ஏவுகணைகள் சரியான நேரத்தில் வருகின்றன: விவசாயிகளுக்கு உரங்கள் ஏன் வருவதில்லை?… ஐ.நா.வில் முழங்கிய நேபாள இளம் பிரதமர்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா


(ஒரு சிறிய இமயமலை நாட்டின் குரல், உலக அரசியலின் மைய விவாதத்துக்குள் கொண்டு வந்ததுடன், உலகின் கூரையிலிருந்து வந்த எச்சரிக்கையாக நேபாள பிரதமரின் உரை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது)
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் உலகின் வல்லரசுகளின் தலைவர்களின் உரைகளே பொதுவாக சர்வதேச ஊடகங்களின் முக்கிய கவனத்தைப் பெறும். ஆனால் 2026 செப்டெம்பர் 24 அன்று நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 81ஆவது கூட்டத்தொடரில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
ஆற்றிய உரை, ஒரு சிறிய இமயமலை நாட்டின் குரலை உலக அரசியலின் மைய விவாதத்துக்குள் கொண்டு வந்தது.
உலகின் கவனத்தை ஈர்த்த வரிகள்:
நாம் வெப்பமாக்காத காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும், நாம் தொடங்காத போர்களின் விளைவுகளையும் நாம் அனுபவித்து வருகிறோம். இதன் மூலம் பாலேன் ஷா நேபாளத்தின் பிரச்சினையை மட்டும் பேசவில்லை. காலநிலை மாற்றம், போர், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், உணவுப் பாதுகாப்பு, எரிபொருள் பற்றாக்குறை, வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரச் சுமை ஆகியவற்றை ஒரே கேள்வியாக அவர் ஐ.நா. முன் வைத்தார்.
இமயமலையிலிருந்து வந்த எச்சரிக்கையாக அவர் உரை நிகழ்த்தினார். பாலேன் ஷாவின் உரையின் பின்னணியில் நேபாளம் சந்தித்த பேரழிவான வெள்ளமும் நிலச்சரிவுகளும் முக்கியமானவை. குறிப்பாக ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட போதேகோஷி–திரிசூலி வெள்ளப் பேரழிவில் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், 6,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் நேபாள அரசு மற்றும் செய்தி அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. இந்த பேரழிவின் பொருளாதாரப் பாதிப்பும் மிகப்பெரியது.
இமயமலை உலகின் கூரை என்று அழைக்கப்படும் பிராந்தியத்திலிருந்து வந்த பாலேன் ஷா, பனிப்பாறைகள் உருகுதல், மலைச்சரிவுகள், திடீர் வெள்ளங்கள், விவசாய உற்பத்தி பாதிப்பு ஆகியவை இனி எதிர்கால அச்சுறுத்தல்கள் மட்டுமல்ல; அவை ஏற்கனவே மக்களின் வாழ்வை மாற்றிக் கொண்டிருக்கும் உண்மைகள் என்று வலியுறுத்தினார்.

அவர் கூறிய முக்கிய கருத்து காலநிலை மாற்றத்திற்கு அதிகமாக பங்களிக்காத நாடுகளே அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்கின்றன என்பதாகும். நேபாளத்தின் நிலை இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக முன்வைக்கப்படுகிறது. உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு அதன் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தாலும், இமயமலைப் பகுதியில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள், பனிப்பாறை உருகுதல் மற்றும் தீவிரமான மழைப்பொழிவு போன்றவை அதன் மக்களுக்கு நேரடியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
ஏவுகணை சரியான நேரத்தில் வருகின்றன
பாலேன் ஷாவின் உரையில் உலகளவில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பகுதி இதுதான். ஒரு விவசாயிக்கு தேவையான உரம் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. சாலை அமைப்பதற்கு தேவையான வளங்கல் கிடைப்பதில்லை. குடும்பங்கள் பயன்படுத்த வேண்டிய சமையல் எரிபொருளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
ஆனால் அதே உலகில் கண்டம் கடந்து செல்லும் ஏவுகணைகள் சரியான நேரத்தில் வந்து சேருகின்றன. துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் எல்லைகளைக் கடந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி, தங்கள் இலக்கை அடைகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர் அவர் ஆற்றிய உரை மிகவும் வலுவானதாக அமைந்தது. போருக்கான தளவாடங்களில் குறைபாடற்ற உலகையும், உணவுக்கான தளவாடங்களில் சீர்குலைந்த உலகையும் நாம் உருவாக்கியுள்ளோம். இது வெறுமனே ஒரு அரசியல் வாசகம் அல்ல, உலகப் பொருளாதார அமைப்பின் முன்னுரிமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியாக அது அமைந்தது.
போர் நடைபெறும் போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவ உபகரணங்களை விரைவாக நகர்த்துவதற்கான சர்வதேச கட்டமைப்புகள் செயல்படுகின்றன. ஆனால் அதே வேகத்தில் உணவு, உரம், எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகள் ஏன் மக்களிடம் சென்றடைவதில்லை என்பதே பாலேன் ஷாவின் கேள்வி.
இது நேபாள பிரச்சினை மட்டுமல்ல

