முச்சந்தி

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த திகா!

இன்றைய ஜனாதிபதி இன்னொரு அநுரகுமார திசா நாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி அதிகமாக பேசியுள்ளார். அவர் இப்போது ஜனாதிபதியாக ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் முன்னர் பேசிய விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்

மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த தோட்டக் கமிட்டி தலைவர்கள் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்ர்களுக்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டம் அட்டன் கோல்டன் மஹால் மண்டபத்தில் மலைய மக்கள் முன்னணி தலைவர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான மயில்வாகனம் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற உள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியின் அலை வீசினாலும் நுவரெலியா மாவட்ட மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்துக்கு பெருமளவு வாக்குகளை அளித்து இருந்தார்கள். அதற்காக நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக அதன் டெலிபோன் சின்னத்தில் கூட்டணியை சேர்ந்த நானும் இராதாகிருஷ்ணன், உதய குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றோம். நாம் வெறுமனே வந்து மக்களிடம் வாக்கு கேட்கவில்லை கடந்த காலங்களில் நாம் செய்த சேவையை மக்களிடம் முன் வைத்து தேர்தலில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்கின்றோம்.

சிலர் தேர்தல் காலம் வரும் போது மாத்திரம் மக்களிடம் வந்து வாக்கு கேட்பார்கள். அவர்கள் ஐந்து வருடங்களாக எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. அவர்களை மக்கள் நிராகரித்து விட்டதால் இதுவரை காலமும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. எனவே மீண்டும் மக்களிடம்வந்து பொய்யான வாக்குறுதிகளை தந்து வாக்கு வேட்டையாடவும் எமக்கு இருக்கின்ற அரசியல் பலத்தை குறைக்கவும் நாடகமாடுகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் அரசியலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுடனேயே இருப்போம் என்பதை கடந்த காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு நாம் செய்து காட்டியுள்ளோம்.

இந்த முறை நாம் செய்த சேவைகளை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

இன்றைய ஜனாதிபதி மலையக மக்கள் மீது நம்பிக்கை அக்கறையும் அனுதாபமும் கொண்டவர் என்பதை மக்கள் அறிவார்கள். அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது பாராளுமன்றத்தில் மிகவும் அக்கறையுடன் எடுத்துக் கூறி மலையக மக்களை கவர்ந்திருந்தார். இப்போது அவர் ஜனாதிபதி பதவியில் இருப்பதால் எமது மக்களுக்கு தேவையானதை செய்யக்கூடிய அருமையான சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியுள்ளது எமது மக்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் தேவை, அவர்கள் குடியிருப்பதற்கு வசதியான நவீன குடியிருப்பு தேவை என்பதை வலியுறுத்தி வந்த அவர் அவற்றை நடைமுறைப்படுத்தி காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றோம். நாம் வெறுமனே மக்களை கவர்வதற்காக வாய் வார்த்தை கூறி ஏமாற்றியவர்கள் அல்ல என்பதை எமது மக்கள் அறிவார்கள். நான் நல்லாட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது தனி வீட்டுத்திட்டம், இந்திய வீட்டுத் திட்டம், மலையக அதிகார சபை, பிரதேச சபைகள், செயலகங்கள் அதிகரிப்பு போன்ற உரிமை சார்ந்த பல விடயங்களை செய்து கொடுத்துள்ளோம். இப்பொழுது நாம் எதிர்க்கட்சியில் இருந்தாலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எமது மக்களின் உரிமைகள் தேவைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.