உத்தியோபூர்வ இல்லங்களை மீள வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: பிரதமர் ஆலோசனை
உத்தியோபூர்வ இல்லங்களை இன்னுமும் மீள வழங்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் உத்தியோபூர்வ இல்லங்களை மீள வழங்காத அமைச்சர்களுக்கு மீண்டும் இது தொடர்பில் நினைவூட்ட அவசியமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
31 முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தியிருந்த போதிலும் கடந்த 9ஆம் திகதி வரையில் அதில் 20 பேர் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என அறியக்கிடைத்துள்ளது.
அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைப்பதை அரசியல் பழிவாங்கலாக எடுத்துக்கொள்ள கூடாது எனவும் அமைச்சு பதவிகள் இரத்து செய்யப்பட்டதுடன் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைப்பது கட்டாயம் எனவும் அரசாங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பிரதமர் விளக்கமளித்தார்.
பொது நிர்வாக உள்துறை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுகளுக்கு எதிர்வரும் திட்டங்களுக்கு முகம் கொடுப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மகிந்த அமரவீர பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாடசாலைக்கு வழங்குவது தொடர்பில் வெளியான ஊடக செய்திகள் தொடர்பிலும் இங்கு பிரமதருடைய கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.