முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையென்று அதை பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாம்
முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையென்று அதை பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாமெனவும் தேவையான இடங்களில் தேவையானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.
நாங்கள் இன அடிப்படையில் அமைச்சரவை அமைச்சு ஒன்றை கேட்கவில்லை எனவும் தங்களது பிரச்சினையை அமைச்சரவையில் தெரிவிக்கும் போது அதை புரிந்து கொள்ள அங்கு யாரும் இருக்க மாட்டார்களே என முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இதன்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்… அப்படி கேட்காதீர்கள், அது தவறு… 2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன் எனவும் குறிப்பிட்டார்.
நாம் அப்படி இல்லை. இவற்றை செய்வதற்கு முஸ்லிம் அமைச்சர் தேவை இல்லை. மறுபுறம் உங்களுடன் பேசுவதற்கு அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசியப் பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் இல்லை என்று அதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.