9 வது பாராளுமன்றத்தில் முதல் 5 இடங்கள் பெற்ற எம்.பி.க்கள்
கடந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதாக மந்திரி.எல்கே இணையத்தளம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வு ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 24 செப்டெம்பர் 2024 ஆம் திகதி கலைக்கப்பட்டது. இதற்கிடைப்பட்ட காலப்பகுதியில் 390 நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுகையை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி, முன்னாள் பாராளுமன்றத்தின் போது அதிக பங்களிப்புகளை வழங்கிய முதல் ஐந்து அரசியல்வாதிகளாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 344 அமர்வுகளில் கலந்து கொண்டு பொருளாதாரம் மற்றும் நிதி ஆகியவற்றுக்கு அதிக பங்களிப்புகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 358 அமர்வுகளில் கலந்து கொண்டு கல்வித்துறைக்கு அதிக பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் புத்திக பத்திரன 307 அமர்வுகளில் கலந்து கொண்டு வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளுக்கு பங்களித்துள்ளதாகவும் மூத்த உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல 383 அமர்வுகளில் கலந்து கொண்டு பொருளாதாரம் மற்றும் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே 292 அமர்வுகளில் கலந்து கொண்டு பொருளாதாரம் மற்றும் நிதி ஆகியவற்றுக்கு அதிக பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.