விஞ்ஞான யுகத்திலும் ரெயில் விபத்துகள் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல!
கவரப்பேட்டை ரெயில் விபத்தானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ”விஞ்ஞான யுகத்திலும் ரெயில் விபத்துகள் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல” என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது அதன் மீது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சமிக்ஞை கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ‘கவரப்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.இந்த விஞ்ஞான யுகத்திலும் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல , எதைக்காட்டிலும் முக்கியமானது பொதுமக்களின் உயிர் , அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.