முச்சந்தி
புலம் பெயர் மண்ணில் தமிழின் அடையாளம்… அவுஸ்திரேலிய தமிழர் குடிசன கணக்கெடுப்பு… ஐங்கரன் விக்கினேஸ்வரா


(அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நமது அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதன் மூலமே தமிழர் அடையாளம் என்பது மொழி, பண்பாடு, வரலாறு, குடும்ப மரபு ஆகியவற்றோடு இணைந்த ஒன்றாக பேணலாம். எனவே ஒருவர் தன்னைத் தமிழராக அடையாளப்படுத்திக் கொண்டால், அந்த அடையாளம் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்திலும் பிரதிபலிப்பது அவசியமாகிறது)
அவுஸ்திரேலியா இன்று உலகின் பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள் மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. அந்தப் பன்முகத்தன்மையின் முக்கியமான ஒரு பகுதியாக அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூகமும் கடந்த பல தசாப்தங்களாக வளர்ச்சியடைந்து வருகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த தமிழர்களுடன், அவுஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை தமிழர்களும் இன்று இந்த சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளனர்.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Australian Census) தமிழ்ச் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் ஒரு சமூகத்தின் உண்மையான எண்ணிக்கை, அதன் மொழிப் பயன்பாடு, பண்பாட்டு அடையாளம் மற்றும் புவியியல் பரவல் ஆகியவை அதிகாரப்பூர்வமாகப் பதிவாகும் முக்கிய வாய்ப்பாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைகிறது.

2021ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, வீட்டில் தமிழ் பேசுவதாகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 95,404 ஆகும். 2016ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 73,162 ஆக இருந்தது. அதாவது ஐந்து ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையில் சுமார் 30.4 விகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி அவுஸ்திரேலியாவில் தமிழ்மொழி பேசும் சமூகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இது வெறும் ஒரு புள்ளிவிவரம் அல்ல. அவுஸ்திரேலியாவின் பன்முக சமூகத்தில் தமிழ் மொழி பெற்றிருக்கும் இடத்திற்கான ஒரு முக்கியமான சான்றாகும். ஒரு மொழி எத்தனை பேரால் வீட்டில் பேசப்படுகிறது என்பது அந்த மொழி சமூகத்தில் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தமிழ் பேசுபவர்களின் பிறந்த இடங்களைப் பார்க்கும்போது, இந்தியாவில் பிறந்தவர்கள் 42.5 விகிதம், அதாவது 40,518 பேர் என முதலிடத்தில் உள்ளனர். இலங்கையில் பிறந்தவர்கள் 29.6 விகிதம், அதாவது 28,222 பேர் என இரண்டாவது இடத்தில் உள்ளனர். அவுஸ்திரேலியாவிலேயே பிறந்த தமிழ் பேசும் மக்கள் 17.7 விகிதம், அதாவது 16,853 பேர் என மூன்றாவது இடத்தில் உள்ளனர். இதற்கு மேலாக மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பிறந்த தமிழ் பேசும் மக்களும் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றனர்.
தமிழ் பண்பாட்டு அடையாளம்:
இந்தப் புள்ளிவிவரம் ஒரு முக்கியமான உண்மையை எடுத்துக்காட்டுகிறது. தமிழர்களின் பிறந்த நாடுகள் வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால் தமிழ் மொழி அவர்களை ஒரு பொதுவான பண்பாட்டு அடையாளத்தின் கீழ் இணைக்கிறது.
இந்தியாவில் பிறந்த தமிழரும், இலங்கையில் பிறந்த தமிழரும், மலேசியாவில் பிறந்த தமிழரும், அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த தமிழரும் வெவ்வேறு குடியுரிமைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் தமிழ் மொழி, பண்பாடு, குடும்ப மரபு மற்றும் வரலாற்றுப் பின்னணி ஆகியவை அவர்களிடையே பொதுவான இணைப்பை உருவாக்குகின்றன.
