லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்; ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கையர்கள் இருவர் காயம்
இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால அமைதிப் படையினராக பணியாற்றும் இலங்கையர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது இலங்கை இராணுவத்தினர் இருவரும் நகோரா கிராமத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகாமில் இருந்ததாகஇராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் (UNFIL) நகோரா தலைமையகத்தில் உள்ள ஐ.நா இடைக்காலப் படை மற்றும் அருகிலுள்ள தளங்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கவுன்சில் ஆணையின் கீழ் ஸ்திரத்தன்மைக்கு திரும்புவதற்கு ஆதரவாக ஐ.நா அமைதி காக்கும் படையினர் தெற்கு லெபனானில் உள்ளனர்.
அமைதி காக்கும் படையினர் மீதான எந்தவொரு தாக்குதலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 ஐ கடுமையாக மீறுவதாகும்.