மத்திய கிழக்கில் பதற்றம்’ இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலை குறிவைத்து லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆறு ஏவுகணைகள் தமது நாட்டிற்குள் வந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மத்திய இஸ்ரேலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், இதில் ஐந்து ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும், ஒன்று தரையிர் இறங்கியதாகவும் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவின் வடக்கே உள்ள நெதன்யா மற்றும் ஹெர்ஸ்லியாவிலும் சைரன்களை ஒலித்தது.
இதனிடையே, பல ஆளில்லா விமானங்களும் இஸ்ரேலை குறிவைத்து தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளில்லா விமான தாக்குதல் கலிலி பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டது.
மேலும், இஸ்ரேல் மீது மேலும் பல தாக்குதல்கள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், மத்திய லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமையன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் எட்டு மாடிக் கட்டிடம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 33 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் பெய்ரூட் நகரின் மீது அதிகாலை 4.00 மணியளவில் ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. லு பாஸ்தாவில் உள்ள அல் மாமூன் வீதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை தொடர்ந்து கட்டிடம் இருந்த பகுதியில் பாரிய பள்ளம் ஏற்பட்டது.
ஏவுகணை ஏவுதல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நடத்தப்பட்டதாகவும், மூன்று கடுமையான வெடிப்புகள் கேட்டதாகவும் AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.