பாலேன் ஷா தனது உரையில் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். நேபாளத்தின் பிரச்சினையை தனிப்பட்ட தேசியப் பிரச்சினையாக அவர் முன்வைக்கவில்லை. இது நேபாளத்தின் தனிப்பட்ட துரதிர்ஷ்டம் அல்ல என்று கூறிய அவர், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளையும் குறிப்பிட்டார்.
இந்த நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியான அரசியல் அல்லது பொருளாதார அமைப்புகளைக் கொண்டவை அல்ல. ஆனால் காலநிலை மாற்றம், எரிபொருள் விலை, உணவுப் பாதுகாப்பு, உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பு மற்றும் சர்வதேச மோதல்களின் மறைமுக விளைவுகள் ஆகியவற்றால் அவை வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்படுகின்றன.
இதனால் பாலேன் ஷாவின் உரை ஒரு நாட்டின் பேரழிவு குறித்த இரங்கல் உரையாக மட்டுமின்றி, வளர்ந்து வரும் நாடுகளின் பொதுவான பிரச்சினையை வெளிப்படுத்தும் உரையாக மாறியது.
அத்துடன் போர் நடக்கும் இடத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் கருத்து தெரிவித்தார். பாலேன் ஷாவின் கருத்தின் மற்றொரு முக்கிய அம்சம், போரின் விளைவுகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ளது. ஒரு நாடு போரில் ஈடுபடாமல் இருந்தாலும், அந்தப் போரின் பொருளாதார விளைவுகளிலிருந்து அது தப்ப முடியாது.
எரிபொருள் விலை உயரலாம். உரங்களின் விலை அதிகரிக்கலாம். கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படலாம். உணவுப் பொருட்களின் விலை உயரலாம். மின்சார உற்பத்திக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படலாம். சர்வதேச வர்த்தகப் பாதைகள் சீர்குலையலாம்.
அதாவது, போரின் குண்டுகள் ஒரு நாட்டின் மீது விழாமல் இருந்தாலும், அதன் பொருளாதார அதிர்வுகள் அந்த நாட்டின் விவசாயி, தொழிலாளி, சிறு வணிகர் மற்றும் சாதாரண குடும்பத்தைத் தாக்கலாம். இதைத்தான் பாலேன் ஷா நாம் தொடங்காத போர்களின் விளைவுகளையும் நாம் அனுபவிக்கிறோம் என்ற கருத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
இளம் தலைமுறை அரசியல் குரல்
பாலேன் ஷாவின் உரைக்கு கிடைத்த கவனத்திற்கு அவரது தலைமுறைப் பின்னணியும் ஒரு காரணமாக அமைந்தது. அவர் 36 வயதில் நேபாளத்தின் பிரதமராக உள்ளார். ஐ.நா. பொதுச் சபையில் தனது முதல் உரையை நிகழ்த்திய அவர், இளைஞர்கள் முன்வைக்கும் புதிய அரசியல் எதிர்பார்ப்புகளையும் குறிப்பிட்டார்.
நேர்மை, பொறுப்புக்கூறல், வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் அரசின் செயல்திறன் ஆகியவை இளம் தலைமுறையின் முக்கியக் கோரிக்கைகள் என்று அவர் கூறினார். ஆனால் தனது இளம் வயதையே உரையின் மையமாக்காமல், நேபாளம் எதிர்கொள்ளும் காலநிலைப் பேரழிவையும் உலக ஒழுங்கின் முரண்பாடுகளையும் முன்னிறுத்தியதே அவரது உரையின் தனித்துவமாக அமைந்தது.
ஆயுதங்களை நகர்த்துவதற்கு விரைவான சர்வதேச அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் விவசாயியின் உற்பத்தியைப் பாதுகாக்கும் உரம் மற்றும் எரிபொருளை விநியோகிப்பதில் தடைகள் உள்ளன. போர் மற்றும் பாதுகாப்புக்காக மிகப்பெரிய தொகைகள் செலவிடப்படுகின்றன.

அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான நிதி உதவி இன்னும் போதுமானதாக இல்லை என்று நேபாளம் போன்ற நாடுகள் வலியுறுத்துகின்றன. இதனால் பாலேன் ஷாவின் உரை, உலக அரசியலின் அடிப்படை முன்னுரிமைகள் குறித்து ஒரு விவாதத்தைத் தொடங்கியுள்ளது. தனது உரையின் இறுதியில், அடுத்த எச்சரிக்கை இமயமலையின் உச்சியிலிருந்து வரும்போது உலகம் அதைக் கேட்கவும், அதற்கேற்ப செயல்படவும் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தை பாலேன் ஷா முன்வைத்தார். காலநிலை மாற்றத்துக்கு எதிரான தயார்நிலை, வலுவான கட்டமைப்புகள், காப்பீடு, தொழில்நுட்பம், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.
அதனால்தான் அவரது உரை கவனத்தைப் பெற்றது. அது ஒரு வல்லரசின் சக்தியைப் பற்றிய உரை அல்ல. ஒரு சிறிய நாட்டின் அனுபவத்திலிருந்து உலக அமைப்பின் பெரிய முரண்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய உரை. பாலேன் ஷாவின் கேள்வி இறுதியில் ஒரு அரசியல் கேள்வியாக மட்டுமல்லாமல், மனிதநேயக் கேள்வியாகவும் மாறுகிறது. ஆயுதங்கள் உலகின் எந்த மூலையையும் விரைவாகச் சென்றடைய முடியும் என்றால், மனிதனின் உணவு, எரிபொருள், உரம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் ஏன் அதே வேகத்தில் சென்றடையக் கூடாது, இதுவே அவரது ஐ.நா. உரையின் முக்கிய செய்தியாக சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
![]()