முச்சந்தி

காசா போர் ஓராண்டின் பின்: வரலாறு காணாத பாலஸ்தீன ஆதரவு!…  சர்வதேச எதிப்பை நோக்கும் இஸ்ரேல்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(தங்கள் பெயரால் இந்த கொடூர யுத்தம் வேண்டாம் என புலம்பெயர்ந்து வாழும் யூதர்களில் உள்ள ஜனநாயக உணர்வு கொண்டோர் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டும் உள்ளனர்)
கடந்த ஓராண்டாக காசா போரை எதிர்த்து, அரபுலகம் ஆர்ப்பரித்து எழுந்து நிற்பது ஒருபுறம் என்றால் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பிற மேற்குலக நாடுகளிலும் போர் நிறுத்தம் கோரி பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரில் நடந்துள்ளன.
அதேவேளை தங்கள் பெயரால் இந்த கொடூர யுத்தம் வேண்டாம் என புலம்பெயர்ந்து வாழும் யூதர்களில் உள்ள ஜனநாயக உணர்வு கொண்டோர் போராட்டங்களில் ஈடுபட்டும் உள்ளனர்.
ஐரோப்பாவில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மைக்ரன், பயங்கரவாத எதிர்ப்புப் போர் என முதலில் இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்திருந்த போதும் பின்னர் உள்நாட்டுப் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இலண்டனில் நடந்த பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்திற்கு எதிராகப் பேசிய இங்கிலாந்தின் முன்னாள் உள்துறை செயலர் சுவல்லா பிரேவர்மேன் பதவியில் இருந்து நீக்கப்படும் நிலையும் ஏற்பட்டது.
அமெரிக்காவில் போர்நிறுத்தம் கோரி போராட்டம்:
அமெரிக்காவிலும் போர்நிறுத்தம் கோரி தலைநகரங்களில் போராட்டங்கள் பல நடந்தன. இளந் தலைமுறையினர் போராட்டங்களுக்கு வந்ததும் ஒரு புதிய காட்சி என்று சொல்லப்படுகிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு படை உதவி செய்யக்கூடாதென்று அவர்கள் குரல் எழுப்பினர்.
அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட அமெரிக்க அரசத் தலைவர்கள் இஸ்ரேல் நடத்திவரும் இனவழிப்புக்கு துணைபோகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டியும் இஸ்ரேலுக்கு பண உதவி, ஆயுத உதவி, அரசுறவிய உதவிகள் செய்யக்கூடாதென கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்கான மையம் ( Centre for Constitutional Rights) என்ற மனிதவுரிமை அமைப்பு வழக்கு தொடுத்தும் இருந்தனர்.
தென்னாப்பிரிகா இஸ்ரேலுடனான தனது தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது. இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பொலிவியா, கொலம்பியா, சிலி, ஹொண்டுராஷ் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆளும் நாடுகள் இஸ்ரேலுடனான அரசியல் உறவைத் முழுமையாக துண்டித்துக் கொண்டன.
கடந்த வருட 2023 நவம்பரில் சவுதியில் அரபுக் கழக 22 அரபு நாடுகளும், இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் OIC – 57 இசுலாமியர் பெரும்பான்மை கொண்ட நாடுகளும் கூடி போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் இஸ்ரேல் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்தும் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் போர்க்குற்றங்களைக் கண்டித்தும் ஐநா. பாதுகாப்பு அவை கட்டாயப் படுத்தும் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தின.
இஸ்ரேலுடனான உறவைத் துண்டிக் கொள்வது பற்றி வலியுறுத்தியதில் சவுதி வெற்றிக் கண்டது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது.
பிரிக்ஸ் – BRICS கூட்டமைப்பின் பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா தலைவர்கள் சந்தித்து காசாவில் நடந்துவரும் போர்க்குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும், போர் நிறுத்தம் வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேற்படி நாடுகள் மட்டுமின்றி எகிப்து, எத்தியோபியா, அர்ஜெண்டினா, சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். ஐநா செயலர் அண்டோனிய குட்டரசும் இதில் கலந்து கொண்டார்.
ஆனால் இந்தியாவில் மட்டும்தான் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் ஐநா தீர்மானம்:
கடந்த வருட நவம்பர் 15இல் ஐ.நா. பாதுகாப்பு அவையில், உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு அவையில் குறைந்தது 9 நாடுகள் வாக்களித்தால்தான் ஒரு தீர்மானம் நிறைவேறும். மால்டா என்ற நாடுதான் இத்தீர்மானத்தை முன்மொழிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தில் வாக்களிக்காமல் விலகிக் கொண்டன.
ஏனைய 12 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேறியது. இத்தீர்மானத்தில் ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதல் பற்றியும் இஸ்ரேல் நடத்தும் வான்வழிக் குண்டு வீச்சுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஹமாஸ் தாக்குதல் பற்றிய கண்டன குறிப்பு இல்லை என்பதற்காக அமெரிக்கா உறுப்பு நாடுகளைக் கடிந்து கொண்டது.
