலங்களில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து வந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால்,இம்முறைதான் முதல் முறையாக ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி ஜெனீவா தீர்மானத்தை எதிர்ப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.எனவே இதனை பார்க்கும்பொழுது ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது தான்.
இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் இந்த விடயத்தை ஆராய்ந்தால் ஒரு மாற்றம் ஏற்பட்டதாகவே இருக்கிறது. அதாவது ஏற்கனவே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இனத்துக்கு மேலும் மேலும் அநீதியை கொடுக்கின்ற வகையில் தான் இந்த அரசாங்கம் செயற்படப்போகின்றது என்ற மாற்றம் தான் இந்த அமைச்சரவை தீர்மானத்தின் வெளிப்பாடு. அந்த அடிப்படையில் நீதி-நியாயத்தை விரும்புகின்ற,இயற்கையின் நீதியை ஏற்றுக்கொள்கின்ற,குற்றம் செய்தவனே தன்னுடைய குற்றத்தை தானே விசாரணை செய்வது இயற்கை நீதிக்கு எந்தளவுக்கு முரண் என்பதை ஏற்றுக்கொள்கின்ற எந்தவொரு நபரும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
அந்த அடிப்படையில் பார்த்தால் 2009 ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்துவந்த அரசாங்கங்களை விட,மிக மோசமான ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கம் விளங்குகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.