முகலாயர் கால மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு; உ.பி. கலவரத்தில் 3 பேர் உயிரிழப்பு; வாகனங்களுக்கு தீவைப்பு

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகளுக்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியதில் 3 பேர் உயிரிழந்தனர். 30 போலீஸார் காயமடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மசூதியை ஆய்வு செய்வதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில், போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதுகுறித்து மொரதாபாத் மண்டல ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் கூறியதாவது: ஒரு வழக்கறிஞர் தலைமையில் தொல்லியல் ஆய்வுக் குழு பணியை தொடங்கியபோது, மசூதிக்கு அருகில் கூடிய கூட்டம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், மசூதிக்குள் போலீஸார் நுழைவதை அந்த கும்பல் தடுக்க முயன்றது. அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீஸாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அந்த கும்பல் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது. இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைத்தனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 30-க்கும்மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் உள்ளூரை சேர்ந்த நயீம், பிலால், நவ்மன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜமா மசூதி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆஞ்சநேய குமார் சிங் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய ஜமா மசூதி ஆய்வு விவகாரம் தற்போது சம்பல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button