இதனால்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மொழி மற்றும் பூர்வீக அடையாளம் ஆகிய இரண்டையும் சரியாகப் பதிவு செய்வது முக்கியமானதாகிறது. ஒருவர் வீட்டில் தமிழ் பேசுகிறாரெனில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வீட்டில் ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த மொழி பயன்படுத்தப்படுகிறது?” என்ற கேள்விக்கு தமிழ் எனப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இங்கு ஒரு முக்கியமான விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் பணியிடத்தில் ஆங்கிலம் பேசலாம். பள்ளியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமே பிரதான மொழியாக இருக்கலாம். சமூக வாழ்க்கையிலும் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் வீட்டில் பெற்றோருடன், குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது உறவினர்களுடன் தமிழ் பேசப்பட்டால், அந்த குடும்பத்தில் தமிழ் பயன்படுத்தப்படும் மொழியாகும்அஅஎனவே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய தமிழர்கள் தங்கள் தமிழ் மொழிப் பயன்பாட்டை கணக்கெடுப்பில் பதிவு செய்வதில் எந்த தயக்கமும் கொள்ளத் தேவையில்லை.
அதேபோன்று உங்கள் பூர்வீகம் என்ன என்ற கேள்வியும் தமிழர்களுக்கு முக்கியமானதாகும்.
பிறந்த நாடு என்பது ஒருவரின் பூர்வீக அடையாளத்துடன் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. ஒருவர் அவுஸ்திரேலியாவில் பிறந்திருந்தாலும், அவருடைய குடும்பப் பூர்வீகம் தமிழ் ஆக இருக்கலாம். ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவருடைய பண்பாட்டு அடையாளம் தமிழ் ஆக இருக்கலாம். ஒருவர் இலங்கையில் பிறந்திருந்தாலும், அவர் தன்னை தமிழராக அடையாளப்படுத்திக் கொள்ளலாம். எனவே தங்களைத் தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், தங்களுக்கு பொருந்தும் இடத்தில் தமிழ் என்ற அடையாளத்தைத் தெளிவாகப் பதிவு செய்வது முக்கியமானது.
2021ஆம் ஆண்டு தரவுகளின்படி, 54.7 விகிதம், அதாவது 52,146 பேர் தங்களை “தமிழ்” என்ற அடையாளத்துடன் பதிவு செய்துள்ளனர். மேலும் 29.5 விகிதம் பேர் இந்தியப் பூர்வீகத்தையும், 9.5 விகிதம் பேர் இலங்கைப் பூர்வீகத்தையும், 5.6 விகிதம் பேர் இலங்கைத் தமிழ் பூர்வீகத்தையும் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, தமிழ் அடையாளம் ஒரே ஒரு நாட்டின் எல்லைக்குள் அடங்காதது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழர் அடையாளம் என்பது மொழி, பண்பாடு, வரலாறு, குடும்ப மரபு மற்றும் சமூக நினைவகம் ஆகியவற்றோடு இணைந்த ஒன்று. எனவே ஒருவர் தன்னைத் தமிழராக அடையாளப்படுத்திக் கொண்டால், அந்த அடையாளம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்திலும் பிரதிபலிப்பது அவசியம். இது மற்றொரு நாட்டின் அல்லது மற்றொரு இனத்தின் அடையாளத்தை மறுப்பதாக அல்ல. மாறாக, ஒருவருடைய பல அடையாளங்களில் தமிழ் என்ற மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்திற்கும் உரிய இடத்தை வழங்குவதாகும்.
அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளும் இந்த வளர்ச்சியின் முக்கியமான சான்றுகளாக உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Wentworthville, Toongabbie, Parramatta, Westmead போன்ற பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். Victoria மாநிலத்தில் Glen Waverley, Point Cook போன்ற பகுதிகளும் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான வாழ்விடங்களாக வளர்ந்துள்ளன. தமிழர்கள் அதிகமாக வாழும் முதல் 100 புறநகர் பகுதிகளில் கணிசமான அளவு தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர் என்பது சமூகத்தின் புவியியல் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது.
