முச்சந்தி
ஓராண்டில் காசா போர்; உலகறிந்த இஸ்ரேலின் கொடூரங்கள்!…சுதந்திர பாலஸ்தீனமே இறுதித் தீர்வு !!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
(2023 அக்டோபர் 7, காலை 6.29… உலகத்தையே புரட்டிப்போட்ட சம்பவம் ஒன்று நடந்தது. அந்த நாளில்தான், காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்கள் சீறிப் பாய்ந்தன. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்)
கடந்த ஓராண்டில், இஸ்ரேலிய ஆட்சியின் உண்மையான தன்மையை உலகம் கண்டுள்ளது. காசாவில் இஸ்ரேல் எவ்வாறு கொடூரங்களை நிகழ்த்துகிறது என்பதை உலகம் தற்போது ஆதாரபூர்வமாக கண்டுள்ளது.
உலகறிந்த இஸ்ரேலின் கொடூரங்கள்:
பன்னிரு மாதங்களில் 45,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை – பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை – கொடூரமாக இஸ்ரேல் கொன்றுள்ளது.
இஸ்ரேலின் தலைவர்கள் இந்த இனப்படு கொலையை, குழந்தைகளைக் கொல்வதை, போர்க் குற்றங்களை மற்றும் அரசு பயங்கரவாதத்தை சட்டப் பூர்வமான தற்காப்பு என்று அழைக்கின்றனர்.
அவர்கள் மருத்துவமனைகள், குழந்தைகள் பள்ளிகள் மற்றும் பள்ளிகளை சட்டப்பூர்வமான இராணுவ இலக்குகள் என்றும் அழைக்கின்றனர்.
உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மற்றும் துணிச்சலான மக்களை, இனப்படுகொலைக்கு எதிரான அவர்களது போராட் டத்தை “யூத எதிர்ப்பு” என்றும் இஸ்ரேல் முத்திரை குத்துகின்றது.
ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்பு மற்றும் அவமானத்திற்கு எதிராக எழுந்து நின்ற ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களை அவர்கள் எப்போதும் பயங்கரவாதிகள் என்றே அழைக்கின்றனர்.
உலகத்தையே புரட்டிப்போட்ட ஹமாஸ் தாக்குதல் :
2023 அக்டோபர் 7, காலை 6.29… உலகத்தையே புரட்டிப்போட்ட சம்பவம் ஒன்று நடந்தது. அந்த நாளில்தான், காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இருபது நிமிடங்களில் 5,000 ராக்கெட்கள் சீறிப் பாய்ந்தன. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
இத் தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகிறது. மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கலைவதாக இல்லை. மாறாக, தீவிரமாகிக் கொண்டே போகிறது. தற்போது லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளை கதி கலங்க வைத்த, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய முதல் தாக்குதலுக்கு முந்தைய நாள் வரை, இப்படி நடக்கும் என யாருமே உணரவில்லை.உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் மொசார்ட் இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது. இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை என்பதுதான் உளவு அமைப்பின் பதிலாக இருந்தது. அந்த தாக்குதலின்போது கொல்லப்பட்டவர்கள் தவிர, சுமார் 250 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.
அதன் பின்னர் நவம்பரில் குறுகிய கால போர் நிறுத்தத்தின்போது பாதிப்பேர் விடுவிக்கப்பட்டனர். மீதிப்பேர் பற்றிய தகவல் இல்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த ஓராண்டில் எண்ணற்ற தாக்குதல்கள், மரணங்கள் அங்கே நிகழ்ந்திருக்கின்றன.
போரும் இரத்தக்களரியும்:
இன்றைய உலகில் நாம் காணும் போர்கள் மற்றும் இரத்தக்களரியின் வேர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றவர்களின் உரிமைகளை மீறியுள்ளனர். நாடுகளின் உரிமைகளை புறக்கணித்தது, பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை அமல்படுத்தியுள்ளனர். குறிப்பிட்ட குழுக்களை பலவீனமாகவும் வளர்ச்சியடையாமலும் வைத்தருந்தது மற்றும் தனிநபர்களின் உரிமைகளை புறக்கணித்தது ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை எனலாம்.
அநீதி, ஒடுக்குமுறை, பேராசை, வறுமை மற்றும் அறியாமை ஆகியவை எந்தவொரு பகுதியிலும் நிலவும் வரை, வன்முறையும் மோதலும் தொடரும். இத்தகைய குழப்பங்களின் மூல காரணங்களை நாம் எதிர்கொள்ளாவிட்டால், நமது குழந்தைகளின் எதிர்காலத்தை இருளில் இருந்தும் அழிவில் இருந்தும் காப்பாற்ற முடியாது.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றத்தால் மூன்றாம் உலகப்போர் மூளுமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஈரானின் பதிலடியால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் இஸ்ரேல் வியூகம் அமைக்கின்றமை பாரிய அழிவை நோக்கி செல்லவுள்ளது.
