ஆர்ப்பாட்டம் செய்தோர் ஆட்சியில் இருப்பதால் மோசடிகள் தவிர்க்கப்படும்; தேர்தல் கண்காணிப்பு நிறுவனம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரச அதிகாரம் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட மாட்டாது என நம்புவதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய சூழலில் அவற்றிற்கு எதிராக ஒரு காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட, குரல் எழுப்பிய குழுவினர் ஆட்சிக்கு வந்துள்ளமையால் அவ்வாறு நம்ப முடியும் என ஆசிய தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் பஃப்ரல் அமைப்பின் நிர்வாக தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அரச அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழு தற்போது அரச அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளதன் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படாமை அதற்கான முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
பதவியில் இருப்பது அமைச்சரவை அமைச்சர்கள் மூன்று பேர் மாத்திரமே என்பதால் அரச அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட மாட்டாது என்ற நம்பிக்கையை வைக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சிறிய அமைச்சரவை காணப்படுவதால் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறைவடையும் என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
மேலும், பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இடம்பெறும் தேர்தலாக வரலாற்றில் இடம்பிடிக்கும் என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.