இத்தகைய புள்ளிவிவரங்கள் எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு பல்வேறு வகைகளில் உதவக்கூடியவை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் தமிழ் பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பது அதிகாரப்பூர்வமாகப் பதிவானால், அந்த சமூகத்தின் தேவைகளைப் புரிந்துகொள்ள அரசாங்க நிறுவனங்களுக்கும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் அது உதவியாக அமையும். தமிழ் மொழிக் கல்வி, சமூக சேவைகள், முதியோர் சேவைகள், நூலக வளங்கள், மொழிபெயர்ப்பு சேவைகள், கலாசார நிகழ்ச்சிகள், இளைஞர் திட்டங்கள், சமூக மையங்கள் போன்ற பல்வேறு தேவைகளுக்கான திட்டமிடலில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனவே கணக்கெடுப்பில் தமிழ் மொழியையும் தமிழ் அடையாளத்தையும் சரியாகப் பதிவு செய்வது ஒரு தனிநபரின் தகவலை மட்டும் பதிவு செய்வதல்ல. அது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் சமூக இருப்பை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் செயற்பாடாகும். குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு இதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
அவுஸ்திரேலிய சமூகத்தில் தமிழர்

அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் இன்று அவுஸ்திரேலிய சமூகத்தின் முழுமையான அங்கங்களாக உள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்கின்றனர்; பல்வேறு தொழில்களில் பணியாற்றுகின்றனர்; அவுஸ்திரேலிய சமூகத்தின் பொருளாதார, கல்வி, அறிவியல், மருத்துவ மற்றும் கலாசார வளர்ச்சியில் பங்களிக்கின்றனர். அதே நேரத்தில் அவர்களின் குடும்பப் பின்னணியில் தமிழ் மொழியும் பண்பாடும் தொடர்ந்து வாழ்கின்றன.
இந்த தலைமுறையினர் தங்களது தமிழ் அடையாளத்தைத் தெளிவாகப் பதிவு செய்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இன்று நாம் பதிவு செய்யும் தரவுகள் நாளைய தலைமுறைக்கு தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் பதிவாக மாறும்.
ஒரு மொழி ஒரு தலைமுறையில் மட்டும் வாழ்வதில்லை. அது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும்போதுதான் அதன் தொடர்ச்சி உறுதியாகிறது.
தமிழ் வீட்டில் பேசப்பட வேண்டும். தமிழ் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். தமிழ் இலக்கியம், கலை, இசை, வரலாறு மற்றும் பண்பாடு அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். அதேபோன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் தமிழ் மொழியும் தமிழ் பூர்வீக அடையாளமும் சரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இங்கு மற்றொரு முக்கியமான விடயத்தையும் வலியுறுத்த வேண்டும். கணக்கெடுப்பில் சரியான தகவலை வழங்குவது எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பது அல்ல. அது எந்த ஒரு அரசியல் கருத்தையும் வெளிப்படுத்துவதுமல்ல.

மாறாக, நாம் யார், எந்த மொழியைப் பேசுகிறோம், எமது பண்பாட்டு பூர்வீகம் என்ன என்பதற்கான உண்மையான சமூகப் பதிவை உருவாக்குவதே அதன் நோக்கம். அவுஸ்திரேலியாவின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்கும், பல்வேறு சமூகங்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அவசியமானவை.
தமிழ் அடையாளத்தைப் பெருமையுடன் பதிவு செய்ய வேண்டும். சமூக அமைப்புகள் இந்த விழிப்புணர்வை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு சமூகத்தின் பலம் அதன் எண்ணிக்கையில் மட்டும் இல்லை; அந்த எண்ணிக்கை சரியாகப் பதிவாகியிருப்பதிலும் உள்ளது.
அவுஸ்திரேலியாவின் பன்முக சமூகத்தில் தமிழர்களின் குரல் தெளிவாக ஒலிக்க வேண்டுமெனில், நமது இருப்பு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களிலும் தெளிவாகத் தெரிய வேண்டும். தமிழ் எமது மொழி. தமிழ் எமது பண்பாட்டு அடையாளம்.
அந்த அடையாளம் அவுஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ பன்முகத்தன்மைப் பதிவிலும் தெளிவாகப் பிரதிபலிக்கட்டும்.
![]()