இலங்கை

செம்மணி தொடர்பாக சோமரத்னவிடம் சர்வதேச விசாரணை நடத்தவும்; உண்மைகளை வெளிப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரவிகரன் வலியுறுத்து

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு,சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள்,இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய

அவர் மேலும் பேசுகையில்,

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப்புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சிறார்கள், பெண்கள், ஆண்கள், முதியோரென பலதரப்பட்டவர்களுடைய எலும்புக்கூடுகளும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் கடந்தவாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இந்த புதைகுழிவிவகாரம்தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் உறுதியுரைத்துள்ளார். அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதிகிடைக்க வேண்டுமென்ற பெருத்த எதிர்பார்புடன் இருக்கும் பாதிக்கப்பட்ட எமது தமிழ்மக்களுக்கு நீதி அமைச்சரின் இந்தக் கருத்து நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி படுகொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான குற்றவாளியாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட பிற்பாடு, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் படையினரால் 300 – 400 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அவருடைய தகவல்களின் அடிப்படையில் அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் 15 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து சந்திரிக்கா குமாரதுங்க அரசு இந்த புதைகுழி விசாரணையை கிடப்பில் போட்டிருந்தது.

தற்போது செம்மணி மனிதப்புதைகுழி அடையாளங்காணப்பட்டு, மீண்டும் அகழ்வாய்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையாளர்கள் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனது மனைவி மூலம் ஜனாதிபதிக்கு சோமரத்ன ராஜபக்ச கடிதமொன்றினை எழுதியிருந்தார்.

மேலும் அக்கடிதத்தில் செம்மணியைத் தவிர, அரியாலை, கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்தின ராஜபக்சவிடம் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அதுகுறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button