முச்சந்தி
சுவிஸ் பேச்சுவார்த்தை தோல்வியா?… மிரட்டல் அரசியலும் ராஜதந்திர சோதனையும்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரான் தூதுக்குழு பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேறுவது மட்டுமே ஒரு ஒப்பந்தத்தின் முடிவைக் குறிக்காது. பல சந்தர்ப்பங்களில் இது அரசியல் அழுத்தங்களை சமாளிக்கவும், எதிர் தரப்பிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பவும் பயன்படுத்தப்படும் இராஜதந்திர உத்தியாகவும் இருக்கலாம் என்றும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது)
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் அமெரிக்கா–ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டதாகக் கூறப்படும் கடுமையான எச்சரிக்கைச் செய்தியைத் தொடர்ந்து, ஈரானிய தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை அறையை விட்டு வெளியேறிய சம்பவம், இந்தச் சந்திப்புகள் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இருப்பினும், ஈரான் தூதுக்குழு பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேறுவது மட்டுமே ஒரு ஒப்பந்தத்தின் முடிவைக் குறிக்காது. பல சந்தர்ப்பங்களில் இது அரசியல் அழுத்தங்களை சமாளிக்கவும், எதிர் தரப்பிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்பவும் பயன்படுத்தப்படும் இராஜதந்திர உத்தியாகவும் இருக்கலாம்.

இந்தச் சம்பவத்தின் மையத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஆதிக்கம் குறித்த நிலைப்பாடுகளும், ஈரானின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய செல்வாக்கைப் பாதுகாக்கும் நோக்கமும் உள்ளன. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் நடவடிக்கைகள், ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு, மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவப் பங்கு ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தின் முக்கிய காரணிகளாக உள்ளன.
ட்ரம்ப்பின் ராணுவ அச்சுறுத்தல்:
அமெரிக்க அதிபர் டொநாட்டு ட்ரம்ப் விடுத்த கடுமையான ராணுவ அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் அமெரிக்கக் குழுவுடன் நடந்து வந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை அறையை விட்டு ஈரானிய தூதுக்குழுவினர் கோபத்துடன் வெளியேறும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக தற்போது வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாட்டு மத்தியஸ்தர்களுடன் ஈரானியக் குழுவினர் முக்கியப் பேச்சுவார்த்தையில் அமர்ந்திருந்த அதே நேரத்தில், அமெரிக்காவில் இருந்தபடி அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட மிரட்டலே இதற்கு நேரடிக் காரணமாகும்.
அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட தனது பதிவில், லெபனானில் பெரும் தொல்லைகளைக் கொடுத்து வரும் தங்களது ‘நிழல்’ (Proxy) அமைப்பான ஹிஸ்புல்லாவை ஈரான் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் அமைதியைக் குலைப்பதை நிறுத்தவில்லை என்றால், கடந்த வாரம் நாங்கள் ஈரானைத் தாக்கியதை விடவும் மிகக் கொடூரமாக மீண்டும் தாக்குவோம். அதுமட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணையை நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம். மீறி நீரிணையை மூட நினைத்தால், ஈரானிய தூதுக்குழுவினர் சொந்த நாட்டிற்கு உயிரோடு திரும்ப மாட்டார்கள் என்று மிக அநாகரீகமான முறையில் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
அதிபர் ட்ரம்பின் இந்தத் தரம் தாழ்ந்த மிரட்டல் செய்தி பேச்சுவார்த்தை மேசைக்கு வந்ததும், ஈரானிய தூதுக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் காலிபாஃப் கடும் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அமெரிக்கர்களுடன் கை குலுக்கலையோ அல்லது கூட்டுப் புகைப்படத்தையோ அடியோடு மறுத்த காலிபாஃப், கத்தார் மத்தியஸ்தர்களுடன் அவசரமாக ஆலோசனை நடத்திவிட்டு, தனது குழுவினருடன் அரங்கிலிருந்து உடனடியாக வெளியேறினார்.
பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறும் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கர்கள் பேசும் போது வார்த்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். தங்களது மிரட்டல்களுக்குப் பணிய ஈரான் ஒன்றும் சாதாரண நாடு அல்ல. எங்கள் நாட்டு ராணுவப் படைகள் அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முற்றிலும் வேறு வடிவில் எதிர்கொள்ளத் தயாராக உள்ளன. அவர்கள் வெறும் வாயில் பேசுவார்கள், ஆனால் களத்தில் நாங்கள்தான் செயலில் காட்டுவோம், என முகமது பாகர் காலிபாஃப், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர். தெரிவித்தார்.

