நாட்டை விட்டு வெளியேற பின்லேடன் மகனுக்கு பிரான்ஸ் அரசு உத்தரவு
2011ம் ஆண்டு அமெரிக்காவின் ‛‛கடற்படை சீல்ஸ்” நடத்திய தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனின் இளைய மகன் உமர் பின்லேடன் (வயது 48).
சவூதியில் பிறந்த உமர் பின்லேடன், ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்த நிலையில் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு முதல் வடக்கு பிரான்சில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார் உமர் பின்லேடன்.
இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உமர் பின்லேடனுக்கு பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனே ரீடெய்லியூ தனது ‛எக்ஸ்’ தளத்தில் கூறுகையில்,
” உமர் பின்லேடன், சமூக வலைதளங்கள் வாயிலாக மறை முகமாக பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிய வருகிறது. ஏற்கனவே ஜிகாதியின் மகனாக இருப்பதால், நாட்டிற்கு ஏற்படும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.
தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக பிரான்ஸ் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இதனை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. எனவே உமர் பின்லேடன் எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.