உயர்தர விமானத்தினை அன்பளிப்பாக வழங்கிய அமெரிக்கா!
ஒக்டோபர் 10, 2024 – இலங்கை விமானப் படைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமொன்றை, கட்டுநாயக்கவிலமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அமெரிக்க கடற்படை அட்மிரல் ஸ்டீவ் கேலர் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்,
பாதுகாப்பமைச்சின் செயலாளர் எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொந்த (ஓய்வுபெற்ற), இலங்கை விமானப்படையின் கட்டளைத்தளபதி எயா மாஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இவ்வுயர்தர விமானம் கையளிக்கப்பட்டது.
நீண்டகாலமாக நீடித்திருக்கும் அமெரிக்க-இலங்கை பங்காண்மையின் ஒரு குறியீடாகவும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பலப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகவும் இது விளங்குகிறது.
அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பம் கொண்ட King Air விமானமானது, தனது கடற்பரப்பில் ரோந்து செல்வதற்கான, கடல்சார் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான மற்றும் இந்து சமுத்திரத்திலுள்ள மிகமுக்கியமான வர்த்தக வழித்தடங்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் திறன்களை பலப்படுத்தும்.
வலுவான அமெரிக்க – இலங்கை பங்காண்மை மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்வதில் இலங்கை வகிக்கும் பங்கு ஆகியவற்றிற்கான ஒரு சான்றாக இது விளங்குவதை எடுத்துக்காட்டிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், “எமது கடல்கள் எம்மை இணைப்பதனால், பங்காளர்களென்ற வகையில் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும்.
எனும் இலங்கையின் தூரநோக்கினை அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தின் உயிர்நாடியான கடல்சார் வர்த்தக வழித்தடங்களைப் பாதுகாப்பதில் கடல்சார் கள விழிப்புணர்வு இன்றியமையாததாகும்.
பொருளாதார வாய்ப்புகள் நிறைந்ததாக சமுத்திரங்கள் காணப்பட்டபோதும், சட்டவிரோத மீன்பிடித்தல் முதல் கள்ளக்கடத்தல்,
ஆட்கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத, வற்புறுத்தல் மற்றும் வஞ்சக நடவடிக்கைகள் வரையான பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதற்கான ஏதுநிலை அவற்றிற்குண்டு.
உங்களது தேசத்தின் அமைதி மற்றும் செழிப்பிற்கான ஒரு நிலையான பாதுகாவலராக இந்த Beechcraft King Air விமானம் தொழிற்படுமென நான் நம்புகிறேன்.” எனக்குறிப்பிட்டு King Air விமானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான நீண்டகால பங்காண்மையின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லான இந்த Beechcraft King Air 360ER விமானத்தினை வரவேற்ற இலங்கை விமானப்படையின் கட்டளைத்தளபதி எயா மாஷல் உதேனி ராஜபக்ஷ, “Beechcraft King Air 360ER விமானத்தின் அறிமுகமானது கடல்சார் கள விழிப்புணர்வு தொடர்பான விமானப்படையின் ஆற்றலை அதிகரிப்பதற்கான ஒரு மிகமுக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.” எனக்குறிப்பிட்டார்.
“இது கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு பொறுப்பான மற்றும் முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு தேசமாக HADR திறன்களை விரிவுபடுத்துவதிலும் எமக்கிருக்கும் மேம்பட்ட கவனத்தை உறுதிப்படுத்துகிறது.
அத்துடன், வான் மற்றும் கடல்சார் பரப்புகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காகவும், எமது பிராந்தியத்தில் நாடுகடந்த குற்றங்கள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் கூட்டுப் பாதுகாப்பு மற்றும் சேர்ந்து செயற்படும் தன்மை ஆகியவற்றைப் பேணி வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் முயற்சிகளின் மிகசமீபத்திய முயற்சியாக இந்த மேம்படுத்தப்பட்ட ISR இயங்குதளம் இருக்கும்.
பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான எமது கடமைப்பொறுப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, பிராந்திய கடல்சார் கள விழிப்புணர்வில், குறிப்பாக கடல்சார் கண்காணிப்பு, கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் அதிக பங்கு வகிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் இலங்கையுடனான பங்காண்மை ஆகியவற்றில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை மீளவலியுறுத்திய அட்மிரல் ஸ்டீவ் கேலர்,
இன்றைய வைபவமானது வெறுமனே ஒரு விமானத்தை கையளிக்கும் நிகழ்வு மட்டுமன்றி, அதையும் தாண்டிய பல விடயங்களைப் பற்றியதாகும். இது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் இந்து சமுத்திரத்தில் சிக்கலான கடல்சார் சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கும் எமது நாடுகள் இரண்டும் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பற்றியதாகும்.
விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதன் மூலம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையினை பேணுவதற்கான பகிரப்பட்ட ஒரு தொலைநோக்கினை முன்னேற்றுவதற்கும் எமக்கிடையிலான பங்காண்மையினை பலப்படுத்துவதற்கும் நான் எதிர்பார்க்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் Building Partner Capacity நிகழ்ச்சித்திட்டத்தினால் நிதியளிக்கப்பட்ட King Air விமானமானது, Beechcraft Textron Aviation நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டில் பூர்த்திசெய்யப்பட்டதுடன், 2024 ஆம் ஆண்டில் கடல்சார் கண்காணிப்பிற்கு தேவையான மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டது.
இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு இவ்விமானத்தை இயக்குவதற்கான சிறப்புப் பயிற்சி கன்சாஸ் மற்றும் புளோரிடாவில் வழங்கப்பட்டது. அத்துடன் அது தொடர்பான மேலதிக பயிற்சிகள் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு அமெரிக்க அரச அதிகாரிகளால் வழங்கப்படும்.
திருகோணமலையிலமைந்துள்ள சீனக்குடாவில் இயங்கும் Maritime Patrol Squadron 3 உடன் இணைந்து கொள்வதற்கு முன்னர் King Air360ER விமானத்தின் இறுதிக்கட்ட தயார்படுத்தல்கள் இரத்மலானையில் அமைந்துள்ள விமானப் படைத்தளத்தில் மேற்கொள்ளப்படும்.