போர் தொடங்கியதில் இருந்து நான்கு தீர்மானங்கள் பாதுகாப்பு அவையில் முன்மொழியப்பட்டு அவை தோற்கடிக்கப்பட்டன.
பிரேசில் கொண்டு வந்த தீர்மான முன்மொழிவில், இஸ்ரேலுக்கு இருக்கும் தற்பாதுகாப்புக்கான உரிமை பற்றிய குறிப்பு இல்லை என்ற காரணத்தின் பெயரால் அமெரிக்கா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை தோற்கடித்தது. போர் நிறுத்தம் கோராத அமெரிக்காவின் தீர்மான முன்மொழிவு ரசியாவாலும் சீனாவாலும் மூலம் தோற்கடிக்கப்பட்டது.
இதே வேளை ரசியாவின் இரு தீர்மான முன்மொழிவுகள் போதிய ஆதரவில்லாததால் தோற்றுப் போயின.
ஐ.நா. பாதுகாப்பு அவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலையில், 2023 அக்டோபர் 23இல் ஐ.நா. பொதுப் பேரவையின் அவசரக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு போர் நிறுத்தம் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது கட்டாயப் படுத்தும் தீர்மானம் அல்ல. ( Non – binding resolution) பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட காலமாக ஆதரவு தெரிவித்து வந்த இந்திய அரசோ அத்தீர்மானத்தில் வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது.
இஸ்ரேல் பாதுகாப்பு தீர்மானங்களை மதித்ததில்லை:
2023 அக்டோபர் 23இல் ஐ.நா. பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் அதன் உறுப்பினர்களின் வெளியுறவு அமைச்சர்கள் பங்குபெற்றிருந்த போது, ஐ.நா. செயலர் அண்டோனியா குட்டர்சு, ஹமாசின் தாக்குதலைக் கண்டித்த அதேநேரத்தில்,
பாலஸ்தீனர்கள் கடந்த பல ஆண்டுகளாக மூச்சு திணறும் ஆக்கிரமிப்பையும் கண்டித்தார்.
ஆனால், பாலஸ்தீன மக்களின் துயரங்களின் பெயரால் ஹமாஸ் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. ஹமாஸ் நடத்திய தாக்குதலின் பெயரால் பாலஸ்தீன மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்குவதையும் ஏற்க முடியாது என்றும் பேசினார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்திவிட்டதாகவும் பயங்கரவாதத்திற்குத் துணைபோவதகாவும் சொல்லி ஐ.நா.வை மிரட்டும் தொனியில் பேசியது இஸ்ரேல். ஐ.நா. செயலர் பதவி விலக வேண்டும், ஐ.நா.வுக்குப் பாடம் புகட்டுவோம் என்றெல்லாம் பேசி இஸ்ரேல் தன்னை ஓர் கொடும் அரசாக (rogue state) வெளிப்படுத்திக் கொண்டது.
ஒருபோதும் ஐநா. பாதுகாப்பு அவைத் தீர்மானத்தைப் பொருட்படுத்தவில்லை இஸ்ரேல். கடந்த காலங்களிலும் ஐ.நா. பாதுகாப்பு அவைத் தீர்மானங்களை அது மதித்ததில்லை. அடுத்தக் கட்டமாக இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொருளியல் தடைகளை விதிப்பதை நோக்கி பாதுகாப்பு அவை செல்லாமல் இருப்பதை அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்ற துணிச்சல்தான் இதற்கு காரணம் ஆகும்.
கத்தாரின் பேச்சுவார்த்தை முயற்சி:
 
காசாவில் எந்த நேரத்திலும் தொற்றுநோய்ப் பரவும் அபாயம் இருக்கிறது என்று ஐ.நா. எச்சரித்திருந்த நிலையில் கத்தாரின் பேச்சுவார்த்தை முயற்சியில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை இஸ்ரேலும் ஹமாஸ்ம் எட்டியது.
குழந்தைகள், பெண்கள் அடங்கிய பணையக் கைதிகள் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸும், 150 பேரை விடுவிப்பதாக இஸ்ரேலும் உடன்பாடு எட்டின.
பெருகும் பாலஸ்தீன போராட்ட ஆதரவு:
அக்டோபர் 7 ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது என்பது உண்மையே. தற்போது இஸ்ரேலின் பயங்கரவாத முகம் உலகுக்கு தெரியவந்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பின் பெயரால் விடுதலைப் போராட்டங்களை நசுக்கலாம் என்ற நிலை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான முகாம் – சீனா தலைமையிலான முகாம் என கொஞ்சம்கொஞ்சமாக உலகம் இருமுனையாகப் பிரிந்து காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது.
 சாதகமான பன்னாட்டு சூழலை உருவாக்கி வருகிறது. போராடும் ஆற்றல்கள் கிடைக்கும் இந்த அரசியல் வெளியை ஆகச் சிறந்த வகையில் பயன்படுத்தி, குறைந்த இழப்புகளுடன் முன்னேறி, தம்மை தற்காத்துக் கொண்டு, விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும் என்பதே இக்கால யதார்த்தமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.