கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்?; ஆதரவு குரல் கொடுத்த சீமான்
தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பின்னர், நேற்று ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை பொலிஸார் சென்னை அழைத்து வந்தனர். அவருக்கு, வரும் நவம்பர் 29 -ம் திகதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நடிகை கஸ்தூரியின் கைது அவசியமில்லாத ஒன்று. அவர் பேசியதில் காயம்படவோ, வேதனைப்படவோ ஒன்றுமில்லை. வேண்டுமென்றே பழிவாங்குகின்றனர்.
அவர் பேசியது காயமடைந்துள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால், தமிழ் பேரினத்தை, திராவிடம் என்று பல நூற்றாண்டுகளாக சொல்லும்போது நாங்கள் எவ்வளவு காயம் அடைந்திருப்போம்.
அவர் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார். இருந்தாலும் தனிப்படை அமைத்து, வேறு மாநிலத்துக்கு சென்று கைது செய்யும் அளவுக்கு அப்படி என்ன தவறு செய்தார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.