ஈரானிய தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தை அறையை விட்டு வெளியேறிய வீடியோ காட்சிகள் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலும் முறிவடையவில்லை என்று தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன:
இந்த சமாதான ஒப்பந்தத்தின் பின்னணியில் உழைக்கும் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாட்டு இராஜதந்திரிகள், இருதரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் திரைமறைவில் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
ஈரானுக்கு அவமானமா அழுத்தமா?
பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கத் தலைமைத்துவத்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் கடுமையான எச்சரிக்கை, ஈரானிய தரப்பில் அவமானமாகவும் அழுத்தமாகவும் பார்க்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக, எந்த ஒரு நாட்டின் பிரதிநிதிகளும் தங்களது தேசிய மரியாதைக்கு சவாலாகக் கருதப்படும் கருத்துக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, ஈரானியக் குழுவினர் வெளியேறிய முடிவு, சர்வதேச அரங்கில் தங்களது உறுதியை வெளிப்படுத்தும் அரசியல் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த நிகழ்வை பேச்சுவார்த்தை முழுமையான தோல்வி என்று உடனடியாக வரையறுப்பது அவசரமான முடிவாக இருக்கும். ஏனெனில், பேச்சுவார்த்தைகளின் அடிப்படை நோக்கங்கள் இன்னும் தீர்க்கப்படாத முக்கிய பிரச்சினைகளைச் சுற்றியே உள்ளன. லெபனானில் நிலவும் பாதுகாப்பு சூழல், பிராந்திய பதற்றத்தைக் குறைப்பது, ஈரானின் வெளிநாட்டு சொத்துக்களின் முடக்கம், பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியைச் சார்ந்த விவகாரங்கள் போன்றவை இரு தரப்பினருக்கும் முக்கியமானவை.
இந்த நிலையில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. சமீப ஆண்டுகளில் கத்தார், பல சர்வதேச மோதல்களில் வெற்றிகரமான இடைத்தரகராக செயல்பட்ட அனுபவம் கொண்டுள்ளது. அதேபோல், பாகிஸ்தானும் இஸ்லாமிய உலகத்துடனும் மேற்கத்திய நாடுகளுடனும் உறவுகளைப் பேணும் நிலையில் இருப்பதால், இரு தரப்பினருக்கும் இடையே பாலமாகச் செயல்படக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளது.

உண்மையில், இராஜதந்திர வரலாற்றைப் பார்த்தால், முக்கியமான பல ஒப்பந்தங்கள் கடுமையான கருத்து வேறுபாடுகள், தற்காலிக புறக்கணிப்புகள் மற்றும் பதற்றமான தருணங்களுக்குப் பிறகே எட்டப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டின் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கிய பேச்சுவார்த்தைகளும் பலமுறை முட்டுக்கட்டைகளை சந்தித்த பின்னரே வெற்றியடைந்தன. எனவே, ஒரு தற்காலிக வெளியேற்றம் பேச்சுவார்த்தையின் முடிவை குறிக்க வேண்டிய அவசியமில்லை.
அதே நேரத்தில், இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான உண்மையையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, மிரட்டல்களும் இராணுவ அழுத்தங்களும் சில நேரங்களில் பேச்சுவார்த்தை செயல்முறையை பலவீனப்படுத்தக்கூடும். எந்த ஒரு அமைதி முயற்சியும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே முன்னேற முடியும். ஒருபுறம் அழுத்தம் செலுத்தும் மொழியும் மறுபுறம் தேசிய பெருமிதத்தை முன்னிறுத்தும் அரசியலும் நிலவும்போது, உடன்பாட்டை எட்டுவது மிகவும் கடினமாகிறது.
ஈரானின் அரசியல் நிலைப்பாடு:
ஈரானின் பார்வையில், வெளிப்படையான அச்சுறுத்தலுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல் இருந்தால் அது உள்நாட்டில் பலவீனமாகக் கருதப்படலாம். அதேபோல், அமெரிக்க நிர்வாகமும் தனது கூட்டாளிகள் மற்றும் உள்நாட்டு அரசியல் ஆதரவாளர்களிடம் உறுதியான நிலைப்பாட்டைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். இதனால், இரு தரப்பினரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், மறுபுறம் பேச்சுவார்த்தை வாயில்களை திறந்தே வைத்திருக்க முயற்சிப்பதும் சாதாரணமான ஒன்றாகும்.

சுவிஸ் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதா்என்ற கேள்விக்கு தற்போதைய சூழலில் இலகுவாக பதிலை வழங்க முடியாது. பேச்சுவார்த்தை அறையிலிருந்து ஈரானியத் தரப்பு வெளியேறியது ஒரு கடுமையான அரசியல் எதிர்ப்பின் வெளிப்பாடாக இருந்தாலும், அவர்கள் இன்னும் சுவிட்சர்லாந்திலேயே தங்கி இருப்பதும், மத்தியஸ்த நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருவதும், உரையாடலுக்கான வாயில் இன்னும் மூடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
ஈரான் பேச்சுவார்த்தை குழுவினர் வெளியேறியது இந்த நிகழ்வின் தோல்வியின் அறிகுறியாக அல்ல; மாறாக, இராஜதந்திரத்தின் மிகவும் கடினமான மற்றும் பதற்றமான கட்டமாகக் கருதப்படலாம். அடுத்த சில வாரங்களில் இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புகிறார்களா என்பதுதான், இந்த முயற்சி உண்மையில் தோல்வியடைந்ததா அல்லது புதிய ஒப்பந்தத்திற்கு வழிவகுத்ததா என்பதை தீர்மானிக்கும்.

![]()