அச்சுறுத்தல்களை நேர்த்தியாகக் கையாலும் சுமந்திரன்…தெய்வீகன்
தமிழரசுக் கட்சிக்கு உள்ளும் புறமும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த பல்வேறு அச்சுறுத்தல்களைசு மந்திரனும் அவர் தரப்பும் மிக நேர்த்தியாகக் கையாண்டிருப்பதை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ள வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வெளிக்காட்டியுள்ளது. தமிழரசுக் கட்சியின் பெருமளவிலான ஆதரவாளர்கள் இந்தப் பெருங்கூட்டத்தில் ஆஜரானது மாத்திரமன்றி, தங்களது ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் தரப்பினருக்கும் இந்த எழுச்சியின் மூலம் வலுவானதொரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது – புலிகளினால் மாத்திரமே சாத்தியமாக்க முடிந்த – கூட்டணி. அது அவர்களின்பாலிருந்த அச்சத்தின் முன்னால் மண்டியிட்ட தமிழ் அரசியல் தரப்பின் விசுவாசத்தின் விளைவு. புலிகளற்ற கடந்த 15 வருடங்களில், தமிழரசுக் கட்சி, ஒட்டியிருந்த குழப்படிகாரக் கூட்டணிக்கட்சிகளை இவ்வளவு தூரம் இழுத்து வந்ததே பெரும் சாதனை. வீடு என்ற ஒற்றைச் சின்னத்தின் பலன்களை அனுபவித்துக்கொண்டு – தங்களது அத்தனை அட்டகாசங்களையும் நிறைவேற்றுவதற்காக – கட்சி அலுவலகத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு சுமந்திரன் என்பவர் அச்சுறுத்தும் பேர்வழியானார். அவரை எதிர்ப்பதற்கு உள்ளும் புறமும் எத்தனையோ குழிபறிப்புக்கள் – துரோகங்கள் – என்று அத்தனை அழுக்குகளும் அரங்கேறின. தற்போது ஏறக்குறைய அனைத்துக் கறைகளும் தாங்களாகவே கழன்றுகொண்டன.
இன்று சிவராஜ் சித்த மருத்துவர் லேகியம் விற்பதுபோல சிலர் முகநூலில் வந்து “தமிழர் தரப்பில் மாற்றம் வேண்டும், தமிழரசுக் கட்சிக்கு மாற்று வேண்டும்” என்று உதிரிக் கட்சிகளுக்கு ஆதரவு வேண்டி கூவுவதை அறிவார்ந்த தமிழ் தரப்பினர், புன்னகையோடு எதிர்கொள்ளப் பழகிவிட்டனர்.
பொறுப்பான – பாரம்பரிய – தமிழர் தரப்பு என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சி – கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது – இன்று மிகப்பெரியளவில் தன்னை மாற்றியமைத்திருக்கிறது. இனி இதற்கான மக்களாணையைப் பெற்றுக்கொள்ளும் ஜனாநாயகப் பாதையில் பயணிப்பதே எஞ்சியுள்ள செயல்வழி.
பிர#பாக#ரன் என்ற ஒற்றைத்தலைவன் ஓர்மத்துடன் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தபோது – அவர் வழியில் பயணித்த தளபதிகளை பிர#பாகர#னின் செம்புகள் என்று மக்கள் யாரும் சொன்னதில்லை. பிர#பாகரனு#க்காக பேசிய மதியுரைஞர் பாலசிங்கம் கம்பு சுத்துகிறார் என்றும் கூறியதில்லை. செயல்வழி வீரர்களின் பாதைக்கு ஒற்றுமை என்று பெயர்.
தமிழரசுக் கட்சியின் பயணம் இவ்வளவு காலமும் இயன்றளவு அவ்வாறானதாகவே அமைந்திருக்கிறது.
முப்படைகளையும் கட்டி ஆண்டவர்களின் பேரழிவினால் ஏற்பட்ட பெரு வெளியில் ஒரே நாளில் கொண்டுபோயிருத்தப்பட்ட சம்பந்தரும் அவர் அணியினரும், எதையெல்லாம் வென்று தந்தார்கள் என்பதிலும் பார்க்க, தமிழர்கள் தொடர்ந்து தோற்றுவிடாமல் இயன்றளவு காத்துக்கொண்டார்கள் என்று சொல்லவேண்டும்.
போர் முடிந்த பதினைந்து வருடங்களில் – அப்பாவி மக்களை வீரப் பேச்சுக்களால் கொம்பு சீவி – இன்னொரு அழிவுக்குள் அழைத்துச்சென்று வீழ்த்திவிடாமலும் – அவ்வாறு வீழ்த்துவதற்குக் கங்கணம் கட்டிய தரப்புக்களிடமிருந்து காப்பாற்றியதும் – தமிழரசுக் கட்சியின் பெருமைக்குரிய வெற்றி.
தென்னிலங்கையின் சகல அரசியல் – அதிகார – தரப்புக்களுடனும் சமதையாக இருந்து ஒரு உரையடால் மேற்கொள்ளவல்ல உறவினை ஏற்படுத்தி வைத்திருப்பதும், அதற்கு அப்பாலும் சர்வதேச தரப்புக்களுடன் தமிழர் அபிலாஷைகள் குறித்த அழுத்தத்தினை தொடர்ந்து பேணுவதும் இன்றைய உலக அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க வெற்றியே.
தமிழரசுக் கட்சி பல நடவடிக்கைகளை நேர் சீராக்குவதற்கும் – புதியவர்களுடன் தன்னைப் பொருத்திக்கொள்வதற்கும் – காலம் கனிந்திருக்கிறது.
மக்கள் ஆணையோடு அவை சிறக்கட்டும்.