பாலஸ்தீன எழுச்சியில் ஹமாஸ்:
இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் சுருக்கம் தான் ஹமாஸ். மேற்கு கரையையும் காசா நிலப்பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் முயற்சிக்கு எதிரான முதல் பாலஸ்தீன எழுச்சி தொடங்கிய பின், 1987ல் ஹமாஸ் உருவானது.
2005ல் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஹமாஸ் அரசியலில் இறங்கியது. 2006ல் பாலஸ்தீன தேர்தலில் வெற்றி பெற்றது. அதிபர் முகமது அப்பாசின் பதா இயக்கத்துடனான மோதலை தொடர்ந்து அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்ட காசாவிலேயே அவர்கள் அரசியலில் வெற்றி பெற்றனர்.
அதன் பின்னர் இஸ்ரேலுடன் மூன்று பெரிய போர்களில் காசா ஈடுபட்டுள்ளது.
முதலில் காசா, தற்போது லெபனான்
அடுத்தது என்ன நடக்கும் என்ற பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களை கதி கலங்க வைத்திருக்கிறது. முதலில் காசா, அடுத்தது லெபனான், தற்போது ஏமன் என இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
அதாவது, காசாவில் இஸ்ரேலிய தாக்குதலை தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்கள், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பெரிய ஏவுகணை ஆளில்லா விமானத் தாக்குதல்கள் போர் பகைமையை அதிகரித்துள்ளது.
லெபனான் தரை வழி தாக்குதல் :
தற்போது லெபனான் மீது இஸ்ரேலிய தரை வழி தாக்குதலும் தொடங்கி விட்டது. இதற்கு ஈரான் பதிலடி கொடுக்க துவங்கி விட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் இப்போதைக்கு முடிவடையாது என்பது ஈரான் பதிலடி மூலம் நிரூபணம் ஆகி விட்டது.
தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட இஸ்ரேலின் அனைத்து பகுதிகளையும் குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் இதற்கு தகுந்த விலை கொடுக்க வேண்டி வரும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து தாக்க அமெரிக்கா உதவியுள்ளது.
இந்த சண்டையில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க உறுதி அளித்துள்ளதுடன் ஆயுதங்களையும் வழங்கியுள்ளது.
ஹிஸ்புல்லாவுக்கு பின்னணியில் இருந்த ஈரான் நேரடியாக களம் இறங்கிய நிலையில், ரஷ்யா ஈரானுக்கு உதவிக்கு களம் இறங்கலாம்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக நட்பு நாடுகள் இருதரப்பிலும் கைகோர்க்க துவங்கினால், மூன்றாம் உலகப்போர் மூளுவும் வாய்ப்பு இருக்கலாம் எனவும் சில ஊகங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐநா சபையில் சில தினங்கள் முன்பு ஆற்றிய உரையில் , மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
சுதந்திர பாலஸ்தீனமே தீர்வு :
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கினாலும், சர்வதேச அரங்கில் இஸ்ரேல் தோல்வியடைந்துவிட்டது. தனது காட்டுமிராண்டித்தனமான வன்முறையால் இஸ்ரேல் எதையும் சாதிக்க முடியவில்லை. இயல்பாகவே, கடந்த சில நாட்களாக லெபனானில் இஸ்ரேல் நடத்திய அரசு பயங்கரவாதம், தொ டர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வைப் பறித்துள்ளது.
இதற்கு பதிலடி இல்லாமல் போக முடியாது. இந்த பயங்கர பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய முயற்சிகளை முறியடித்த, மனித உரிமைகளின் காவலர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் கொடியவர்கள்தான் அனைத்து விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
மேற்கு ஆசியாவிலும் உலகிலும் 70 ஆண்டு கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி அனைத்து பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதுதான்.
பாலஸ்தீனத்தின் அனைத்து மக்களும் – தாய்நாட்டில் வசிப்பவர்களும், புலம்பெயர்ந்தவர்களும் – தங்கள் எதிர் காலத்தை தீர்மானிக்க வேண்டும்.
இந்த வழிமுறையின் மூலம் நிலையான அமைதியை அடைய முடியும்.
இனவாதம் மற்றும் இனவெறியின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் ஒரே நிலத்தில் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ முடியும் என்பதே தீர்வாகும்.